அத்தியாயம் 1

காந்தி இட்ட தீ!

ப்பொழுதுதான் காந்தி யுகம் பூத்திருந்தது. ரெளலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததன் மூலம் மகாத்மா காந்தி தேசமெங்கும் சுதந்திரத் தீயை மூட்டிவிட்டார். அடிமைப்பட்ட மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தி மகாத்மாவின் `அஹிம்சை’ என்ற வரம்பையும் மீறிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரவர்க்கம் மனிதத்தன்மையை இழந்து மிருகத்தனமான அடக்குமுறைகளைக் கையாண்டது. ஜாலியன் வாலா பாக், பஞ்சாப் படுகொலை முதலிய சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களெல்லாம் அந்தக் காலத்தில்தான் நடந்தன.

காங்கிரஸ் மகாசபை இன்றும் மட்டும் கெட்டுப்போய்விடவில்லை; அன்றும் ஓரளவு கெட்டுப்போய்தான் இருந்தது. அதற்குக் காரணம், சமாதான முறையில் வெள்ளைக்காரரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, கெளரவம்மிக்க ராஜ்யபாரம் வகிப்பதோடு, தாங்க முடியாத பணபாரம் வகிக்கும் தங்கள் ஏகபோக உரிமையையும் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற உன்னத நோக்கத்துடன் சில பண மூட்டைகளும், பதவி வேட்டைக்காரர்களும் அப்பொழுதே அதில் சேர்ந்திருந்ததுதான்!

அந்த மகானுபாவர்கள் காந்திஜியின் எதிர்பாராத ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கண்டு முணுமுணுத்தனர். அதற்கேற்றாற்போல் மகாத்மாவின் மனமும் மேற்கூறிய படுகொலைகளுக்குப் பின் சிறிது கலங்கிவிட்டது. “நான் பெரும் பிழை செய்துவிட்டேன்!” என்று சொல்லி அவர் மனம் வருந்தினார். ஆனால் வீறுகொண்ட மக்களின் உள்ளம் அதைக் கேட்டு வீழ்ச்சியடையவில்லை; மகாத்மாவின் பெரும் பிழையை அவர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதன் பயனாக காந்தி மகான் காங்கிரஸின் தனிப்பெருந்தலைவர் ஆனார்.

அதே வருடத்தில்தான் நானும் சட்டப் பரீட்சையில் தேறிவிட்டு தொழில் அனுபவம் பெறுவதற்காக, பாரிஸ்டர் பரந்தாமனிடம் அடைக்கலம் புகுந்திருந்தேன். நான் தொழில் அனுபவம் பெற்றுப் பின்னால் பெரும் பொருள் ஈட்டப்போவதை என் தாயார் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் பெண்ணாய்ப் பிறந்த தோஷத்தின் காரணமாக, அவர்கள் பிறந்ததிலிருந்து கல்யாணமாகும் வரை தந்தையின் உதவியை எதிர்பார்க்கவேண்டிய நிலையில் இருந்தார்கள்; கல்யாணமான பின் கணவனின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்; கணவனைப் பிரிந்த பின் பிள்ளையின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்! – பிள்ளையைப் பிரிந்தால், ‘பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் படியளக்கும் பெருமான் இருக்கவே இருக்கிறார்!’ என்று இருப்பார்களோ என்னவோ!

நல்லவேளையாக, என் தகப்பனார் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமானை நம்பி எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போகவில்லை. ‘அவனவன் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவனவனே காரணம்’ என்னும் கொள்கையை, தம் கடைசி மூச்சு நிற்கும் வரை கடைப்பிடித்து வந்தவர் அவர். அதன் பயனாக நிலமும் நீரும், வீடும் வாசலும், நகையும் நட்டுமாக நாலைந்து லட்சத்துக்குக் குறையாமல் சேர்த்துவைத்து, சோம்பேறித்தனத்திலுள்ள சுகத்தை அவர் எங்களுக்குக் காட்டிவிட்டுப் போயிருந்தார். அதைக்கொண்டுதான் என்னையும் என் தங்கையையும் என் தாயார் யாதொரு சிரமமுமில்லாமல் இத்தனை நாட்களும் பாதுகாத்துவந்தார்கள். இப்போது அந்தச் சொத்தில் பெரும் பகுதி கரைந்துவிட்டது. எஞ்சி இருந்தவை நாங்கள் வசித்துவந்த வீடும், என் தாயார், தங்கை இவர்கள் அணிந்திருந்த கொஞ்சநஞ்சம் நகைநட்டுகளும்தான்.

