அத்தியாயம் 1

காதல் டைரிக் குறிப்பு

உறங்காதிருந்தேன் - சுகம் - நினைவுகள்!
உறங்கிப்போனேன் - சுகம் - கனவுகள்!

து ஒரு சூப்பர் மார்க்கெட்.

கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கம் மக்கள் மௌனமாக எல்லாத் திசைகளிலும் சிறிய டிராலிகளைத் தள்ளிச் சென்று பொருள்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சீருடை அணிந்த பணிப்பெண்கள் கம்ப்யூட்டர்களில் மும்முரமாக பில் போட, எல்லா கம்ப்யூட்டர்களின் முன்பும் ஒரு சின்ன ‘க்யூ’ இருந்தது.

பிரெட், ஜாம் மற்றும் சில அயிட்டங்களை அம்மா லிஸ்ட் எழுதிக் கொடுத்திருந்ததை பாக்கெட்டில் பல காகிதங்களுக்கு நடுவிலிருந்து தேடி எடுத்தான் அரவிந்த்.

கண்ணாடிக் கதவு தள்ளி உள்ளே வந்தான். ஹெல்மெட்டை ஒரு புறாக்கூண்டில் வைத்துவிட்டு பிளாஸ்டிக் டோக்கன் பெற்றுக்கொண்டான். ஒரு வலைக்கூடையை எடுத்துக்கொண்டு மளிகைப் பகுதிக்கு வந்தான்.

லிஸ்ட் பார்த்து ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துக்கொண்டிருந்தபோது,

“எக்ஸ்க்யூஸ் மீ.”

இந்த இரண்டு வார்த்தைகளை இதைவிட இனிமையாக, மென்மையாக யாராலும் உச்சரிக்க முடியாது.

அரவிந்த் திரும்பிப் பார்த்தான். டிராலியுடன் வழிக்கான விழிக் கெஞ்சலுடன் நின்றிருந்த அவளைப் பார்த்தவன், சில விநாடிகளுக்குப் பிறகுதான் சுதாரித்து ஒதுங்கி வழிவிட்டான்.

அவள் தள்ளிக் கொண்டு நகர, அவள் முகம் மறைந்து முதுகு தெரியும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பார்வையைத் திருப்பினான்.

இரண்டு விநாடிகளில் அவள் அவனைக் கடந்திருந்தாலும், ஜன்னலைத் திறந்ததும் முகத்தில் கவிதை எழுதும் மார்கழிக் காற்றாக, அவள் முகம் பார்த்ததும் சில்லென்று மாறிப்போனது மனசு.

இவளை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே...

எங்கே? எப்போது?

மூளை சுறுசுறுவென்று வினாக்களை எழுப்பி நினைவடுக்கின் பக்கங்களைப் பரபரவென்று புரட்டத் துவங்கியது.

தூரத்தில் நின்ற அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தான். முதுகு காட்டி நின்ற அவள், பணிப் பெண்ணிடம் ஏதோ தலையை ஆட்டிக் கேட்க, ‘யு’ கட் செய்து வகிடில்லாமல் தொகுத்து பட்டை மரக்கிளி வைக்கப்பட்ட கூந்தல் அழகாக அசைந்தது. அவளின் புடவைக் கட்டலில் நேர்த்தியும் நளினமும் இருந்தன. ஒரு மரியாதையைக் கேட்டுப் பெற்றது.

கண்டிப்பாக இவளை நான் பார்த்திருக்கிறேன். ச்சே! ஏன் உடனே நினைவிற்கு வர மறுக்கிறது?

தொலைக்காட்சி நிகழ்ச்சி எதிலோ வந்தவளா? நிகழ்ச்சித் தொகுப்பாளரா? ஏதாவது செய்தித்தாளில், புத்தகத்தில் பார்த்தேனா? இசை, நாட்டியம், கதை, கவிதை எதிலாவது இவள் பிரபலமா?

சினிமா தியேட்டரில் எனக்கு டிக்கெட் வாங்கித் தந்தவளா? சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாப்கார்ன் வாங்க என்னிடம் சில்லறை மாற்றியவளா? பேங்க்கில் பணம் எடுத்தபோது அடுத்த டோக்கன்காரியா? ரயில்வே ரிசர்வேஷன் கியூவில் பேனா இரவல் கொடுத்தேனா?

