அத்தியாயம் 1

மாட்டேன்!” - என்றபடி வீட்டுக்குள் பதுங்கினாள் வசந்தி. மருண்ட பார்வையை மாயன் மேல் நிறுத்தி இருந்தாள்.

மாயனுக்கும் பலவிதமான யோசனைகள். எதை நம்புவது? எதையுமே நம்பாமல் என்ன செய்யப் போகிறோம்? குழம்பிப் போயிருந்தான். பாம்பும் பழுதும் புரியாமல் தவித்தான்.

சோணைமுத்துவைப் பார்க்க, அவனோ முகமலர்ச்சியோடு கைகளைப் பின்னால் கோர்த்தபடி நின்றிருந்தான். ஒருவேளை தன் பாரம் தீர்ந்த சந்தோசமோ?

திண்ணை நிறைய ஊர்க்காரர்கள் உட்கார்ந்திருந்தனர். சிறிய மர ஸ்டூலில் அய்யாச்சாமி பெரிய்யய்யா! மாயனும் சோணைமுத்துவும் மட்டும் வீட்டின் எதிரிலிருந்த வாவரங்காய்ச்சி மரத்தை அண்டக்குடுத்த மாதிரி நின்றிருந்தனர். கயிற்றுக் கட்டிலில் காப்பித் தம்ளரும், வெத்திலை பாக்கு ஒரு தட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. வந்தவர்கள் கொண்டு வந்த பலகாரப் பை விடைத்த காதுடன் வாசலோரமாக சுவரில் சாய்ந்து கிடந்தது.

யாரும் எதையும் தொடவில்லை.

“இதப் பார் மாயா” நாட்டாமை துவக்கியபோது,

“இல்ல பெர்சு. மாயக் கண்ணெ!” - இடைமறித்து திருத்தினான், சின்னராசு.

‘ஓட்டத்த தொவங்கறப்பவே காலத்தட்டற வேலதான ஆகாது’ என்று மனசுக்குள் கறுவிய நாட்டாமை, “மாயக் கண்ணனா, நல்ல மாயம் பண்ணுனப்பா” என்றவர், “சரி, இப்ப வேணும், வெளையணும்னுதே அல்லாரும் வந்துருக்கம். வில்லங்கம் எதுமில்லாம அனுப்பிச்சு விடப்பா” - ஓர் இடைவெளி தருவது போல நிறுத்தினார். அது அவருக்கும் தேவைப்பட்டது.

வசந்தியின் அய்யா, கருத்தக்கண்ணு, எல்லோருக்கும் நடுவில் உட்கார்ந்திருந்தார். முகங்கொடுத்துப் பேசப் பிரியப்படாதவர் போல மூசுமூசென்று மூச்சிறைந்து கொண்டிருந்தார்.

பூராவும் பெரிய சம்சாரிகள். இளவட்டங்கள் யாரும் இல்லை. உண்மையிலேயே சமாதானத்துக்குத்தான் வந்திருக்காங்களா?

மாயன் தரப்பிற்கு அய்யாச்சாமி பெரிய்யய்யா மட்டுமே உட்கார்ந்திருந்தார் - சோணைமுத்துவின் தகப்பனார். மாயன் மாங்காய் அடிப்புக்காக தோப்புக்குப் போயிருந்தான். பெரியகுளத்துக்காரர் குத்தகைத் தோப்பு. இங்கே வந்ததிலிருந்து அந்த வேலைதான் நாலைந்து நாளாக நிலைத்திருக்கிறது. அதுக்கும் இன்னிக்கு வேட்டு வந்துவிட்டது. இவர்கள் வராவிட்டால் இப்போ வத்தலக்குண்டு சந்தைக்குப் போகும் முடிவிலிருந்தான். வசந்தியின் பாதுகாப்புக்காகத்தான் மருகித் திரிய வேண்டி இருந்தது. அடைக்கலம் கொடுத்தவர் வீட்டிலேயே எத்தனை நாள்தான் ஓசிச்சோறு திங்கறது. வசந்தி தன்னுடைய தாமரைப்பூ பேசரியை சோணைமுத்துவின் தங்கச்சிக்கு போட்டு விட்டிருந்தாள். அதுவரை கொஞ்சம் விசனப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் குடும்பம் இவளது ஒட்டுதலைப் பார்த்து கரைந்து போனது.

