அத்தியாயம் 1

"வளருதே தீ"


பெஜவாடாவில் போட்ட திட்டம் ஒருவாறு நிறைவேறி விட்டது. அடுத்தாற்போல் என்ன? "ஒரு வருஷத்திற்குள் சுயராஜ்யம்" என்று காந்தி மகாத்மா சொன்னாரே? ஜூனமாதம் 30-ஆம் தேதியோடு அரை வருஷம் ஆகிவிட்டதே! மிச்சமுள்ள ஆறு மாதத்தில் சுயராஜ்யம் கிடைத்தாக வேண்டுமே? அதற்கு என்ன வழி? அடுத்த திட்டம் என்ன?

அடுத்த திட்டம் என்ன வென்பதைக் காந்தி மகாத்மா சொன்னார்: "(1) அன்னியத் துணி பகிஷ்காரம்; (2) மது விலக்கு;- இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றி வையுங்கள். இதற்குப் பிறகும் பிரிட்டிஷார் பணிந்து வரா விட்டால், கடைசி ஆயுதமான சட்டமறுப்பு இருக்கிறது. அதை வருஷக் கடைசியில் உபயோகிக்கலாம்" என்றார்.

ஜூலை மாதம் 28-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடிற்று. இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அங்கத்தினர்கள் அவ்வளவு பேரும் வெள்ளைக் கதர் உடையும் வெள்ளைக் கதர்க் குல்லாயும் அணிந்து வந்தார்கள். பெஜவாடா திட்டத்தை ஏறக்குறைய நிறைவேற்றிவிட்டோம் என்ற உற்சாகத்துடனும் பெருமிதத்துடனும் அவர்கள் வந்திருந்தார்கள். இதற்குள்ளே ஆங்காங்கு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளுக்குத் தேர்தல்கள் நடந்திருந்தன. வந்திருந்த அ.இ.கா. கமிட்டி அங்கத்தினர்களும் புதியவர்கள். மிகப் பெரும்பாலும் காந்தி மகாத்மாவிடம் பரிபூரண பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள். ஆகையால் இந்த அ.இ.கா கமிட்டிக் கூட்டம் பம்பாய்ப் பொது மக்களியையே பெருங்கிளர்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டுபண்ணியிருந்தது. பம்பாய் வாசிகள் தேசீய நெறி கொண்டிருந்தார்கள். எங்கே நோக்கினாலும் காந்தி குல்லா மயமாகக் காணப்பட்டது. தலைவர்கள் சென்ற இடமெல்லாம் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று ஜே கோஷம் செய்தார்கள். காந்தி மகாத்மாவைக் கடவுளின் அவதாரம் என்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குப் பம்பாய்வாசிகள் அவரிடம் பக்தி கொண்டு விட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போல் ஆடை ஆபரணங்கள் அணிவித்த காந்திஜியின் சித்திர படங்களும் வெளியாகியிருந்தன. இந்தப் படங்கள் பதினாயிரக் கணக்கில் செலவாயின.

இத்தகைய சூழ்நிலையில் பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடிக் காந்தி மகாத்மா கூறியபடி அன்னியத் துணி பகிஷ்காரத் தீர்மானத்தை ஒப்புகொண்டது. ஆகஸ்டு மாதம் 1உயிலிருந்து காங்கிரஸ்வாதிகளும் காங்கிரஸ் அநுதாபிகளும் பொதுமக்களும் அந்நியத் துணியை அடியோடு பகிஷ்கரிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது.

மேற்படி தீர்மானத்தைக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பதற்காக மகாத்மா காந்தி ஆகஸ்டுமீ 1உ பம்பாயில் ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். சௌபாத்தி கடற்கரையில் பம்பாய் நகரமே திரண்டு வந்துவிட்டது போன்ற ஜன சமுத்திரம் கூடியிருந்தது. சுமார் ஐந்து லட்சம் ஜனங்களுக்குக் குறையாது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்ற இரண்டு தினங்களாகப் பம்பாயில் வீடுவீடாகச் சென்று அன்னியத் துணிகளையெல்லாம் கொண்டுவந்து கடற்கரையில் பிரசங்க மேடைக்குக் கொஞ்ச தூரத்தில் குவித்திருந்தார்கள். காந்தி மகாத்மா அந்தக் கூட்டதில் பேசினார்.

