அத்தியாயம் 1

கமலாவின் உடல் வெட வெட வென்று நடுங்குவதைப் பார்த்த மறு கணமே ரங்கநாதனுக்குப் புரிந்து போயிற்று; 'அவள், அந்தக் கடிதத்தைத் தான் படித்துப் பார்த்துவிடக்கூடாதே என்ற கவலையில் தான் பயப்படுகிறாள்!' அவர் புன்னகையுடன் கடித்தத்தை இரண்டாகவும் பிறகு நான்காகவும் மடித்தார்.


"கமலா! உன் உடம்புக்கு என்ன? ஏன் இப்படி நடுங்குகிறது?" என்றார்.


அவருக்குக் கடிதத்தைப் படிக்கும் உத்தேசம் இல்லை என்பதை அவர் அதை மடித்த விதத்திலிருந்தே உணர்ந்துவிட்ட கமலாவின் நடுக்கம் குறைந்து விரைவில் நின்றும் விட்டது.


"ஒன்றுமில்லை" என்று தலைகுனிந்து முணுமுணுத்தாள் அவள்.


"உடம்புக்கு ஒன்றுமில்லையா? அப்படியானால் என்னைக் கண்டு பயந்துபோய்த்தான் நடுங்கினாயா? நான் என்ன பார்ப்பதற்கு அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?"


"அதெல்லாம் ஒன்றுமில்லை" என்றாள் கமலா.


"உடம்புக்கும் ஒன்றுமில்லை. என்னைப் பார்த்தாலும் பயமா யில்லை. பிறகு உடல் நடுங்குவானேன்? ஒருவேளை இந்தக் கடிதத்தை நான் படித்து விடுவேன் என்ற பயத்தால் உன் உடல் அப்படிப் பதறியதா? கவலைப்படாதே கமலா! பிறர் கடிதங்களைப் படித்துப் பார்க்கும் கெட்ட பழக்கம் எனக்குக் கிடையாது!"


கமலாவுக்குத் திடீரென்று துணிச்சல் எப்படித்தான் வந்ததோ? கிண்டலும் கேலியும் கோபமும் ஆங்காரமும் கொப்பளிக்க, "அடடா, அது எனக்குத் தெரியாதா? நீங்கள் எப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்! எவ்வளவு பெரிய பணக்காரர்! உங்களுக்கெல்லாம் அற்பத்தனமான கெட்ட பழக்கங்கள் இருக்குமா என்ன?" என்றாள்.


ரங்கநாதன் சிரித்தார். "புரிகிறது கமலா, நையாண்டி நன்றாகப் புரிகிறது. பிறர் கடிதத்தைப் படிக்கும் கெட்ட பழக்கம் எனக்கு இல்லை என்றுதான் சொன்னேனே யொழிய என்னைப் பரம உத்தமமான, தெய்வீக புருஷனாக நான் வர்ணித்துக் கொள்ளவில்லை. நான் சாமானிய மனிதன் தான். பலவித ஆசாபாசங்களும் பலவீனங்களும் உடையவன் தான். அதே சமயம் பிறர் கடிதத்தைப் படிப்பது போன்ற சில கெட்ட பழக்கங்களை அண்ட விடாமல் என்னை நானே காத்துக் கொள்ளும் மனோபலமும் பெற்றவன். கமலா நீயே யோசித்துப் பார். எனக்கு இருக்கிற செல்வத்துக்கு நான் எவ்வளவோ தீய பழக் கங்களுக்கு அடிமையாகிக் கெட்டலையலாம். என்னைக் கேட்பார் இல்லை. ஆனாலும் நான் இந்த ஊரில் நற்பெயர் எடுத்துக் கௌரவமாக வாழவில்லையா? என்னை யாரேனும் வெறுக்கும்படியோ இழித்துரைக்கும்படியோ நடந்து கொண்டிருக்கிறேனா? சொல்!"


கமலாவுக்கு அவர் கூறுவதில் உள்ள நியாயம் புரிந்தபோது ஆங்காரத்துடன் அவரைக் கிண்டல் பண்ணுவது போலத் தான் பேசியது தவறு என்று உணர்ந்து வருந்தினாள். ரங்கநாதனிடம் கெட்ட பழக்கங்கள் ஏதும் கிடையாது என்பதுடன் பரோபகாரி என்றும் ஊரில் நற்பெயர் எடுத்திருந்தார். 'லக்ஷ்மிகடாச்சத்தைப் பெற்றவர், செல்வம் ஈட்டும் ஆற்றலை உடையவர் என்பதற்காகவே ஒருவரை வெறுப்பது அநியாயமல்லவா? தமது சொத்துக்கெல்லாம் ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசையால் அவர் என்னை மணந்துகொள்ள விரும்பியதில் என்ன தவறு? அவர் இஷ்டத்துக்குப் பணியுமாறு அவர் என்னையோ அல்லது அப்பா-அம்மாவையோ வற்புறுத்தவில்லையே? இவர்கள்தாமே அந்தச் சம்பத்துக்களை யெல்லாம் பார்த்து மலைத்துப் போய்ப் பேராசைப்பட்டு இராப் பகலாக அதைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்?'


