அத்தியாயம் 1
தஞ்சாவூர் எனக்குப் புதிய ஊர் அல்ல.
சர்க்கார் இலாக்காக்களில் ஏதாவதொன்றில் சிறு உத்தியோகம் வகிப்பவருடைய பிள்ளையாகப் பிறக்கிற பாக்கியம் படைத்தவன், சிறு வயதிலேயே பல ஊர்களிலும் வசிக்கும் பாக்கியத்தைப் பெறுகிறான்.
தஞ்சாவூரில் அந்த நாட்களில் வசிக்கும் பாக்கியம் எனக்கு இப்படித்தான் கிடைத்தது. என் தகப்பனார் தஞ்சாவூரில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தபோது நான் அங்கே உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளிப் படிப்பு முடிவதற்கும் என் தகப்பனாருக்குத் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாவதற்கும் சரியாக இருந்தது. இது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எப்படியோ சாமர்த்தியமாகச் சாதித்துக் கொள்ளுகிற ஒரு விஷயம்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பல வருஷங்கள் தஞ்சாவூர் செல்ல எனக்கு சந்தர்ப்பமே வாய்க்கவில்லை. ஆனால் போய்வர வேண்டும். பத்து நாள் தங்கிவர உல்லாசமாக அலைந்து திரிய வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இப்படித் தஞ்சாவூரைப் பற்றி நான் அடிக்கடி நினைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இளம்பிராயத்திலே ஓடியாடித் திரிந்து விளையாடிய இடங்களை நடு வயதிலே போய்ப் பார்க்க வேண்டுமா என்ன? அதிலே அலாதியான ஓர் இன்பத்தை அநுபவிக்காதவன் மனிதனே அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடம் அன்றைக்கின்று மாறியிருக்கிறது; அந்த இடம் சிறிதும் மாறவேயில்லை. மனிதன் அன்றைக்கின்று மாறாமல் அழியாத மேனியாய் குழந்தைப் பருவத்திலேயே தங்கிவிடுவானானால் எவ்வளவோ நன்றாக இருக்குமே என்று எண்ணிப் பார்க்காமல் யாரால் இருக்க முடியும்? பழைய, பழக்கப்பட்ட இடங்களைப் பதினைந்து இருபது வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் போய்ப் பார்ப்பது என்பது ஒரு ஆத்மீக அநுபவம்.
தவிர தஞ்சாவூரைப் பற்றிய வரையில் எனக்கு இன்பகரமானவை என்று சொல்லக் கூடியவையாகப் பல ஞாபகங்கள் உண்டு; துன்பகரமானவையும் பல உண்டு. என் தாயார் இறந்தது தஞ்சாவூரிலேதான். ஆனால் அந்தத் துயரமான சம்பவத்தின் ஞாபகம், இன்று அப்படி ஒன்றும் துன்பகரமானதாக இருக்கவில்லை. இன்பமோ துன்பமோ சிறு வயதுக்குரிய சில விஷயங்களை, சம்பவங்களை, சந்தர்ப்பங்களை எண்ணிப் பார்ப்பதிலே மனிதனுக்கு எல்லையற்ற ஆனந்தம் இருக்கத்தான் இருக்கிறது!
இத்தனையும் தவிர, தஞ்சாவூரில் எனக்கு அலுவலும் இல்லாமல் இல்லை. சரஸ்வதி மஹாலில் உட்கார்ந்து ஏதாவது சில நாட்கள் எட்டுகிற வரையில், ‘ஆராய்ச்சி’ நடத்தினால், சமீபகாலத்திய நமது சிறுமை பெறுமைகளைப் பற்றி, சுவாரஸ்யமாக மிகைப்படுத்தி எழுதுவதற்கு விஷயம் கிடைக்கலாம்; தொழில் முறையிலும்கூட தஞ்சாவூர் போய்வருவது லாபகரமாக இருக்கும் என்றுதான் எண்ணினேன்.
போக வேண்டும், போக வேண்டும், போகத்தான் வேண்டுமென்று நான் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கையில் என் நண்பன் ரகுவிடமிருந்து கடிதம் வந்தது. அந்தக் கடிதம் தஞ்சாவூரிலிருந்து வந்தது என்பதுதான் விசேஷம்.