“என்னாத்தடா ஊர்ல ஒலகத்துல செய்யாதத செஞ்சு போட்டீக. ம்? மனசுக்கு ஒப்புச்சு, ஓடி வந்துட்டீக. ஆம்பளையும் பொம்பளையுந்தான சேந்துருக்கீக! ஆடு மாடு கூடயா தொடுப்பு வச்சுக்கிட்டீக” - லட்சுமிப் பெரியாத்தாளே நறுக்கெனக் கேட்டு இவர்களின் அச்சம் போக்கி இருந்தது. கூடவே, சோணைமுத்துவையும் உடன் இருக்கச் செய்தது.

“அய்யா, பொதுவாளுக நாங்க, ஒரு விசயம் சொல்லலாம்னு நெனைக்கிறம்” - மஞ்சள் சட்டையும் காவி வேட்டியும் அணிந்திருந்த - காசிக்குப் போய் வந்ததிலிருந்து மங்கல உடைதான் அணிவாராம் - நாட்டாமை மறுபடி துவக்கினார். “இங்கன உள்ளூர்ல ஆரும் பெரியாள்கள எதும் கூப்புடணுமாய்யா?” - என்று அபிப்ராயம் கேட்க, வசந்தியின் தகப்பனார் உடனடியாக மறுத்தார்.

“கையெடுத்துக் கும்புடுறேன் மாமா! அம்மூர்ல அசிங்கப்பட்டது போதும். ஆரையும் கூப்புட வேணாம்!”

“ஸ்சு, கருத்தக்கண்ணூ, பொழுதீன்னிக்கும் அத அதப் பேசாதப்பா. என்னா அசிங்கம்? ஒம் மக என்னா மொண்டி மொடவம் மேலயா ஆசப்பட்டு வந்துருக்கா. ‘வீமெ’ம் மாதிரி சிங்கத்தத்தானப்பா கைப்பிடிச்சிருக்கு. மாயனுக்கு என்னா கொறச்சல்? நீ அறியாத பயலா? பெரியகம்மா வயலக் குடுத்துப்பாரு, வருசத்துக்கு ரெண்டுக்கு மூணா வௌயவச்சு வீட்ட நெப்பீருவானாக்கும். என்னா அப்பனூ!” - உடம்புக்கும் குரலுக்கும் சம்பந்தமில்லாமல் கணீரெனப் பேசினார்.

அய்யாச்சாமி பெரிய்யய்யா ஏதோ சொல்ல தொண்டையைச் செருமினார். மஞ்சள் வெயில் தணிந்து கொண்டிருந்தது.

“பெரியவங்க வீடுதேடி வந்திருக்கீங்க சந்தோசம். இதுக சின்னஞ்சிறுசுக. எள ரத்தம். இருந்து, பெத்தவக மத்தவக சம்மதங்கேட்டு ஒறமொறையோட நிண்டு கூடி இருக்கோணும். எளங்கண்டு பயமறியாது ம்பாங்க. ஆனா இதுக எதியோ நெனச்சு பயந்து வந்திருச்சுக. நாலொண்ணு நல்லது சொல்லி, நாமதேன்”

அவரை முடிக்க விடாமல் மறித்த சின்னராசு, “அதுக்குத் தான வந்துருக்கம்!” - என்று பேசியதும் அவனைத் தொடையில் தட்டி நிறுத்திய நாட்டாமை,

“அய்யா, கட்டுத்தர வச்சுப் பொழங்குன குடும்பம். காராம் பசுவ ஓட்டிட்டு வந்துட்டீக. காள மாட்டோட சேத்து வச்சு கட்டுத்தர பொழங்கட்டுமேன்னு நாங்க பிரியப்படுறம். என்னா சரியா!” கருத்தக் கண்ணுவின் சம்மதத்தோடு பேசுவது போல சொன்னார்.