இந்த நிலையில் பெற்றவர்களை காலாகாலத்தில் பீடிக்கும் கவலை என் தாயாரையும் பீடித்தது. அந்தக் கவலை, எனக்கும் தங்கை சித்ராவுக்கும் தான் கண்ணை மூடுவதற்குள் எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணிவைத்துவிட வேண்டும் என்பதே!

இதற்காக எங்கள் வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் என் தாயார் எங்களுடைய கல்யாண விஷயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்துக்கொண்டே இருப்பார்கள். “எங்கேயாவது நல்ல பையனா இருந்தால் சொல்லுங்களேன்?” என்பார்கள் ஒருவரிடம். “எங்கேயாவது நல்ல பெண்ணா இருந்தால் சொல்லுங்களேன்?” என்பார்கள் இன்னொருவரிடம். எல்லாம் பேசி முடிந்து, கடைசியாக அவர்களை வழியனுப்பும்போது, “ஏழையை மறந்துவிடாதீர்கள்; ஞாபகத்தில் வையுங்கள்” என்பார்கள் உருக்கமுடன். அவர்களோ, “ஆகட்டும் அம்மா, மறக்கமாட்டோம்” என்று சொல்லிவிட்டுப் போய், வேண்டுமென்றே மறந்துவிடுவார்கள்!

யாரும் வராமலிருக்கும்போதாவது என் தாயார் எங்கள் கல்யாண விஷயத்தைப் பற்றிக் கொஞ்சமாவது மறந்திருப்பார்கள் என்கிறீர்களா? – அதுதான் கிடையாது – “எந்தப் புண்ணியவான் வருவானோ, எந்தப் புண்ணியவதி வருவாளோ?” என்று தமக்குத்தாமே சொல்லிக்கொண்டவண்ணம் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார்கள்.

இதற்கு மத்தியில் “அவர் இருந்திருந்தால் எனக்கு இந்தக் கவலையே இருந்திருக்காது!” என்று அக்கம்பக்கத்தில் சொல்லி, நீர் மல்கும் கண்களை அடிக்கடி முந்தாணையால் துடைத்துவிட்டுக்கொள்வார்கள்.

இருந்தாற்போலிருந்து என் தாயாரின் கவலை சிலசமயம் உச்ச நிலையை அடைந்துவிடும். அம்மாதிரி சமயங்களில் அவர்களுடைய பக்திக்கு எத்தனையோ நாட்களாகப் பாத்திரமாகியிருந்த பகவானின் தலைகூட உருளுவதுண்டு. “பாழும் தெய்வந்தான் சதி செய்துவிட்டதே! உலகத்தில் அவரைவிட வயதானவர்களெல்லாம் இன்னும் உயிரோடு இருக்கவில்லையா?” என்று அங்கலாய்த்துக்கொள்வார்கள்.

ஒருநாள் அவ்வாறு அங்கலாய்த்துக் கொண்டபோது, “ஆமாம், அம்மா! அப்பா இறந்த பிறகு அவரைவிட வயதானவர்களெல்லாம் இந்த உலகத்தில் ஏன் இன்னும் இருக்கிறார்கள் என்று எனக்குக்கூடத் தெரியவில்லை!” என்றாள் தங்கை சிரித்துக்கொண்டே.

“அட, பாவமே! அவர்களெல்லாம் அப்பாவைப் பின்பற்றி இருக்கவேண்டுமா  என்ன?” என்றேன் நான்.

“அதற்குச் சொல்லவில்லை நான். அவர்களைப்போல் உங்கள் அப்பாவும் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கக் கூடாதா, என்றுதான் சொல்கிறேன்!”

“அதை இப்போது சொல்லி என்ன அம்மா பிரயோசனம்? அப்பா இருக்கும்போது சொல்லியிருந்தால் ஒருவேளை அவர் இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டுப் போயிருக்கலாம்!” என்றாள் சித்ரா.

“அப்போது ஞாபகம் இருந்திருக்காது!” என்றேன் நான்.

“உங்களுக்கு எல்லாம் வேடிக்கையாயிருக்கிறது, என் கவலை எனக்கல்லவா தெரியும்?”

