அத்தியாயம் 1

காற்றிலே மிதந்து வரும் கானம்போல் இனிமையாக இருந்தது அவள் வருகை. அழகிய ஆடையின் தலைப்பு பின்னாலே பறந்தாட, கண்கள் அப்படியும் இப்படியும் சுழன்றாட, காதுகளில் லோலக்குகள் அசைந்தாட அவள் அடி எடுத்து வைத்தது பார்ப்பவர் மனதைத் திண்டாடத் தூண்டியது. எழிலுக்கு எழிலூட்டும் “ஸேரி” யின் முன் கொசுவம் புரண்டு அசைந்து அவளது அழகிய பாதங்களைத் தொட்டுத் தடவித் துவண்டு, அவளது அழகு நடையால் அங்குமிங்கும் அலைபாய்ந்த வசீகரம் அவளைக் கண்டு நின்றவர்களின் உள்ளத்தில் எவ்வளவோ எண்ண அலைகளை எழுப்பின.

தனது அழகை அவள் உணர்ந்து, தன் எழில் மற்றவர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்து, ஒயிலாக நடந்துகொண்டிருந்தாள். அவளது கறுமணிக் கண்கள் பாதையோரங்களில் இருந்தவர்களது தன்மையை விழுங்கப் பாயும். ஆள்விட்டு ஆள் தாவித் துள்ளும். ஆடம்பரக்காரன் எவன் மீதாவது படியும். செல்லப்பிள்ளை ஒருவனை வசியம் செய்யும் வலையெனப் பார்வை பரப்பி மீளும்.

அவள் இன்பக் கவிதை. சிங்காரியான அவளுக்கு எப்படி மினுக்கிக் குலுக்கி காந்தமாய்த் திகழ வேண்டும் எனும் ஈலை நன்கு கைவந்திருந்தது. அந்த வீதியில் தினந்தோறும் மாலை வேளையில் அவள் தனக்குத்தானே விளம்பரமாகத் தளுக்கித் திரிந்தாள்.

வழியோடு போகிறவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவளை ஒரு தரமாவது பாராமல் போக முடியாது. அவள் வனப்பை ஒரு முறை ரசித்த கண்கள் மீண்டும் மீண்டும் அவளைச் சுற்றி வளைய வரத் தவறாது. வீட்டு ஜன்னலின் பின் நின்றும், மாடியிலிருந்தும், உலாவி வருகின்ற உல்லாசக்காரியைக் கண்டு களிக்கக் காத்திருப்பவர்களுக்கு குறைவே கிடையாது. அவள் பலரது பார்வைக்கு விருந்து. எண்ணற்றோரின் பேச்சுக்குப் பொருள். சிலரது ஏக்கத்துக்கு ஒரு தூண்டுகோல்.

அடிக்கடி அவளைப் பார்த்தவர்கள் அவளைப் பற்றி ஆராய வேண்டும் என எண்ணினால் தவறே கிடையாது. முதல் முறை பார்த்ததுமே, “பிரதர், இவ யாரு?” என்று பக்கத்தில் இருப்பவரிடம் கேளாத ரசிகர் இருந்தால், அவரது அருகில் ரசிக சிகாமணி ஒருவருமே இல்லை என்றுதான் அர்த்தம்.

“என்ன, வெளியே போகலாமா இப்படி சும்மா ஒரு வாக்?”

“போகலாம். ஆனால் இன்னும் அந்திமந்தாரை வரக் காணோமே ஐயா!”

“பின்னே என்ன அவசரம்! மெதுவாப் போகலாம். அந்தியிலே மந்தாரை பூக்கலேன்னா அதற்கு மதிப்பு ஏது!”

இது ஜாலி பிரதர்களின் சம்பாஷணை. வீதி மூலையிலே ஒய்யாரி வருகிறாள் என்றால் அந்தத் தெருவிலேயே பரபரப்பு ஏற்படும். இவள் யார்? இவள் யாராக இருக்கலாம் - இதுதான் எல்லோரது மனதிலும் கிடந்து விடையற்றுத் தவிக்கும் பிரச்னை.

“யாராக இருந்தால் என்ன? அவள் அழகி. அழகை எடுத்துக்காட்டி வனப்பு நிலா சிதறவல்ல சிங்காரி. சிங்காரத்தை நாலு சுவர்களுக்கிடையே, திரைகளுக்குப் பின்னே, நிறுத்திவிட மனமில்லாமல் ஊர்வலம் வருகிற ஒய்யாரி. அவள் பெயர் எதுவாகவும் இருக்கட்டுமே. நம்மைப் பொறுத்தவரையில் அவள் மோகினிதான்” என்றார் ஒருவர் ஒரு சமயம்.

“அது சரி. இவள் மிஸ் மோகினியா, மிஸஸ் மோகினியா? அல்லது…..”

“கற்பனைக்குக் கட்டுப்பாடும் கஞ்சத்தனமும் எதற்காக? அவள் மிஸ்ஸுதான்” என்று சீறினார் ஒரு ரசிகர்.

“எஸ்ஸு!” என்று ஆமோதித்தார் “ஸஹிருதயர்” ஒருவர்.

அவள் பெயர் எதுவாயினும், ஊர் எதுவாயினும், அவள் கதை என்னவே யாயினும், அவள் “மிஸ் மோகினி” என்றே பூஜிக்கப்பட்டாள் அழகுக் கலையன்பர்களால்.

(தொடரும்...)


விவாதங்கள் (13)