நானும் ரகுவும் சேர்ந்து படித்தவர்கள்: தஞ்சாவூரில் பள்ளியில் அல்ல; சிதம்பரத்தில் சர்வகலாசாலையில் நாலு வருஷங்கள் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள். எவ்வளவு நெருங்கி அப்போது பழகினோம் என்பது எங்களோடு அந்தக் காலத்தில் படித்தவர்களுக்குத் தெரியும். அந்த நாட்களில் யாராவது ரகுவைத் தனியாகப் பார்த்தால் என்னைப் பற்றி விசாரிப்பார்கள்; என்னைப் பார்த்தால் ரகுவைப் பற்றி விசாரிப்பார்கள். கலாசாலைப் படிப்பு முடிந்த பிறகும் இரண்டு மூன்று வருஷங்கள் நாங்கள் அடிக்கடி கடிதங்கள் எழுதிக் கொண்டோம். ஆனால் கலாசாலை விட்டு இரண்டு மூன்று வருஷங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் அதிகமாகச் சந்தித்ததில்லை. அதிகமாக ஒருவர் பற்றி மற்றவருக்குத் தகவலும் தெரியாது! ஆனாலும் எங்களுக்கிடையில் இருந்த நட்பு மாறிவிடவில்லை! மனத்தில் அந்தரங்கமாக இருந்தது என்று சொல்லலாம். அடிக்கடி ரகுவின் யோக க்ஷேமங்களையும் வரவுசெலவுகளையும் வெற்றி தோல்விகளையும் பற்றி நான் சிந்திப்பதுண்டு. அவனும் என்னைப் பற்றிச் சிந்தித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை; பத்திரிகைகளில் என் பெயரைப் பார்க்கிற சந்தர்ப்பங்களிலாவது நினைத்திருப்பான் என்பதில் சந்தேகமேயில்லை.
மனத்திலே இருந்துவந்த நட்புணர்ச்சி காரணமாக நான் ரகுவுடன் சில நாள் சேர்ந்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு.
ரகுவிடமிருந்து ஒரு கடிதத்தை நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் தஞ்சாவூரிலிருந்து எதிர்பார்க்கவில்லை - அந்தச் சமயத்திலும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே அவன் கடிதம் எனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைத் தந்தது.
வழக்கத்துக்கு விரோதமாக ரகு சற்று விரிவாகவே எழுதியிருந்தான். அவனுக்குக் கலியாணமான செய்தி மட்டுமே எனக்குத் தெரியும். அவன் மனைவி, இரண்டு குழந்தைகளைப் பெற்று அவன் பொறுப்பில் விட்டுவிட்டு இறந்துவிட்டாள் என்பதைத் தெரிவித்திருந்தான். அவன் மனைவி இறந்து ஒரு வருஷம் பூராவும் ஆகிவிடவில்லை என்றும் எழுதியிருந்தான். தஞ்சாவூரில் நாற்பது ஐம்பது ரூபாய் சம்பளத்தில் ஓர் ஆபீஸில் உத்தியோகம் பார்த்து வருவதாக எழுதியிருந்தான். அவன் மறு விவாகம் செய்து கொள்ள உத்தேசமில்லை என்றும் எழுதியிருந்தான். வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு கிழவி இருந்தாள். மற்றபடி அவனும் அவன் குழந்தைகளும்தான். ஏதோ உள்ள செளகரியத்துடன் வாழ்ந்து வருவதாகவும், ஒரு பத்து நாள் லீவு எடுத்துக்கொள்ளப் போவதாகவும், சில நாட்கள் தஞ்சாவூரிலேயே தங்கப் போவதாகவும் எழுதியிருந்தான். நானும் வந்து அந்தப் பத்து நாட்களும் அவனுடன் தஞ்சாவூரில் தங்கினால் அவனுக்கு ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் என்றும் எழுதியிருந்தான்.
மறு தபாலிலேயே நான் வருவதாக எழுதிவிட்டேன். ஆனால் நாலைந்து நாட்கள் கழித்துத்தான் என்னால் கிளம்ப முடிந்தது.
தஞ்சாவூரிலே பத்து நாள் தங்கிவிட்டுத் திரும்புவதாகப் போன நான் ஒரு மாதத்திற்கு அதிகமாகவே தங்கிவிட்டேன். நண்பர் ரகு பத்து நாள் லீவு என்று இருபது நாள், முப்பது நாள், நாற்பது நாள் என்று தொடர்ந்து லீவு எடுத்துக் கொண்டான். ரகுவின் குழந்தைகளுடன் விளையாடுவதே எனக்கு மிகவும் இன்பமாக இருந்தது.