“என்ன கவலை, அம்மா? – என்னிடம் சொல்லக் கூடாதா?” என்றாள் சித்ரா, ஏதும் அறியாதவள்போல.

“இந்த வயதிலே எனக்கு வேறென்ன கவலையிருக்கும்? நாலு பேரைப்போல உங்களுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவைக்க முடியவில்லையே என்ற கவலைதான்!”

“அதாவது, உங்களைப் பிடித்திருக்கும் கவலை எங்களைப் பிடிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள்! – அப்படித்தானே?” என்றேன், நான்.

“இல்லை, செல்வம்! காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்கொண்டு நீங்கள் இருவரும் கவலையில்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்!”

“அதற்கு நான் ஒரு யோசனை சொல்லட்டுமா, அம்மா?”

“என்ன யோசனை?”

“எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணாமல் இருங்கள்; கவலையே இருக்காது!” என்றேன் நான்.

“நல்ல யோசனைதான், போ!” என்று முகத்தைச் சுளித்த தாயார், திடீரென்று எதையோ கண்டுபிடித்துவிட்டவர்களைப்போல, “உங்கள் எண்ணமும் எனக்குத் தெரியும்” என்றார்கள் புன்னகையுடன்.

“என்ன தெரியும், அம்மா?” என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டோம். “காலம் கெட்டுப்போச்சோ இல்லையோ, நமக்குப் பெரியோர்களாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாம் என்பது உங்கள் எண்ணமாயிருக்கும்!”

“காலம் ஒருநாளும் கெட்டுப்போகாது, அம்மா! கெட்டுப்போவதாயிருந்தால் நாம்தான் கெட்டுப்போக வேண்டும்!” என்றேன் நான்.

“பின்னே யார் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டுமாம்?” என்றாள் சித்ரா, என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிக்கொண்டே.

“போடி, போ! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு, நீ கற்ற வித்தைகளையெல்லாம் என்னிடம் காட்டுகிறாயா? – என்னமோ, உன்னைப்போல நான் அவ்வளவு தூரம் படித்திராவிட்டாலும், உனக்குத் தெரிந்திருப்பதில் பாதியாவது எனக்குத் தெரிந்திருக்காதா?”

“தெரிந்ததைச் சொல்லுங்களேன்!”

“அசாத்தியத் துணிச்சலும், எதையும் ஆற அமர யோசித்துப் பார்ப்பதற்கு வேண்டிய பொறுமையும் இல்லாத நாளிலே – வாழ்க்கையின் கஷ்டநஷ்டங்களைப் பற்றி அறியாத வாலிபப் பருவத்திலே – இன்பம் ஒன்றையே நாடும் இளமையிலே – ஆணுக்குப் பெண்ணைக் கண்டதும், பெண்ணுக்கு ஆணைக் கண்டதும் ஈனத்தனமான ஓர் இனக்கவர்ச்சி ஏற்படுவதுண்டுதான்! அதற்குக் காரணம், அநேகமாக அவரவர்களுடைய அழகாய்த்தானிருக்கும். அந்த அழகு எப்படி நிலையற்றதோ, அதே மாதிரி அகத்தைத் தொடாத அவர்கள் அன்பும் நிலையற்றது என்பதை அறியாமல் அதைக் காதலென்றும் கீதலென்றும் சொல்லிக்கொண்டு, ‘எங்களுக்கு யாரும் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாம். நாங்களே பண்ணிக்கொண்டுவிடுகிறோம்!’ என்று இந்தக் காலத்து ஆண்களும் பெண்களும் சொல்கிறார்கள். அப்படிப் பண்ணிக்கொண்டுவிட்டால் தங்கள் வாழ்க்கை ஒரே ஆனந்த சாகரமாயிருக்கும் என்றும் அவர்கள் கனவு காண்கிறார்கள் – அந்த மாதிரி நீங்களும் கனவு காண்கிறீர்களாக்கும்?”

“இந்தக் காலத்து ஆண்களும் பெண்களும் மட்டும் என்ன, அம்மா? அந்தக் காலத்து ஆண்களும் பெண்களும்கூட அப்படித்தானே இருந்திருக்கிறார்கள்! – ராமனும் சீதையும், சத்தியாவனும் சாவித்திரியும், நளனும் தமயந்தியும், துஷ்யந்தனும் சகுந்தலையும், ஒருவரைப் பார்த்து ஒருவர் காதல்கொள்ளவில்லையா?”

