அத்தியாயம் 1
அந்த மாதத்துப் பத்திரிகையில் நான் எத்தனையோ நாட்களுக்கு முன் எழுதிய ‘கொலை பாதகன்’ என்கிற கதையை, “இதோ ஒரு நல்ல கதை” என்று பிரபலப்படுத்தித் திறம்படப் பிரசுரித்திருந்தார்கள். அதாவது மார்ச்சு மாதப் பத்திரிகையில், அந்தப் பத்திரிகை வெளிவந்து நாலைந்து நாட்களுக்குப் பிறகுதான் சின்னையா ஹோட்டலில் காபி சாப்பிடப் போனேன்.
சின்னையாவை எனக்கொரு பத்துப் பனிரண்டு வருஷங்களாக - ஏன் அதிகமாகவே கூடத் தெரியும். என்னைக் கண்டதுமே, பெட்டியிலிருந்தபடியே, “வாங்க வாங்க” என்று சொல்லிவிட்டு, தன் பக்கத்தில் ஸில்க் ஜிப்பாவும், வைரப் பொத்தான்களுமாக, அமுத்தலாகக் கிராப்பை ஒருவாரு வாரிவிட்டு ஒரு விசிறும் விசிறிவிட்டிருந்த மனிதனிடம், “அன்று படித்தீர்களே, அந்தக் கதையை எழுதியவர் இந்த ஐயாதான்” என்றான்.
எனக்கு எப்பொழுதுமே என் எழுத்தைப் பற்றிய விஷயங்களில் ஒரு பெருமிதம், பரவசம் உண்டு. ஆகவே முதலில் சரிவரக் கவனிக்காத அந்த ஸில்க் ஜிப்பா அமுத்தல் கிராப் ஆசாமியைச் சற்று நன்றாகக் கவனித்தேன். அந்த மனிதனின் முகத்திலே ஒரு தடித்தனம் இருந்தது - சிவப்பாகத்தான் இருந்தான் ஆசாமி என்றாலும் அத்தோல் ஒரு காண்டா மிருகத்தின் தோல் மாதிரி இருந்தது. மூக்கும் சற்றுக் கட்டையாக குட்டையாகத் தடியாகத்தான் இருந்தது. உதடுகளும் சொற சொறப்பாகத் தடித்து இருந்தன. அந்த முகவாய்க் கட்டையிலே ஒரு பிடிவாதமும், அழுத்தமும் த்வனித்தன. உதட்டுக்கு மூன்று விரல் முகவாய்க் கட்டை முன்வந்திருந்தது என்று கவனித்தேன். புருவத்து மயிரும் தலை மயிரும் சேர்த்துப் பின்னலாம் போல இருந்தது. அடர்த்தியான புருவ மயிர். நெற்றியே இல்லை என்று சொல்லக்கூடிய நெற்றி. ஆனால் அந்தப் புருவங்களுக்கடியில் மின்னிய கண்கள்தான் எப்படிப்பட்ட கண்கள்! குரூரம் நிறைந்த கண்கள். காட்டுமிராண்டிக் காலத்தில் பிறந்திருந்தால் அந்த மனிதன் சித்திரவதை செய்யும் அதிகாரியாக யாராவது ஒரு கொடுங்கோல் மன்னனிடம் வேலை பார்த்திருப்பான் என்று தோன்றியது எனக்கு. யார் என்ன கெஞ்சினாலும் அசைந்து தரும் சுபாவமற்ற மனிதன் அவன், நெஞ்சில் ஈரமேயில்லாதவன் அவன் என்று எனக்கு அவனைப் பார்த்த மாத்திரத்தில் தோன்றியது.
அதே வினாடி அவன் ஒரு பெரிய கொலைகாரனாகவே இருக்கலாமோ என்றும் தோன்றிற்று எனக்கு. அப்படியானால் சின்னையா பாத்திரமறிந்துதான் என் கொலைபாதகன் கதையைப் பற்றிப் பேசினாரோ?
எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. சின்னையாவின் அண்ணா ஒருவர் - ஊரெல்லாம் அவருக்குப் பெயர் சம்பந்தம் என்று சொன்னார்கள் - ஒரு கொலைக் கேஸில் அகப்பட்டுக் கொண்டு செஷன்ஸ் கோர்ட்டில் போதுமான ருஜுவில்லை என்று சென்ற மாதம்தான் விடுதலையானார் என்று கேள்விப்பட்டது எனக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது.