பெரிய்யய்யாவுக்கு தர்ம சங்கடமாயிருந்தது. வந்தவர்கள் வழுக்கிக் கொண்டே பேசுகிறார்கள். வார்த்தையை விட்டு பகையைச் சம்பாதிக்க வேண்டாம். அதுக்காக அண்டி வந்த மாயனை பலி கொடுக்கவும் முடியாது.

“எந்தக் கட்டுத் தரைல? பசுவோட காளங்கண்டு எந்தக் காலத்துல நின்னுச்சூ?” - சோணைமுத்து சுருக்கென கேட்டுவிட்டான்.

“எங்க தொழுவத்துல வந்துபாரப்பா. மயிலயில இருந்து மாங்(ன்)கொம்பு வரைக்கும், வகைக்கொரு சோடி வருச போட்டு நிக்கிம்” - கூசாமல் பொய் சொன்ன சின்னராசு தன்னைத்தானே மெச்சிக் கொண்டான். தனக்கும்கூட இம்புட்டு கோர்வையாப் பேச வருதே. இல்லாத விசயத்தப் பேசுனாத்தே பேச்சு எகனமொகனயா வருமோ.

“கட்டுத்தரன்னா என்னான்னு தெரிமா?” - கருத்தக்கண்ணு சூட்சுமத்தில் கல்லெறிந்தார். அதைக் கண்ட நாட்டாமை அவசரமாக நுழைந்தார். “யே, மயிலக் காளைக்கும் மருமகப் பிள்ளைக்கும் வித்தியாசமில்லியாப்பா” - என பனிப்போரை முடித்து வைத்தவர், “இப்ப என்னா, பிள்ளைய கூட்டிப் போக வந்துருக்க! அதப்பேசு” வந்த நோக்கத்தை மெல்ல அவிழ்த்து விட்டார்.

“மாட்டேன்!” - மறுபடியும் கதவுப் பக்கமிருந்து கீச்சுக்குரலில் சொன்னாள் வசந்தி.

மாயனைத் தவிர யாரும் அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வசந்தியின் கண்களில் இருந்த கலக்கம் அவனுக்குப் புரிந்தது. மாயனுக்கு திடமான நம்பிக்கை இருந்தது. நிச்சயமாகத் தங்களை யாரும் பிரிக்க முடியாது. இந்த பதினைந்து நாட்களாகத் தங்களைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள், இப்போது படையோடு வந்திருப்பதால் வசந்தி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள். இரண்டு பேரின் மனசும் உடம்பும் கெட்டித்துப் போய்விட்டது. இனிமேல் அந்தப் பேச்சுக்கே இடமில்லை. பேசட்டும், பேசிக் கொண்டிருக்கிற வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. செயலில் வருகிறபோது பார்த்துக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம். அவனும் கண்களில் தூதுவிட்டான்.

பறவைகள் கூடடையக் கூப்பாடு போட்டபடி வந்தன. பகல் முழுக்க சுற்றியலைந்த கதைகளைப் பேசிக் கொண்டே சக தோழர்களோடு, வீட்டின் பின்பக்கமிருந்த பூவரசு மரத்தில் இருப்புக் கொண்டன. அதில் ஏதோ ஒரு ஜோடி சண்டையிட்டுக் கொண்டே வாவரங்காய்ச்சி மரத்தில் வந்து நின்றன.

வசந்தி வீட்டுக்குள் போய் விளக்கைப் போட்டாள். அடுக்களையில் லைட் எரிந்து கொண்டிருந்தது. லட்சுமி அத்தையும் பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவளைப் பார்த்ததும், “சோற் சாப்பிடுறியா” எனக் கேட்டனர்.

“வேணாம்த்த” - மறுத்துவிட்டு மறுபடி வாசலுக்கு வந்தாள்.