அவளுடைய மனம் இளகியுள்ளதைப் படித்துவிட்டவராக அவர் தொடர்ந்தார். "உன் பெற்றோரை நான் என் பங்களாவுக்கு வரச் சொல்லி என் ஐசுவரியத்தைக் காட்டியது கூடத் தவறோ என்று என் மனத்தில் ஓர் உறுத்தல் கமலா? இரண்டு நாட்களாக அந்த உறுத்தலை அனுபவித்துவிட்டு இனியும் தாளாது என்ற நிலையில்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். நீ வீட்டில் தனியாக இருப்பதே ஒரு விதத்தில் அனுகூலமாய்ப் போயிற்று. உன் பெற்றொர் இருந்தால் உன் னைப் பேசவே விடமாட்டார்கள்.


'அவளுக்கு என்ன தெரியும்? பெரியவர்கள் பார்த்துச் சொன்னால் சரி என்று கூறிவிட்டுப் போகிறாள்.' என்பது போல் எதையாவது சொல்லியே என்னைச் சரிகட்டிவிடுவார்கள். ஆனால் எனக்கு உன்னுடைய மனப்பூர்வமான சம்மதம் இந்தத் திருமணத்துக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உன்னுடைய சுதந்திரமான முடிவாகவும் இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து கொண்ட பிறகுதான் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லாதபோனால் அச்சடித்த திருமண அழைப்பிதழ்களை அடுப்பிலே போட்டுவிட்டுச் சிவனே என்று இருந்து விடுகிறேன்."


கமலாவின் மனம் கரைந்துருகிற்று. 'மெய்யாலுமே பெரிய மனிதர் என்றால் இவர்தாம் பெரிய மனிதர்' என்று எண்ணினாள். ஆனால் அவருக்கு என்ன பதில் கூறுவது என்பதொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. 'திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டால் மட்டும் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? கல்யாணம் கையில் தாலியுடன் ஓடி வரப் போகிறாரா? அல்லது இந்தக் குடும்பத்தில் தரித்திரம் நீங்கிவிடப் போகிறதா? நான் தான் பெரிய படிப்புப் படித்து உத்தியோகத்தில் அமர்ந்துவிடப் போகிறேனா? அல்லது அம்மா என்னைத் தரித்திரப் பீடை என்று கரித்துக் கொட்டுவதை நிறுத்திவிடப் போகிறாளா? வசவும் திட்டும் அதிகரிக்கப் போகிறது. அவ்வளவுதான். வலிய வந்த ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளினேன் என்பதாக அப்பாவுக்குக்கூட என் மீது ஆதங்கம் உண்டாகி வெறுத்துப் பேசலாம்.'


"நான்... நான்" என்று தட்டுத் தடுமாறித் தயங்கினாள் கமலா.


"வேண்டாம் கமலா, அவசரமில்லை. நீ இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டே வேணுமானாலும் பதில் சொல்லு. பாதகமில்லை." என்றார் ரங்கநாதன். தொடர்ந்து, "இதோ பார், நீ பதிலே கூற வேண்டாம். இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தால் உன் மனம் எனக்கு உடனே தெரிந்து போய்விடும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. ஆனால் நான் அப்படிச் செய்யப் போவதில்லை. கடிதத்தை இதோ மேஜையில் மேல் வைத்து அது மறுபடியும் பறந்துவிடாமலிருக்க இந்தப் புத்தகத்தையும் அதன் மேல் வைக்கிறேன். இதை மறந்து விடுவோம். என்னையும் என் ஆசைகளையும்கூட சிறிது நேரம் மறந்துவிடுவோம். உன் வாழ்க்கை, உன் எதிர்காலம் இவற்றைப் பற்றிச் சிந்திப்போம். நான் உனக்கு வழங்க எண்ணுகிற எதிர்காலத்தில் வாலிப மிடுக்குடைய கணவன் என்ற ஓர் அம்சத்தைத் தவிர உனக்குச் சகலத்தையும் என்னால் கொடுக்க முடியும். அன்பும் ஐசுவரியமும் சாதிக்கக்கூடிய சகலத்தையும் நீ பெற லாம். யௌவனம் என்னிடமிருந்து விடை பெற்றுவிட்டதேயொழிய நான் இன்னமும் திடகாத்திரமாகவே இருக்கிறேன். ஊர் ஊராகப் போக வேண்டுமா? உல்லாசமாக உலகைச் சுற்றி வர வேண்டுமா? நகை நட்டு பூண வேண்டுமா? எதுவானாலும் சொல். உன் ஆசைகளையெல்லாம் கட்டளை களாக மதித்து நிறைவேற்றுவேன். இதற்கெல்லாம் பிரதியாக நான் உன்னிடம் கேட்பது மனைவி என்ற ஸ்தானத்தில் அமர்ந்து அன்பையும் தோழமையையும் எனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றுதான் கமலா! அபரிமிதச் செல்வம் என்ற கடலுக்கு மத்தியில் தனிமை என்ற ஏகாந்தத் தீவில் இருக்கிறேன் நான். என்னிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுவாயா?"


கமலாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்களில் கருணை பொங்கியது. அதே நேரத்தில் தன்னால்கூட ஒருவருக்கு உதவ முடியும். தன்னிடம்கூடக் கெஞ்சிக் கேட்கிற மாதிரியாக ஏதோ ஓர் அம்சம் இருக்கிறது என்ற எண்ணத்தில் கர்வம் எட்டிப் பார்த்தது!


'முடியாது என்று முகத்தில் அடித்ததுபோல் இவருக்குப் பதில் கூறி விடுவது பெரிய காரியம் இல்லை. பிறகு அம்மா அப்பாவின் கோப தாபங்களுக்கு ஆளாகாதிருக்க வீட்டை விட்டு ஓடிவிடுவதும் பெரிய விஷயமல்ல.


அப்படி ஓடிச் சென்ற பிறகு பிச்சை எடுப்பதோ அல்லது வேலை செய்து பிழைப்பதோ கூடச் சிரமமில்லை. ஆனால் அப்படித் தன்னந்தனியாகப் பாதுகாப்பின்றி உலகில் வாழும் போது தன்னைப் புதிய ஆபத்துக்கள் சூழாது என்பது என்ன நிச்சயம்? இந்த யுத்த காலத்தில் உணவுக்குத்தான் பஞ்சமே யொழியக் கயவர்களுக்கா பஞ்சம்? இந்தப் பாழும் உலகையே துறந்து செத்தொழியலாம்தான் ஆனால் அதனால் என்னத்தைச் சாதித்ததாகும். எதை நிரூபித்ததாகும்? அதைவிட....அதைவிட....'


ஒரு முடிவுக்கு வந்தவளாக ரங்கநாத முதலியாரை நிமிர்ந்து பார்த்தாள் கமலா.


"நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்வீர்கள் என்றால் நான் இந்தத் திருமணத்துக்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறேன்" என்றாள்.


"என்ன?" என்று கேட்டார் முதலியார்.


"என்னைப் படிக்க வைக்க வேண்டும். எஸ். எஸ். எல். ஸி மட்டுமில்லை. அதற்கு மேலே கல்லுரிப் படிப்பும் நான் பெற வேண்டும். டாக்டராக அல்லது வக்கீலாக என்னை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த ராமப்பட்டணத்திலேயே எல்லோரும் அதிசயிக்க நான் தொழில் நடத்த வேண்டும். செய்வீர்களா?"


ரங்கநாத முதலியார் தாம் சற்றும் எதிர் பார்க்காத இந்தக் கோரிக்கையைக் கேட்டுச் சில விநாடிகள் பிரமித்துப் போனார். பிறகு பெரிதாகச் சிரித்தார்.


"எதற்குச் சிரிக்கிறீர்கள்? பைத்தியக்கார ஆசை என்றா?"


"சேச்சே! அதெல்லாம் இல்லை, கமலா. நீ கோரிக்கை என்றதும் நான் ஏதேதோ அபத்தமான கற்பனைகளில் இறங்கிவிட்டேன். உன்னுடைய பரிசுத்தமான மனத்தை உணராத மூடனாக, சொத்தையெல்லாம் உன் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று நீ கேட்கப் போகிறாய் என்று நினைத்து விட்டேன். என்னை மன்னித்துவிடு, கமலா. இத்தனை எளிய, சாமானியக் கோரிக்கை என்றதும் மகிழ்ச்சி தாங்கவில்லை எனக்கு. கமலா! டாக்டருக்கு உன்னைப் படிக்க வைப்பது மட்டுமில்லை. நீ பட்டம் பெற்று வந்ததும் தலைவியாக விளங்கிப் பணியாற்ற இந்த ராமப்பட்டணத்தில் ஒரு தர்ம ஆஸ்பத்திரியே கட்டித் தருகிறேன். போதுமா?"


கமலா சட்டென்று கிழக்கு முகமாக அவர் முன் விழுந்து வணங்கினாள். அவள் நிமிர்ந்த போது அவரது வலக்கரம் அவள் சிரத்தைத் தொட்டு ஆசிர்வதித்தது.


விவாதங்கள் (4)