*****
“நீயும் என்னோடு உன் ஓட்டல் காபியைச் சாப்பிட வாயேன். உன் அண்ணா - சம்பந்தம்தானே அது? - வரச் சொல்லேன்” என்றேன் நான். எனக்கு எப்பவுமே என் எழுத்துப் பற்றித்தான் நினைவு. ஏதாவது விஷயம் கிடைக்காதா எழுதுவதற்கு என்று - கழுகுக்கு வியர்க்கிற மாதிரி எனக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. சத்தியாக்கிரஹ நண்பரைப் பார்க்கப் போன இடத்தில், ஜெயில் வாசலில் பத்தடி தூரத்தில் ஒரு கொலைகாரனைப் பார்த்தேன் – அப்போது - அது 1942இல் அதை எழுதினேன். இப்போது வேறு ஒரு தினுசான கொலைகாரனை - கோர்ட் அவன் மேல் போதுமான சாட்சியம் இல்லை என்று தள்ளி விட்டாலும்கூட அவன்தான் அந்த ராஜவேலுவைக் கொலை செய்தவன் அதில் சந்தேகம் இல்லை என்று ஊரார் சொல்லிக் கொண்டார்கள். எனக்கென்ன அதற்குமேல் தெரியும்? அந்தக் கொலைகாரனை நெருங்கிக் காபி சாப்பிடலாமே, அதை ஒரு புது அனுபவமாக எழுதலாமே என்று எனக்கு நினைப்பு.
“ஐயா அறிவாளி, கெட்டிக்காரர்னு நீ சொன்னது சரிதான் தம்பி” என்றான் சம்பந்தம். “உடனேயே நீ ஒரு வார்த்தை அவரிடம் சொல்றத்துக்கு முன்னாடியே நான் யாருன்னு புரிஞ்சுக்கிட்டாரே. இப்படிப்பட்டவங்ககிட்ட பேசறத்திலே ஒரு சொகம் இருக்குங்க. ஐயா, தஞ்சாவூர்ப் பக்கமா?”
“திருவாலூரு” என்றேன்.
“திருவாலூர் கமலத்தைத் தெரிஞ்சிருக்குமே?”
“யாரு? எனக்குக் கோயில்லே குடியிருக்கிற கமலத்தைத்தான் தெரியும்” என்றேன், நான்.
“நான் சொல்ற கமலம் கோயில்லே குடியிருக்கிற கமலம் இல்லே. விஜயபுரத்திலே நாகப்பட்டினம் ரோட்டிலேயிருந்து ஓடம்போக்கி ஆத்துக்குப் போகிற வழியிலே இருக்கிற பொட்டுத் தெருவிலே குச்சிலே குடியிருக்கிற கமலம்தான், நான் சொல்ற கமலம்” என்றான் சம்பந்தம்.
“நான் 1922 முதல் 1924 வரையில் திருவாலூரில் படிச்சேன் ஒரு மூணு வருஷம். அதற்குப் பிறகு இன்னும் அந்தப் பக்கம் போகக்கூட இல்லை. சொந்த ஊருன்னு யாராவது கேட்டா திருவாலூரு என்று சொல்றதைத்தவிர எனக்கு அதுபற்றி அதிகம் ஒன்றும் தெரியாது” என்று அந்தக் கமலத்தைப் பற்றி என் அறியாமையை ஏற்றுக் கொண்டேன். அத்துடன் நிறுத்தாமல், “வாங்க. உட்கார்ந்து காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்” என்று சம்பந்தத்தையும் உரிமையுடன் அழைத்தேன்.
ஹோட்டலிலே வியாபாரம் அதிகமாக ஆகிற சமயம் அது. கூட்டமாக இருந்தது. சின்னையாவுக்குக் கல்லாப் பெட்டியை விட்டு எழுந்துவரத் தைரியம் இல்லை. “மணி! அவங்க ரெண்டு பேருக்கும்…”
“மணிக்கு என்னைத் தெரியும்!” என்று சொல்லிக் கொண்டே திறந்த மாடியில் முல்லைக்கொடி படர்ந்திருந்த படலுக்குப் பக்கத்தில் இருந்த மேஜையில் போய் உட்கார்ந்தேன்.
*****
வழக்கமாக மாலையில் காபி சாப்பிடப் போனால் அந்த ஆஸனத்தில்தான் உட்காருவேன். அதே மணிதான் எனக்கு ஒரு ஸ்வீட், சூடாக ஏதாவது ஒரு காரம், ஸ்டிராங்காக சக்கரை தூக்கலாக ஒரு கப் காபி எல்லாம் கொணர்ந்து தருவான். மாமூல்படி எல்லாம் வந்தது. சம்பந்தத்துக்கும் சேர்ந்து வந்தது.