ச்சே! ஞாபகம் வரவில்லையே... மீண்டும் இருமுறை அவள் முகத்தைப் பார்த்தால் ஞாபகத்திற்கு வருமோ? மறுபடி அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்றால் அவளைத் தொடர்ந்து, அவள் போகின்ற பகுதிக்கெல்லாம் போக வேண்டும். நேரடியாகப் பார்ப்பதும் நாகரீகமில்லை. அவளைக் கவனிக்காதது போல யதேச்சையாக திரும்பி அவள் முகத்தைக் கவனிக்க வேண்டும்.

இது தேவைதானா? அவள் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே. அதனால் என்ன? அவளை மீண்டும் பார்க்க நான் எதற்குத் துடிக்க வேண்டும்?

மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும்போதே கால்கள் அவள் நின்ற திசை நோக்கி நடக்கத் துவங்கி விட்டன.

அவள் இப்போது ஒப்பனைப் பொருட்களின் பகுதியில் நின்று டிசைன் ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளைத் தேர்வு செய்து கொண்டிருக்க, பத்தடி தள்ளி நின்று இவன் கைக்குக் கிடைத்த ஒரு ஷேவிங் க்ரீமை எடுத்துப் பார்த்தபடி, திரும்பி அவள் முகத்தைப் பக்கவாட்டுத் தோற்றத்தில் பார்த்தான்.

அந்தப் பளீர் வெண்மையும் மென்மையும் முதுகுத்தண்டில் ஐஸ்கட்டிகளின் ஊர்வலம் நடத்த, உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஆனால் ஸ்பிரிங் வைத்த கதவு போல உடனே அவள் பக்கம் பார்வை திரும்பிக் கொண்டது.

என்ன ஆயிற்று எனக்கு? ஏன் இப்படித் தவிக்கிறேன்? ஏன் உள்ளே நூறு வயலின்கள் இசைக்கப்படுகின்றன? ஏன் பறவைகள் கிரீச்சிடுகின்றன? ஏன் சந்தோஷ ஊற்று கொப்பளிக்கின்றது?

“இந்த ஷேவிங் க்ரீம் புதுசா அறிமுகப்படுத்தினது சார். ரொம்ப நல்லா இருக்கும்” என்றாள் அந்தப் பணிப்பெண்.

தான் நீண்ட நேரமாக அந்த ஷேவிங் க்ரீமைக் கையில் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வராததை உணர்ந்து, “எக்ஸ்பைரி தேதி பார்த்தேன்” என்று வைத்து விட்டான்.

“ஷேவிங் க்ரீமுக்கு ஏது சார் எக்ஸ்பயரி?”

“ஆமாம். கிடையாது… ஸாரி” என்று வழிந்து விட்டு நகர்ந்தான்.

அவள் இப்போது வேறு பகுதிக்குச் செல்ல, அவளைத் தொடர்வதை அவனால் தடுக்க முடியவில்லை.

நேராக அவளிடமே சென்று கேட்டுவிட்டால் என்ன? இதில் என்ன தவறு இருக்கிறது?

அவளருகில் அரவிந்த் வந்தான்.

“எக்ஸ்க்யூஸ் மீ.”

அவள் திரும்பிப் பார்த்தாள். 

“யெஸ்?”

“நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனா சட்டுனு ஞாபகத்துக்கு வரலை. நீங்க...”

அவள் லேசாக முறைத்தாள்.

“நான் யாரா இருந்தா உங்களுக்கென்ன?”

“அதில்லை. எங்கேயோ பார்த்திருக்கேன்னு தவிப்பா இருக்கு.”

“மிஸ்டர்! உங்களுக்கு இப்ப என்ன, என் பேரும் அட்ரசும் தெரியணுமா? தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க? நான் போற இடத்துக்கெல்லாம் என் பின்னாடியே வந்து லவ் லெட்டர் தரணுமா? நான்சென்ஸ்! இதெல்லாம் ரொம்ப ஒல்டு அப்ரோச்! கெட் லாஸ்ட்.”

அவள் விருட்டென்று விலகிச் செல்ல...

அரவிந்த் தன் கற்பனை உரையாடலிலிருந்து மீண்டான்.

நேரடியாகப் போய் பேசினால் இப்படி முகத்திலடிப்பது போல அவள் பதில் பேச வாய்ப்பிருக்கிறது.

