அத்தியாயம் 1

1. முன்னோர்கள்

தமிழ்நாட்டைப் பல மன்னர்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுக்குள்ளே மிகப் பழங்காலந்தொட்டு இடைவிடாமல் ஆண்டு வந்தவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள். இந்த மூவேந்தர்களின் பழைமையை, “படைப்புக் காலந்தொட்டே இருந்து வருபவர்கள்” என்று சொல்லிப் புலவர்கள் பாராட்டுவார்கள். தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மண்டலம், பாண்டிய மண்டலம், சேர மண்டலம் என்பவை அவை. அவற்றை ஆண்டுவந்த மன்னர்கள் மூவரையும் முடியுடை மூவேந்தர் என்று இலக்கியம் கூறும். அவர்களுடைய தலைமையின் கீழும், தனியேயும் பல சிறிய அரசர்கள் சிறிய நாடுகளைத் தங்கள் ஆட்சிக்குரிமையாக்கி ஆண்டு வந்ததுண்டு; ஆனால் அவர்களுக்கு முடி அணியும் உரிமை இல்லை. பழங்கால முதல் தமிழ்நாட்டை ஆண்டு வந்த சேர, சோழ, பாண்டியர்களுக்கே அந்த உரிமை இருந்தது.

இந்த மூன்று மன்னர்களுக்கும் தனித்தனியே அடையாளப் பொருள்கள் இருந்தன. அவற்றில் சிறப்பானவை மாலையும் கொடியும். சேரன் பனை மாலையையும் விற்கொடியையும் உடையவன். சோழன் ஆத்தி மாலையையும் புலிக்கொடியையும் உடையவன். பாண்டியன் வேப்ப மாலையையும் மீன் கொடியையும் உடையவன். எல்லோரும் அணிகிற மாலைகளை அணிந்து கொண்டால் தனியாக அடையாளம் தெரியாது. ஆகையால் நாட்டில் உள்ள மக்கள் வழக்கமாக அழகுக்கும் இன்பத்துக்கும் அணிந்து கொள்ளும் மலர்மாலைகளை அவர்கள் தங்கள் அடையாள மாலையாக வைத்துக்கொள்ளவில்லை. பிறர் அணியாத மாலைகளாகத் தேர்ந்து தங்களுக்கு உரியனவாக்கிக் கொண்டார்கள். பனை மாலையையோ வேப்ப மாலையையோ ஆத்தி  மாலையையோ யாரும் மணத்துக்கென்றோ அழகுக்கென்றோ அணிகிறதில்லை. அவை, தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு உரியனவாகப் புகழ் பெற்றவை. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் இலக்கண நூலில் அவற்றின் பெருமையை அதன் ஆசிரியர் கூறியிருக்கிறார்.*

தமிழ்நாட்டின் வடக்கே உள்ள பகுதியைச் சோழ மன்னர்களும், தெற்கே உள்ள பகுதியைப் பாண்டிய அரசர்களும், மேற்கே மலை நாடு என்று வழங்கும் பகுதியைச் சேர,  வேந்தர்களும் ஆண்டு வந்தார்கள். மலைநாட்டில் சேரர் பரம்பரை இன்றும் இருந்து வருகிறது. இப்போது சேர நாட்டில் மலையாள மொழி வழங்கினாலும் அக்காலத்தில் தமிழே வழங்கியது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே அந்த நாடு இருந்தது.

சேர நாட்டின் தலைநகரம் வஞ்சி. இப்போது திருவஞ்சைக்களம் என்று வழங்கும் ஊரும் கொடுங்கோளூர் என்ற ஊரும் சுற்று வட்டாரங்களும் சேர்ந்த பெரிய நகரமாக விளங்கியது வஞ்சி. சேர அரசர்களின் அரசிருக்கை நகரமாகிய அங்கே அயல்நாட்டு வாணிகர்களும் வந்து மலைநாட்டு விளைபொருள்களை வாங்கிச் சென்றனர். அவர்கள் சரக்குகளை ஏற்றிச் செல்லுவதற்கு ஏற்றபடி முசிறி என்ற பெரிய துறைமுகப்பட்டினம் அந்நாட்டில் இருந்தது. சேரர்களுடைய பெருமையை மட்டும் தனியே பாடுகிற சங்க காலத்து நூல் ஒன்று இருக்கிறது. அதற்குப் பதிற்றுப்பத்து என்று பெயர். அது பத்துச் சேர அரசர்களின் புகழைப் பத்துப் பத்துப் பாடல்களால் வெளியிடுகிறது. ஒவ்வொரு பத்தையும் ஒவ்வொரு புலவர் பாடி, சேர மன்னர் வழங்கிய பரிசைப் பெற்றார். சேர மன்னர்களிற் சிலர் தமிழ்ப் புலமையிற் சிறந்தவர்களாக இலங்கியதுண்டு, அவர்கள் பாடிய தண்டமிழ்ப் பாடல்கள் சிலவற்றை இன்றும் நாம் படித்து இன்புறலாம்.