"இந்தியாவில் அடிமைத்தனம் அன்னியத் துணி மூலமாகவே வந்தது. பிரிட்டிஷார் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு தான் இந்தியாவுக்கு வந்தார்கள், வந்த இடத்தில அரசியல் ஆதிக்கத்தை ஸ்தாபித்து கொண்டார்கள். நம்முடைய அடிமைத்தனத்துக்கு அறிகுறியா யிருப்பது அன்னியத் துணிதான். நம்முடைய அவமானத்தின் சின்னம்மாயிருப்பதும் அன்னியத் துணியே. இந்தியாவின் தரித்திரத்துக்குக் காரணம் அன்னியத் துணி.ஆகையால், இங்கே தொண்டர்கள் கொண்டு வந்து குவித்திருக்கும் அந்நியத் துணிக் குவியலில் நான் இப்போது தீ மூட்டப் போகிறேன். இந்தக் கூட்டத்தில் யாரேனும் உடம்பில் விதேசித் துணி அணிந்திருந்தால் அதை நான் மூட்டும் தீயிலே கொண்டு வந்து போட்டு விடுங்கள். இந்த விதேசித் துணிக் குவியல் எரிந்து சாம்பராவது போல் நம்முடைய அடிமைத்தனமும் எரிந்து சாம்பராகட்டும்!"

இவ்விதம் மகாத்மா காந்தி பேசிவிட்டு விதேசித் துணிக் குவியலில் தீக்குச்சியைக் கிழித்து நெருப்பு வைத்தார். பெரிய பிரம்மாண்டமான போர் போலக் கிடந்த அன்னியத் துணிக்குவியல் எரிய ஆரம்பித்தது. கூட்டத்திலிருந்தவர்களில் அநேகர் தாங்கள் அணிந்திருந்த அன்னியத் துணிச் சட்டைகளையும் அன்னிய நாட்டுக் குல்லாய்களையும் கொண்டு வந்து எரிகிற தீயில் போட ஆரம்பித்தார்கள். ஆயிரம் பதினாயிரம் குல்லாக்களும் சட்டைகளும் வேறு ஆடைகளும் வந்து விழுந்தன. 'நீ முந்தி, நான் முந்தி' என்று ஜனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை யொருவர் முண்டிக்கொண்டு வந்து, குல்லாய்களையும் துணிகளையும் நெருப்பிலே போட்டார்கள். சிலர் தாங்கள் வைத்திருந்த குடையின் துணி அன்னியத் துணியினால் ஆனது என்ற காரனத்தினால் குடைகளையும் தீயில் வீசி எறிந்தார்கள்.

"வானை நோக்கிக் கைகள் தூக்கி வளருதே தீ! தீ! இந்நேரம்!"

என்று பாரதியார் வேள்விப் பாட்டில் பாடியிருப்பதை லட்சக் கணக்கான பம்பாய் வாசிகள் பிரத்யட்சமாகக் கண்டு புளகாங்கிதம் அடைந்தார்கள். நூற்றைம்பது வருஷ காலமாக இந்தியாவைப் பீடித்திருந்த அன்னிய ஆட்சியும் அடிமைத்தனமும் அந்த விதேசித் துணிக் குவியலைப்போல் பொசுங்கிப் போய் விட்டதாகவே எண்ணிக் குதூகலத்துடன் வீடு திரும்பினார்கள்.

* * *

சென்ற 1920-ஆம் வருஷம் இதே ஆகஸ்டுமீ 1உ தான் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். காந்திஜியின் யுத்த சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு அளித்திருந்த ‘கெயிஸரி ஹிண்ட்’ என்னும் அபூர்வமான கௌரவப் பதக்கத்தைச் சர்க்காருக்கே திருப்பி அனுப்பி விட்டதாக அன்று பம்பாய் பொதுக்கூட்டத்தில் அறிவித்து விட்டுத் தேசமெங்கும் சுற்றுப்பிரயாணம் கிளம்பினார்.