‘உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே’ என்பது ஒரு துவக்கப் பேச்சுக்காக பலர் சொல்கிற பொய்தான். ஆனால்... நான் நிஜமாகவே எங்கேயோ பார்த்திருக்கிறேனே…

அவள் இப்போது பிஸ்கெட்டுகள் இருந்த பகுதியில் உயரத்தில் இருந்த ஒரு க்ரீம் பிஸ்கெட் பாக்கெட்டை எடுக்க எம்பி அப்படியும் எட்டாமல் போக, பணிப்பெண்ணின் உதவிக்காக சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அப்போது அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால், அரவிந்த் தன் உயரத்திற்கு அந்த பிஸ்கெட் பாக்கெட் சுலபத்தில் எட்டும் என்று உணர்ந்ததால், சட்டென்று எடுத்து அவளிடம் நீட்டினான். 

“தேங்க்யூ.” புன்னகையுடன் வாங்கி டிராலியில் போட்டுக்கொண்டு அவள் நகர்ந்தாள்.

தன் முகம் பார்த்து அவள் சொன்ன வார்த்தைகள் மனதிற்கு மலர் ஒத்தடம் கொடுத்தன.

அவள் இன்னொரு பகுதிக்கு டிராலியைத் திருப்பியபோது அவளின் பார்வை இவனைத் தடவிச் சென்றதை உணர்ந்தான். 

நான் அவளின் நடவடிக்கைகளையே கவனித்துக் கொண்டிருந்ததால்தான் அந்த பிஸ்கெட்டை எடுத்துக் கொடுக்க முடிந்தது என்பதை அவள் தாமதமாக உணர்ந்திருக்க வேண்டும்.

‘என்னை அவன் கவனித்திருக்கான்’ என்கிற உள்ளுணர்வின் வெளிப்பாடாக, ‘என்னைக் கவனித்த இவன் யார்?’ என்கிற கேள்வியின் விடை தேடலாகத்தான் அந்த மறுபார்வை இருந்திருக்க வேண்டும்.

இதற்கு மேல் அவளைத் தொடர்ந்து செல்வதற்கு சங்கடமாக இருந்தது. ‘நான் உன் பின்னாலேயே வரவில்லை. யதேச்சையாகக் கவனித்து உதவினேன்’ என்று ஸ்தாபிக்க வேண்டுமென்றால் இனி தொடரக் கூடாது.

அவள் இப்போது பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து விட்டாள். ஓர் ஏமாற்ற அலை உள்ளே வீசியது.

கடந்த பல நிமிடங்களாக அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது சுவாரசியமாகவும் இருந்தது, அவஸ்தையாகவும் இருந்தது.

பார்த்திருப்பதாக ஞாபகம் வருகிறது. எங்கே, எப்போது என்று மட்டும் நினைவுக்கு வந்து தொலைக்க மாட்டேனென்கிறதே. தேவையற்ற எத்தனையோ விஷயங்களை உடனே நினைவுபடுத்தும் மூளையே, இவள் விஷயத்தில் ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்? அரவிந்த் பில் போடுகிற பகுதிக்கு வந்தான். நான்கு வரிசைகளில் அவள் நின்றிருந்த வரிசைக்குத்தான் கால்கள் நடத்திச் சென்றன. அந்த வரிசையில் இரண்டாவது நபராக அவள் நின்றிருந்தாள். நடுவில் இரண்டு பேர் நிற்க, ஐந்தாவது நபராக இவன் நின்றிருந்தான். அவளுக்கு நேர் பின்னால் நின்ற ஜீன்ஸ் இளைஞன் மேல் அர்த்தமில்லாமல் கோபம் வந்தது. நியாயமான காரணத்தோடு அவளின் அருகில் நிற்கின்ற வாய்ப்பு தனக்குக் கிடைக்காமல் போனதில் ஓர் ஏமாற்றம் உணர்ந்தான்.

வரிசை நகர்ந்து அவள் தன் நீளமான மெல்லிய விரல்களால் தன் டிராலியில் இருந்த பொருட்களை எடுத்து மேஜை மேல் வைத்து விட்டு, கைப்பை திறந்து பணம் எடுத்து பில் தொகை சொல்லப்படுவதற்குக் காத்திருந்தாள். அவள் செயல்களில் அவசியமற்ற பதற்றமில்லை. நளினமிருந்தது. கைப்பையின் ஜிப்பை சரக்கென்று திறக்கவில்லை. அந்த நிதானத்தில் ஒரு ரசனை இருந்தது.