“ஆமாம், அவர்களுடைய வாழ்க்கையெல்லாம் ஒரே ஆனந்த சாகரமாயிருந்ததாக்கும்! – நான் சொல்கிறேன் – காதல் கல்யாணமாகட்டும், காதல் இல்லாத கல்யாணமாகட்டும் – வாழ்க்கை என்பது எப்போதுமே கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பாதைதான்; கதைகளில் வேண்டுமானால் அது தார் போட்ட நாட்டுப் பாதையாய் இருக்கலாம் – ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவுமா?”

“அந்தக் காட்டுப் பாதையில் பிரயாணம் செய்யும் பாதசாரிகள், தங்கள் சிரமத்தை ஒன்றுபட்டுச் சகித்துக்கொள்வதற்காகவாவது அவர்களுக்குள் ஒருவிதமான அன்னியோன்னிய பாவம் இருக்க வேண்டாமா? – அதைத்தான் நாங்கள் காதல் என்கிறோம் – அதில் என்ன தப்பு?” என்று கேட்டுவிட்டு சித்ரா என் பக்கம் திரும்பி, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அண்ணா?” என்று கேட்டாள்.

“நான் என்ன சொல்லக் கிடக்கிறது? – எனக்கென்னமோ இந்தக் காதல், கல்யாணம் என்பதெல்லாம் வெறும் ‘பிரஜாபிவிருத்திக் கைங்கரியம்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது! அந்தக் கைங்கரியத்தில்தான் எத்தனையோ பேர் ஈடுபட்டிருக்கிறார்களே, நாமாவது தேசாபிவிருத்திக் கைங்கரியத்தில் இறங்கினால் என்ன?” என்று சொல்லிக்கொண்டே கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டுக்குக் கிளம்பினேன் நான்.

“ரொம்ப அழகுதான்!” என்று தாயார் சொன்னது, மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த என் காதில் விழுந்தது.

* * * * 

ன்றுமில்லாத திருநாளாய் அன்று பாரிஸ்டர் பரந்தாமன் ஒரே உற்சாகமாயிருந்தார். அவருடைய உற்சாகத்துக்குக் காரணம் என்னவென்று விளங்காமல் நான் தயக்கத்துடன் அவரை நெருங்கினேன். என்னைக் கண்டதும் “வா, தம்பி, வா! உனக்கு சமாசாரம் தெரியுமா?” என்று ஆரம்பித்தார் அவர்.

“என்ன சமாசாரம்?” என்றேன் நான், ஒன்றும் புரியாமல்.

“எல்லாம் நல்ல சமாசாரந்தான்! இன்று அந்தக் கலகக்காரனைப் பிடித்துச் சிறையில் போட்டுவிட்டார்களாம்!”

“எந்தக் கலகக்காரனை…?”

“அவன்தான், மிஸ்டர் காந்தி! ரெளலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகமோ, சண்டித்தனமோ செய்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே கவிழ்த்துவிடப்போகிறேன் என்றானே, அவனை! – அந்தப் பைத்தியக்காரனின் பேச்சையும் பாழாய்ப்போன ஜனங்கள் கேட்டுத்தொலைக்கிறார்களே, அதுதான் எனக்கு வேடிக்கையாயிருக்கிறது. இந்த நாட்டை ஆள வெள்ளைக்காரன் மட்டும் வந்திராவிட்டால் இவர்கள் அவரவர்களுடைய பெண்டாட்டியையாவது காப்பாற்றிக்கொண்டிருக்க முடியுமா? – இல்லை, கேட்கிறேன்.”

எனக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த மனிதரின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டால் என்ன என்றுகூடத் தோன்றிற்று. ஆனால் எந்தக் காந்தியை அவர் திட்டினாரோ, அந்தக் காந்தியின் தத்துவம் அதற்கு விரோதமாயிருக்கவே, பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு என் அதிருப்தியைத் தெரிவித்தேன். அதே சமயத்தில் ஆயிரமாயிரம் குரல்களிலிருந்து எழும்பிய “வந்தே மாதரம்!” என்னும் வானளாவிய ஓசை என் கவனத்தைக் கவர்ந்தது; விழுந்தடித்துக்கொண்டு மாடி வராந்தாவை நோக்கி ஓடினேன். தெருவில் மாபெரும் ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கையில் புத்தகங்களுடன் கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் பெருவாரியாக அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய முகத்திலும் வீராவேச உணர்ச்சி பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கூட்டத்துக்கு முன்னால் நிமிர்ந்த நடையுடனும் நேர்கொண்ட பார்வையுடனும் ஓர் இளைஞன் சென்றுகொண்டிருந்தான். அவன் கையில் இந்த மூவர்ணக்கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது. அவனுக்குப் பின்னால் சென்ற இருவர், “மகாத்மா காந்தியை உடனே விடுதலை செய்!” என்று அதிகாரத் தோரணையில் பொறிக்கப்பட்டிருந்த விளம்பரத்தைத் தாங்கிச் சென்றுக்கொண்டிருந்தனர்.’