அதேமாதிரி இந்த 1921 ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதியன்று பம்பாயில் அன்னியத் துணிக் குவியலைக் கொளுத்திவிட்டுச் சுற்றுப் பிரயாணம் தொடங்கினார். மௌலானா முகம்மதலியையும் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டர். பிஹார், அஸ்ஸாம், வங்காளம் ஆகிய மாகாணங்களில் சுற்றுப்பிரயாணம் செய்தார். காந்தி மகானும் மௌலானா முகம்மதலியும் சென்ற இடமெல்லாம் திரள் திரளாக மக்கள் கூடினார்கள். பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மலை மலையான அன்னியத் துணிக் குவியல்களும் தீக்கிரையாயின.

இவ்விதம் வடநாட்டில் ஆகஸ்டு மாதம் முழுவதும் செப்டம்பர் முற்பகுதியிலும் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டு மகாத்மாவும் மௌலானாவும் சென்னை மாகாணத்துக்குப் பிரயாணம் ஆனார்கள். செப்டம்பர் மாதம் 14ம் தேதி கல்கத்தாவிலிருந்து சென்னை மாகாணத்துக்குப் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது வழியில் வால்ட்டேர் ஜங்ஷனில் ரயில் நின்றது. மகாத்மாவும் மௌலானாவும் பிரயாணம்செய்யும் காலங்களில் வழியில் ரயில் நிற்கும் இடங்களிலெல்லாம் ஸ்டேஷனுக்கு அருகில் ஜனங்கள் திரண்டு நிற்பது வழக்கம். இருவரும் வண்டியிலிருந்து இறங்கிச் சென்று காத்திருந்த ஜனங்களுக்குச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு வந்து ரயிலில் ஏறிக்கொள்வார்கள். அது மாதிரியே வால்ட்டேரில் ரயில் இருப்பத்தைந்து நிமிஷம் நிற்கும் என்று தெரிந்துகொண்டு தலைவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வெளியில் காத்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசுவதற்குச் சொன்றார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சில அடி தூரம் சென்றதும் முன்னால் சென்ற மகாத்மா பின்னால் வந்த மௌலானா தம்மை உரத்த சத்தமிட்டு அழைப்பதைக்கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார். இரண்டு வெள்ளைக்காரப் போலீஸ் அதிகாரிகளும் ஐந்தாறு இந்தியப் போலீஸ்காரர்களும் மௌலானா முகம்மதலியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மௌலானா தம் கையில் வைத்திருந்த நோட்டீசைப் படித்துக் கொண்டிருப்பதையும் மகாத்மா பார்த்தார். ஆனால் அவர் முழுதும் நோட்டீசைப் படித்து முடிப்பதற்குப் போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அதிகாரிகளில் ஒருவர் மௌலானாவின் கையைப் பிடித்து இழுத்தார். காந்தி மகாத்மாவின் அஹிம்சா நெறியில் பயிற்சி பெற்றிருந்த மௌலானாவும் உடனே படிப்பதை நிறுத்திப் போலீஸாரைப் பின்தொடர்ந்து சென்றார். போகும்போது காந்திஜியைப் பார்த்து புன்னகை புரிந்துவிட்டுக் கையை வீசி ஆட்டிச் சமிக்ஞையினால் 'போய் வருகிறேன்' என்று சொல்லிவிட்டுப் போனார்.

மௌலானா அவ்விதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுச் சென்றபோது காந்திமகானுக்குத் தம்முடைய ஆத்மாவிலேயே ஒரு பகுதி தம்மை விட்டுப் பிரிந்து போவது போலிருந்தது.