இவ்வாறு புகழுடன் விளங்கிய சேரர் குலத்தில் மிகப் பழைய காலத்தில் ஒரு சிறு கலகம் விளைந்தது. சேரர் குலத்து அரசுரிமையைப் பெறும் திறத்தில் சகோதரர்கள் இருவரிடையே விளைந்தது அது. ஒவ்வொருவரும் அரசுரிமை தமக்கே என்று வாதிட்டனர்; போர் புரிந்தனர். இறுதியில் ஒருவரே வென்றார். தோல்வியுற்றவர் தம்முடைய படைபலத்தைக் கொண்டு சேர நாட்டை அடுத்துள்ள தகடூர் என்ற ஊரில் தங்கி, அதையே தமக்குரிய தலைநகராக ஆக்கிக்கொண்டார். கோட்டை கொத்தளங்களை அமைத்துச் சிற்றரசராக வாழலானார். சேரன் வழி வந்தவர் என்ற பெருமையை விட அவருக்கு மனம் இல்லை. ஆதலால் தமக்கும் பனைமாலையையே அடையாள மாலையாக வைத்துக் கொண்டார். அப்படி ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தவரின் பெயர் அதிகமான் என்பது; அதியமான், அதியன் என்றும் அவரைச் சொல்வதுண்டு. அவருக்குப் பின் தகடூரை இராசதானியாகக் கொண்டு ஆண்டவர்களை அதியன் குலத்தினர் என்றும், அதியரையர் என்றும் பெயர் சூட்டி மக்கள் வழங்கி வந்தார்கள். அவர்களுடைய ஆட்சியில் இருந்தது குதிரை என்னும் மலை. புலவர்கள் அதை ஊராக் குதிரை என்று புகழ்ந்தார்கள். “மக்கள் ஏறிச் செலுத்தும் குதிரை அன்று இது; இது மலை”* என்பதை நினைப்பூட்டி அப்படிப் பாடினார்கள்.

அதியர் குலத்தில் வந்தவர்கள் சிவபக்தி நிரம்பியவர்கள்; மற்ற தெய்வங்களையும் வழிபட்டு வேண்டிய கடமைகளை ஆற்றுகிறவர்கள். வேள்வி செய்து தேவர்களுடைய அன்பைப் பெற்றவர்கள். சிவபிரானைப் பூசை செய்கையில் அப்பிரானுக்கு அருச்சனை செய்த வில்வத்தைப் பூசை முடிந்த பிறகு தம் தலையில் வைத்துக்கொள்வது ஒரு வழக்கம். அதியர் குல மன்னரின் தலைவர் அப்படிச் செய்தார். பூசை முடிந்து வெளியிலே வந்து வேறு செயல்களை ஆற்றும் பொழுதும் அவர் முடியில் அந்தக் கூவிளம் விளங்கியது. நாளடைவில் அதுவே அவருக்குரிய அடையாளக்கண்ணியாகி விட்டது. மார்பிலே தம் குலப் பழமையை நினைவூட்டும் பனைமாலையையும் தலையிலே தம் சிவபக்திச் சிறப்பைக் காட்டும் கூவிளங் கண்ணியையும் அணிந்து வந்தார்.* பின் வந்த அரசர்களும் இந்த வழக்கத்தையே மேற்கொண்டனர்.

இந்தக் குலத்தில் வந்த ஒரு மன்னர் தம் நாட்டில் வேளாண்மையை வளப்படுத்த எண்ணினார். தகடூருக்கு அருகில் வாய்ப்பான பேராறு ஏதும் இல்லை. ஏரிகளும் குளங்களும் இருந்தன. அவற்றால் நெற்பயிர் விளைந்தது. நிலத்துக்கு நெல்லும் கரும்பும் சிறப்பை அளிப்பவை; “நிலத்துக் கணி என்ப நெல்லும் கரும்பும்” என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். அக்காலத்தில் நீர்வளம் மிக்க சோழ நாட்டிலும், பாண்டி நாட்டில் சில பகுதிகளிலும் கரும்பைப் பயிர் செய்து வந்தார்கள். தம்முடைய நாட்டிலும் நெல்லைப் போலக் கரும்பையும் கொண்டு வந்து பயிராக்கி நலம் செய்ய வேண்டுமென்று அந்த மன்னர் எண்ணினார். சோழ நாட்டுக்குத் தக்கவர்களை அனுப்பி அங்குள்ள வேளாளர்களை அழைத்து வரச் செய்தார். அவர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து கரும்பைப் பயிர் செய்யும் முறைகளைத் தெரிந்துகொண்டார். சிறந்த கரும்புக் கரணைகளைச் சோழ நாட்டிலிருந்து கொண்டுவரச் செய்து பயிர் செய்தார். அவை நன்றாக வளர்ந்தன. அதுகாறும் காணாத புதுமையாக அதியர் நாட்டில் கருப்பந்தோட்டங்கள் ஓங்கி வளர்ந்தன. இதனை ஓர் அதிசயமாகவே மக்கள் பாராட்டினார்கள். அந்த வேந்தரை, “கரும்பு தந்த காவலர்” என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.*

இந்தக் குலத்தில் தோன்றிய மன்னர்கள் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள். கொங்கு நாட்டின் பல பகுதிகளைத் தம்முடைய ஆட்சிக்கு உட்படுத்தினார்கள். மேற்குப் பகுதியாகிய மலை நாட்டில் அவர்களுடைய அரசு பரவாவிட்டாலும் கிழக்குப் பகுதியில் அது விரிந்தது.

- தொடரும்

* தொல்காப்பியம், புறத்திணையியல், 5.

* புறநானூறு 168

* புறநானூறு 158

* புறநானூறு 99


விவாதங்கள் (2)