நடுநடுவே, “மகாத்மா காந்திக்கு ஜே!” என்றும், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழ்க!” என்றும், “நமதே ராஜ்யம், அடைந்தே தீருவோம்!” என்றும் உச்சஸ்தாயியில் எழுந்த கோஷங்கள் செத்த பிணத்தையும் உயிர்ப்பிக்கக்கூடியவையா இருந்தன – அவ்வளவுதான்; அந்த நிமிஷமே இன்னதென்று விவரிக்க முடியாத ஒருவிதப் பரவசநிலையை நான் அடைந்துவிட்டேன். என்னுடைய உடலில் ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு நரம்பும் புடைத்து எழுந்து, ரோமங்கள் குத்திட்டு நின்றன. ஏதோ ஒரு தினுசான உணர்ச்சி என் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து, மின்னல் வேகத்தில் தேகம் முழுவதும் பரவிப் புல்லரிப்பை உண்டாக்கிற்று.

இந்தச் சமயத்தில் கோர்ட்டுக்குக் கிளம்பிய பரந்தாமன், “ஏன் செல்வம், அந்த ‘நியூஸன்’ஸைப் பார்க்க உனக்கு அருவருப்பாயில்லையா? – மகாத்மாவுக்கு ஜேயாவது, மண்ணாங்கட்டியாவது! அவன் மகாத்மாவாயிருந்தால் சர்க்காருக்கும் பொதுஜனங்களுக்குமிடையே கலகத்தை மூட்டிவிடும் துராத்மாவின் காரியங்களையெல்லாம் செய்துகொண்டிருப்பானா? – பார்க்கப்போனால், இந்தப் பயல்கள் இவ்வளவு சீக்கிரத்தில் அந்தக் காந்தி கைதான விஷயத்தைத் தெரிந்துகொண்டு கூச்சல் போடுவதற்குக்கூட அந்த வெள்ளைக்காரன்தானே காரணம்? அவன் வந்திராவிட்டால் தந்தியையாவது, பத்திரிகையையாவது இவர்கள் கனவிலும் கண்டிருக்க முடியுமா? – என்ன நன்றி கெட்டத்தனம், இந்தப் பயல்களுக்கு! இவர்களுக்குத்தான் சுயராஜ்யம் வேண்டுமாம், சுயராஜ்யம்!” என்று மேலும் மேலும் ஏதேதோ அடுக்கிக்கொண்டே போனார்.

என்னால் பொறுக்க முடியவில்லை. “நிறுத்துங்கள்! அந்த வெள்ளைக்காரன் இந்த நாட்டில் பொதுஜன செளகரியத்துக்கென்று செய்திருக்கும் ஒவ்வொரு காரியமும் உண்மையில் அவனுடைய ஏகாதிபத்தியத்தைக் காத்துக்கொள்வதற்காகச் செய்தவை என்பதை நான் அறிவேன். நீங்கள் சொல்வதுபோல அவை பொதுஜன நன்மைக்கென்றே ஏற்பட்டவையென்றாலும், அவற்றுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்தச் சாதனங்களை அமைத்தவன் யாராயிருந்தாலும் அவனை ‘வெள்ளைக்காரன்’ என்ற கண்கொண்டுதான் பார்க்க வேண்டுமா? நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் மனித சமுதாயம் தன் செளகரியத்துக்கென்று சாதித்துக்கொண்ட காரியங்கள் அவை என்று ஏன் நினைக்கக் கூடாது? தங்கச்சங்கிலி என்பதற்காக கைகளில் விலங்கு போட்டுக்கொள்ள நான் தயாராயில்லை; உங்கள் வேலையைப் பாருங்கள்!” என்று படபடப்புடன் கூறிவிட்டு, மடமடவென்று கீழே இறங்கினேன்.