“சின்னையாவை உங்களுக்கு நல்லாத் தெரியும் போலிருக்கு” என்றான் சம்பந்தம்.
“பதினைந்து வருஷத்துப் பழக்கம்.”
“உங்களைப் பற்றி நேத்திப் பூராவும் சொல்லிக்கிட்டிருந்தான்.”
“நேத்தே வந்துட்டீங்களா நீங்க! நான் பார்க்கல்லியே. வழக்கமா இந்த நேரத்துக்குத் தினமும் வருவேன். ஊரில் இருந்தால் நான் இங்கு வராத நாளே கிடையாது. அப்படி ஒரு பழக்கம்.”
“நேத்து… நேத்து” என்று ஆரம்பித்துத் தயங்கிய சம்பந்தம் கடைசியில் தீர்மானத்துடன், “உங்கக்கிட்ட மறைப்பானேன்? போலீஸிலே ஒரு அவசர ஜோலியாகக் கூப்பிட்டனுப்பினாக. போய்க் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்தேன். இந்தவூர் இன்ஸ்பெக்டர் ஐயா…”
“யாரு, ஃப்ரான்சிஸ்ஸா?” என்றேன்.
“ஆமாம். ஐயாவுக்கும் தெரியுமா அவரை? அவர் நமக்கு ரொம்ப வேண்டியவருங்க. ரொம்ப ரொம்ப வேண்டியவருங்க” என்றான் சம்பந்தம்.
“திருவாலூர் - அல்லது விஜயபுரத்து மேட்டுத் தெருக் கமலத்தைப் பத்தி ஏதோ ஆரம்பிச்சீங்களே!” என்றேன், நான். எனக்குக் கதை எங்காவது போய்விடப் போகிறதே என்று பயம்.
“விட்டுத் தள்ளுங்க சவத்தை. அதைப்பத்திப் பேசினாலே பாவமுங்க!” என்றான் சம்பந்தம்.
அடேயப்பா! இந்தக் கொலைகாரனுக்கும் கூடப் பாவம் புண்ணியம் எல்லாம் உண்டா என்று மனத்திற்குள் வியந்து கொண்டே, “சின்னையா கடை ஹல்வான்னா ஹல்வாதான். இந்த ஊரிலே இது மாதிரி வேறு எங்கேயும் கிடைக்காது.”
“இது சுமாராயிருக்குங்க! ஆனாலும் அந்த நாளிலே தஞ்சாவூர் பரமேசுவரய்யரு ஹோட்டலிலே கிடைத்த அல்வா மாதிரி இப்போ இங்கெங்கே கிடைக்குது?” என்று நாக்கைச் சப்புக் கொட்டினான் சம்பந்தம்.
எனக்கும் பரமேசுவரய்யர் கடை ஹல்வாவையும், அவர் கடை ரவாதோசை சாம்பாரையும் எண்ணி நாக்கைச் சப்புக் கொட்ட வேண்டும் போலத்தான் இருந்தது. இந்த மனிதன் கொலைகாரன் மட்டும் அல்ல. நல்ல ரஸிகனும்கூட என்று எண்ணிக் கொண்டேன். சாப்பிடுவதிலே இத்தனை ரஸனையுள்ளவன் கொலைகாரனாக இருப்பானா என்கிற சந்தேகம்கூட வந்தது எனக்கு. “நீ தஞ்சாவூரிலேயும் இருந்திருக்கிறாயா?” என்றேன்.
“நான் எந்த ஊரிலே, இருந்ததில்லென்னு கேளுங்க?” என்றான் சம்பந்தம் அடக்கமாக. “அந்தப் பரமேசுவரய்யருக்குக் குழந்தை குட்டியில்லை.”
“ஆமாம். எனக்குங்கூட அது நினைவிருக்கிறது” என்றேன் நான்.
- தொடரும்
விவாதங்கள் (5)
- RAVI JAYENDRAN
excellent
2 likes - Ram Siva
ரூஜி ????
3 likes - T K Kumar Thillai
HI HI HI
0 likes - Bhuvaneswari Lakshmanan
sila perai parthathu ippadipatta oru kanippu nammala ariyamal namaku thondrum...manitha gunam...
2 likes - Bhuvaneswari Lakshmanan
silk jppi amutthal.....nalla nakkal wordthan....😜😜😜
2 likes