“ஒங்க பிள்ள - மருமகன கூட்டிட்டுப் போக ஆரும் தடுக்கப் போறதில்ல. இருந்தாலும் ஒரு மொறன்னு வழம இருக்குல்ல.” -பெரிய்யய்யா ஒரு கணக்கு வைத்துப் பேசினார்.

“ஆமா, எல்லாமே மொறயாத்தே நடந்துருக்கு. நடவுக்கு வந்தபய வெத நெல்ல களவாண்டு போயிருக்கானாம். மொறயாம், மொற.” - வெந்த மனசோடு பேசத் தொடங்கிய கருத்தக்கண்ணுவை மறித்த நாட்டாமை, “யே கருத்தக்கண்ணு, புத்தி கெட்டுப் போச்சாப்பா. மகளக் கூட்டிப் போக வந்தியா? மல்லுக்கட்ட வந்தியா?”

“நாம் போக மாட்டேன்” - ஆவேசமும் இரைச்சலுமாகச் சொன்னாள் வசந்தி. வாசலை விட்டு வெளியில் ஓர் அங்குலம் கூட கால் மிதிக்கவில்லை.

“நீ ஒண்ணும் வரவேணா! இங்கனயே இருந்து சாணி தட்டிக்கிட்டு, பயலுகளுக்கு பீ மூத்தரம் அள்ளிக்கிட்டுத் திரி” - வேதாளமாகப் பொங்கிப் பேசினார் கருத்தக்கண்ணு.

சோணைமுத்துவுக்கு இவர்களின் பேச்சு நாடகம் போல தெரிந்தது. முதலில் ஊருக்குள் வந்து மாயனைக் கேட்டதும் தெரியாது என்றுதான் சொன்னான். இங்கே வந்திருப்பதாக துப்புக் கிடைத்த விவரத்தைச் சொன்ன பிறகும் கூட அவன் சொல்லவே இல்லை. சமாதானம் பேசிக் கூட்டிப் போக வந்திருப்பதாகவும், வில்லங்க விவகாரம் எதுவுமில்லை என்று விசாரித்த பிறகே இவர்களை வீட்டுக்குக் கூப்பிட்டு வந்து உட்கார வைத்தான். தோப்பிற்குப் போயிருந்த மாயனையும் அழைத்து வந்தான். எப்படியோ ஊரும் பேருமாக அவர்கள் சேர்ந்து விட்டால் நல்லதுதானே. ஆனால் இங்கே பேசுகிற பேச்செல்லாம் சூது போலத் தெரிந்தது. அவசரப்பட்டு நம்பியவனைக் காட்டிக் கொடுத்துவிட்டோமோ. பதைபதைத்தான்.

“யேய் யே, நிறுத்தப்பா. நிறுத்து, நிறுத்து. கருத்தக்கண்ணு, என்னா ரெம்பத்தேந் துள்ளுற? இதுக்குமேல ஒனக்கு பஞ்சாயத்து பேச வந்தா எம்மரியாத கெட்டுப் போகும். மனுசெம் மாதரியா பேசுற? ம்.” - நாட்டாமை விசுக்கென எழுந்து நின்றார். வேஷ்டியை அவிழ்த்து இறுகக் கட்டிக் கொண்டார்.

“இதானப்பா, ஒதிப் புத்தி போனாலும் சாதிப்புத்தி போகாதுன்றது! எங்க, எப்படிப் பேசணும், என்னா செய்யணுன்ற தன்ம வேணும். மனுசனுக்கு” என்றவர், வசந்தியை அழைத்தார். 

“கொஞ்சந் தண்ணி குடு தாயி. கத்திக் கத்தி தொண்டத் தண்ணி போனதுதேம் மிச்சம்.” - தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

அய்யாச்சாமிக்கும் மாயனுக்கும் நாட்டாமை யாருக்காக வந்தார் என்பது விளங்கவில்லை. சரியாகப் பேசுகிறாரா அல்லது விரிசலுக்கு மாவுக்கட்டுப் போடுகிறாரா, வாயடைத்து நின்றனர். ஆனால் ஏதோ ஒரு நோக்கத்தில் இருப்பதாக மட்டும் புரிந்தது.