அதே சமயத்தில் அந்த ஊர்வலத்தை நோக்கி ஒரு போலீஸ் லாரி விரைந்து வந்து நின்றது. அதிலிருந்து அதிகாரி ஒருவர் கீழே இறங்கினார். அவரைப் பின்தொடர்ந்து இருபது முப்பது போலீஸ்காரர்கள் குண்டாந்தடிகள் சகிதம் இறங்கினர். கூட்டத்துக்கு முன்னால் கொடி தாங்கியவண்ணம் தலைமை தாங்கிச் சென்ற இளைஞனை நெருங்கி, அந்த போலீஸ் அதிகாரி ஏதோ சொன்னார் – அவர் அந்த ஊர்வலத்தைக் கலைத்துவிடும்படி அவனிடம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் – அந்த இளைஞன் அதற்கு இசைந்ததாகத் தெரியவில்லை. உடனே தனக்குப் பின்னால் இருந்த போலீஸாரை நோக்கி, ‘உம்’ என்று உறுமினார் – அவ்வளவுதான்; ‘படார், படார்!’ என்ற சத்தம் என் காதைத் துளைத்தது.

அடுத்த நிமிஷம், அப்பப்பா! அந்தக் காட்சியை என்னால் சகிக்க முடியவில்லை; எங்கு நோக்கினும் இரத்தம், இரத்தம்! – ‘பெரிய மனிதன் தோரணை’யில் ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டிருந்துவிட்டுத் திறந்தேன் – அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துச் சென்ற இளைஞன் இரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தான்; அவன் கையில் இருந்த மூவர்ணக்கொடி ஒரே சிவப்பு வர்ணக் கொடியாக மாறியிருந்தது!

ஆனால், என்ன ஆச்சரியம்! அந்த நிலையிலும் அவன் வாய்வழியாக வந்த “வந்தே மாதரம், வந்தே மாதரம்” என்ற மெல்லிய ஒலி, அவனுடைய உயிரைப்போலவே அணுஅணுவாகத் தேய்ந்துகொண்டே சென்று மறைந்தது.

நான் மனிதனானேன். என்னை அறியாமலே என் வாய், “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டது; என்னை அறியாமலே என் கைகள் அந்த இளைஞன் விட்டுச் சென்ற தாயின் மணிக்கொடியைத் தாங்கின!

அவ்வளவுதான்; போலீஸார் ஓடோடியும் வந்து என்னைச் சூழ்ந்துகொண்டனர். மனிதனுக்காகச் சட்டம் என்பதை மறந்து, சட்டத்துக்காக மனிதனை வதைக்கும் அவர்களைக் கண்டதும் என்னுடைய எரிச்சல் எரிமலையாயிற்று. “அந்நியன் உங்களை என்றும் ஆளவேண்டுமென்றோ நீங்கள் சொந்த நாட்டுச் சகோதரர்களை இப்படி அடித்து நொறுக்குகிறீர்கள்? அவர்கள் கேட்கும் விடுதலை உங்களுக்கும் வேண்டாமா? கேவலம், இருபது முப்பது ரூபாய்ச் சம்பளத்துக்காக உங்களை, உங்கள் உயிரை, உங்கள் உரிமையை நீங்கள் விலைக்கு விற்றுவிடுவதா? – வெட்கக்கேடு! – எட்டிச் செல்லுங்கள்; எங்களை அடித்து நொறுக்குவதற்குப் பதிலாக அந்த வெள்ளைக்காரப் பயல்களை அடித்து நொறுக்குங்கள்!” என்று மேலே ஏதோ சொல்வதற்குள் என் தலையில் ஏக காலத்தில் பல அடிகள் விழுந்தன – நான் வெறியனானேன்! – அஹிம்சை என்னைக் கைவிட்டுவிட்டதோ, நான் அதைக் கைவிட்டுவிட்டேனோ, அது எனக்குத் தெரியாது, - அடிக்குப் பதில் அடி; இரத்தத்திற்குப் பதில் இரத்தம்!

ஆனால் அதன் பலன்? – மற்றவர்களைவிட வெகுசீக்கிரத்திலேயே நான் உணர்விழந்து கீழே விழுந்தேன்.

என் கண்கள் இருண்டன; அதற்குப் பின் என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? – யாருக்குத் தெரியும்?

(தொடரும்...)


விவாதங்கள் (3)