“மேடம், நானூத்திப் பத்து ரூபா. ஐந்நூறு ரூபாய்க்கு பர்ச்சேஸ் செஞ்சா இந்த பெயிண்டிங் ஃப்ரீ மேடம். இன்னும் தொண்ணூறு ரூபாய்க்கு ஏதாவது எடுக்கறீங்களா?”

அந்தப் பணிப்பெண் காட்டிய லாமினேட் செய்யப்பட்ட அழகான கோட்டுச் சித்திரத்தைக் கையில் வாங்கிப் பார்த்தாள் அவள்.

“பியூட்டிஃபுல்! ஆனா நான் எல்லாம் வாங்கி முடிச்சுட்டேனே. சரி, பரவாயில்லை. நீங்க பில்லை க்ளோஸ் பண்ணிக்கங்க.”

அந்த ஓவியத்தை மீண்டும் இருமுறை பார்த்துவிட்டு வைத்தாள். அரவிந்த் அவசரமாக தன் வலைக்கூடைக்குள் பார்த்தான். தான் வாங்கியுள்ள பொருட்கள் கண்டிப்பாக நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வரும் என்று தோன்றியது. அதே பில்லில் இவற்றையும் போட்டால் பில் தொகை ஐநூறைத் தாண்டும். அப்போது அந்த ஓவியம் இலவசமாகக் கிடைக்கும். அவள் ரசித்த அந்த ஓவியத்தை அவளிடமே கொடுத்துவிடலாம்.

அவளிடம் கேட்டுப் பார்க்கலாமா என்று துடிப்பேற்பட்டாலும் உடனே அதைத் தடுத்தான். இது அதிகப்பிரசங்கித்தனமாகப்படாதா? வேண்டுமென்றே வழிவது போலிருக்காதா?

‘மைண்ட் யுவர் பிசினஸ்’ என்று சொல்லிவிட்டால்?

அரவிந்த் பேசாமலிருந்துவிட, அவள் தன் பொருட்களின் பாலிதீன் பைகளோடு வாசலை நோக்கி நடந்தாள். இவன் பார்வையால் தொடர்ந்தான். வெளியே மழை பெய்துகொண்டு இருக்க, அவள் நின்று மழை குறையக் காத்திருந்தாள். இவன் முறை வந்தபோது ஒரு தைரியத்தில்,

“எக்ஸ்க்யூஸ் மீ. முதல்ல நானூத்திப் பத்து ரூபாய்க்குப் பில் போட்டீங்களே, அந்த பில்லோட இதையும் சேர்த்துப் போட முடியுமா?” என்றான்.

“ஏன் அப்படிப் போடணும்? அந்த பில்லை க்ளோஸ் பண்ணியாச்சே!”

“கம்ப்யூட்டர்லே மறுபடி திருத்த முடியுமே, அந்த ஒவியம் கிடைக்கும். அவங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. அவங்ககிட்ட கொடுக்கலாம்னு பார்த்தேன்.”

“அவங்களுக்காக நீங்க எதுக்கு சார்…”

“வந்து. ஷி இஸ் மை லவர். ஒரு சின்ன ஊடல். அதான் பேசாம இருக்கோம். இந்த உதவி செஞ்சீங்கன்னா இந்த ஓவியத்தைக் கொடுத்து அவளை சமாதானப்படுத்துவேன். ப்ளீஸ்…”

தனக்கு இப்படியெல்லாம் சரளமாகப் பொய் பேச வருமா என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“ஓ.கே. சார், நான் உதவி பண்றேன்.”

அந்தப் பெண் அவளின் பில்லில் இதையும் சேர்த்து, ஓவியத்தைத் தர, இப்போது தனது பொருட்களுடன் மற்றும் ஓவியத்துடன் வாசலுக்கு நடந்தான் அரவிந்த். அந்த கம்ப்யூட்டர் பெண் கண்டிப்பாகப் பார்ப்பாள். ‘இதை எப்படி, என்ன சொல்லி அவளிடம் ஒப்படைக்கப் போகிறேன்? அவள் என்ன சொல்வாள்?’ அவளை நோக்கிப் பதறும் உள்ளத்துடன் மெதுவாக நடந்தான் அரவிந்த்.

- தொடரும்


விவாதங்கள் (95)