வசந்தி தண்ணி கொண்டு வந்தாள். செம்பை வாங்கிய நாட்டாமை, “தாயி! ங்ஙொப்பேம் பேச்சுல ஆத்தரமிருந்தாலும் ஒம்மேல இருக்க பாசத்துல பழுதில்ல ஆத்தா. அங்க ஒங்கம்மா சேட்டமில்லா. நீச்சு நெனவில்லாம ஒன் நெனப்பா அனத்திட்டுக் கெடக்குது. அந்தக் காண்டுலதே இவெ இம்புட்டுப் பேசிட்டான். இருந்தாலும் அசலூர்க்காரவகளுக்கு அது தெரியாதுல்ல. நீதேம் புரிஞ்சுக்கணும். ஒரெட்டு நீ வந்து ங்ஙொம்மாளப் பாத்துட்டு மட்டும் வந்துரு. அல்லார்க்கும் நல்லது. இதுதான் நாஞ்சொல்றது.” - வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினார்.

“பொம்பளப் பிள்ளகிட்ட என்னாத்த தனியாப் பேசறீங்க” - சோணைமுத்து முன்னால் வந்தான்.

“நாம் மாட்டேன்” - தலையை ஆட்டியபடி செம்பை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள் வசந்தி.

“யே எம் புள்ளப்பா. உள்ளாங்கைல தூரிகட்டி வெளாண்ட புள்ள. உம்பாட்டுக்கு இரு!” - சோணைமுத்து அமைதியடைய, அய்யாச்சாமி கையெடுத்துக் கும்பிட்டார்.

“நாஞ் சொல்றத தப்பா எடுத்துக்கக் குடாது. இதுக உங்க பிள்ளைகதான். ஒங்களுக்கு கூட்டிட்டு போக ரைட்டும் இருக்கு; இல்லீங்கள. அந்தப்பிள்ள மெரண்டு ஒரேதா தலயக் குலுக்குது. அதனால சமாதானம் பேசவாரவங்க பொண்டு பிள்ளைகளோட வந்தா நல்லாருக்கும். இல்ல, அந்தப் பிள்ளையோட தாயாராச்சும் வந்திருந்தா பேசச் செய்ய நல்லாருக்கும். மாட்டேன்னு சொல்ற பிள்ளைய மல்லுகட்டி அனுப்ப மனசு வரல” - அய்யாச்சாமி பெரிய்யய்யா கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னார்.

“அப்ப!” - கருத்தக்கண்ணு சீறினார்.

“அவக அம்மாவக் கூட்டிட்டு வாங்கன்றாரு” - சின்னராசு மொழிபெயர்த்தான்.

“அப்ப மனசு வந்துருமா. வேணாம். ஆரு பிள்ளைய ஆரு அனுப்பறது?” - சண்டைக்கு எழுந்தவரை கையைப் பிடித்து உட்கார வைத்து அமுக்கிப் பிடித்துக் கொண்ட நாட்டாமை எதுவும் பேசாமல் தலையசைப்பிலும் கண்ணசைவிலும் விடைபெற்று, கருத்தக்கண்ணுவை விசும்பாமல் சமாதானப்படுத்தியபடி நடத்திப் போனார். தெரு கடந்ததும் கையை விட்டவர் ஆள் பார்த்துப் பேசினார்.

“கருத்தக்கண்ணூ, ஒன்னிய மாதிரியெல்லா வெடச்சுக்கிட்டுப் பேச முடியாதுப்பா. நம்மள்க்கு காரியம் முக்கியம். என்னாச்சு இப்ப, முழிச்சுக்கிட்டாங்கள்ல. கமுக்கமாத்தெ சில வேலைகளப் பண்ணனும். கிறுக்குத்தனமா இருக்கு. விடு, ஆழம் பாத்தாச்சுல்ல. வா.”

- தொடரும்


விவாதங்கள் (4)