வேறு எங்கேயும் அப்பொழுது — அப்பொழுது மட்டும் என்ன? எப்பொழுதுமேதான் — எனக்கு அவசர ஜோலி எதுவும் இல்லை. ஒரு நாளில் இருந்த அறுபது நாழிகைப் பொழுதில் தூங்குகிற நேரம் பன்னிரண்டு பதினைந்து நாழிகைப் போக மற்ற பொழுதெல்லாம் இன்பமயமாகவே கழிந்தது என்று சொல்ல வேண்டும். பேச்சு, பேச்சு! ஓயாத பேச்சு! அப்படிப் பேசுவதற்கு என்னதான் விஷயம் இருக்குமோ என்று மற்றவர்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் விஷயம் என்னவோ இருந்து கொண்டேதான் இருந்தது! அந்தப் பேச்சை ரசமுள்ளதாகச் செய்வதற்குப் போதிய அளவு, இடை இடையே மெளனமாக இருக்கவும் எங்களால் முடிந்தது. பேச்சும், பேச்சின் தொடர்ச்சியாக எழுந்த மெளனமும் இன்பம் தருவதாகவே இருந்தன.
காலையில் எழுந்து காபி சாப்பிட்டுவிட்டு எங்கேயாவது ஊர் சுற்றப் போவோம். மத்தியானம் பத்து, பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாடாகிவிடும். பிறகு சரஸ்வதி மஹாலுக்குப் போய் ஏதாவது ஏடுகள் புரட்டுவோம்.
ரகுவுக்கு இலக்கியத்திலே, அதாவது புஸ்தகங்களிலும் படிப்பதிலும் அவ்வளவாக ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவன் எதைப் பற்றியுமே தெளிவாகச் சிந்தனை செய்யக்கூடிய மனிதன். அக்காலத்திலே ஓரளவு புஸ்தகங்களில் பரிச்சயம் உண்டு. இலக்கியத்தையே தொழிலாகக் கொண்டு பிழைக்க வேண்டியிருந்த எனக்கு, ‘இலக்கியத் தொழில் மனம்’ படைக்காத அவனுடைய பல சிந்தனைகளும் பேச்சும் மிகவும் உதவியாக இருந்தன. அவனுடைய இலக்கியச் சிந்தனைகளும் விமரிசனங்களும் உண்மையிலேயே எனக்கு மிகவும் உதவியாக இருந்தன.
மாலை மூன்று மணிக்கு காபிக்கு வீடு திரும்பினால் ரகுவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே என் பொழுது ஆனந்தமாகக் கழிந்துவிடும். ரகு சிறிது நேரம் படுத்து உறங்குவான். நான் அந்தக் குழந்தைகளுக்குத் திருப்தி தராத கதைகளைச் சொல்லிக் கொண்டே பொழுதை போக்குவேன். பொறுமையாகக் கதை பூராவையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அந்தக் குழந்தைகளில் சின்னது (பெண் - அதன் பெயர் ராஜி) சொல்லும்: “மாமாவுக்குக் கதையே சொல்லத் தெரியவில்லையடா மணி; நீ சொல்லு ஒரு கதை” என்று தன் அண்ணாவைக் கதை சொல்லச் சொல்லும். மணி கதைகள் சொல்வான் — ஆறு வயசுப் பையன் சொன்ன அந்தக் கதைகள் எனக்கும்கூட சுவாரசியமாக இருக்கும்.
- தொடரும்
விவாதங்கள் (8)
- Sriranga
பழைய நினைவுகள்
0 likes - Rani
இது எந்த வருடம்
0 likes - Vijayakumar Ramu
கடிததொர்பை நினைவூட்டு டியதற்கு நன்றிகள்
0 likes - Vijayakumar Ramu
தஞ்சை மண் இன்னும் எர்பார்த்தேன்.....
0 likes - meena
arumai arumai
0 likes - Selvaraj Govindaraj
இந்த கதை நிகழும் வருடம் அறிய ஆவலாய் உள்ளேன்
0 likes - Bhuvaneswari Lakshmanan
ellame nalla iruku....chinna pillainga kathai sollum azhage Azhagu.....nallathan solluvanga....nan niraya ketturuken.
0 likes - Bhuvaneswari Lakshmanan
amam....nan innum pogave illa....10th varaikum ore scl padichen....angathan enaku anubavam niraya kidaichuthu...but pogave mudiyala...45 age ayiruchu....
0 likes