மகாத்மா காந்திக்கும் அலி சகோதரர்களுக்கும் இந்திய அரசியல் துறையில் ஏற்பட்டிருந்த நட்பு உலக சரித்திரத்தில் ஒரு அற்புத நிகழ்ச்சியாகும். அலி சகோதரர்கள் வீராவேசமே உருக்கொண்டவர்கள். சாந்தம், அஹிம்சை, - இவற்றின் உயர்வைப் பற்றி என்றும் எண்ணாதவர்கள். இஸ்லாமிய சமய நெறியும் முஸ்லிம்களின் சரித்திரப் பண்பும் அவர்களை முற்றும் வேறு விதத்தில் பக்குவப் படுத்தியிருந்தன. ஆனாலும் அந்த அதிசய சகோதரர்கள் மகாத்மாவிடம் அளவில்லாத அன்பு கொண்டு அவரை மனமொழி மெய்களினால் பின்பற்றினார்கள். "நான் மௌலானா ஷவுகத் அலியின் சட்டைப் பையிலே இருக்கிறவன்!" என்று காந்தி மகாத்மா ஒரு தடவை சொன்னார். அதாவது மௌலானாவின் அன்புக்கு அவ்வளவு தாம் கட்டும் பட்டவர் என்று கூறினார். அம்மாதிரியே அலி சகோதரர்களும் மகாத்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டிருந்தார்கள்.

அந்த வருஷம் ஏப்ரல் மாதத்தில் லார்டு ரெடிங் கவர்னர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக வந்தார். மகாத்மாவைச் சந்தித்துப் பேச விரும்புவதகாத் தெரிவித்தார். மகாத்மாவும் ரெடிங்கைப் பார்க்க விரைந்து சென்றார். "நீங்கள் அஹிம்சா தர்மத்தைப் போதிக்கிறீர்களே! உங்கள் சிஷ்யர்கள் எல்லாரும் அதை அனுசரிப்பார்களா?" என்று லார்ட் ரெடிங் கேட்டார்.

"என் சிஷ்யர்களுக்கு நான் உத்தரவாதம்!" என்றார் மகாத்மா. "அப்படியானால் இதைப் பாருங்கள்!" என்று சொல்லி லார்ட் ரெடிங் மௌலானா முகம்மதலியின் பிரசங்கம் ஒன்றின் ரிபோர்ட்டை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு பகுதி மௌலானா முகம்மதலி பலாத்கார முறைகளையும் ஆதரிக்கிறார் என்று அர்த்தம் செய்யக்கூடிய முறையில் இருந்தது. "இந்த மாதிரி தப்பர்த்தம் செய்யக்கூடியவாறு கூட என்னைச் சேர்ந்தவர்கள் பேசக்கூடாதுதான். இதற்குப் பரிகாரம் நான் தேடித் தருகிறேன்!" என்றார் மகாத்மா. அந்தப்படியே மகாத்மா காந்தி மௌலானா முகம்மது அலியை உடனே சந்தித்து "பலாத்கார முறைகளை நீங்கள் ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி விடுங்கள்!" என்றார். மகாத்மாவின் சொல்லுக் கிணங்கி மௌலானா ஒரு அறிக்கை விட்டார். ரெடிங்-காந்தி சந்திப்பு பற்றிய விவரங்கள் யாருக்கும் அச்சமயம் தெரிந்திருக்க வில்லை. ஆகையால் "மௌலானா முகம்மதலி பயந்து விட்டார்!" என்றும், "மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!" என்றும் தேச விரோதிகள் பலர் எக்காளம் கொட்டினார்கள். மௌலானா இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மகாத்மாவின் விருப்பத்தின்படி நடக்கவேண்டியது தம் கடமை என்று எண்ணிப் பொறுமையுடனிருந்தார்.

பிறகு கார்டு ரெடிங்கின் சர்க்காரும் "மௌலானா முகம்மதலி மன்னிப்புக் கேட்டுக்கொண்டதின் பேரில் அவர் பேரில் நடவடிக்கை எடுக்காமல் விடப்பட்டது" என்று ஓர் அறிக்கை வெளியிட்டனர். இது காந்திஜிக்கே பொறுக்கவில்லை. உடனே காந்திஜி லார்ட் ரெடிங்குக்கு எழுதி அநுமதி பெற்று அவர்களுடைய சந்திப்பின் விவரங்களையும் தாம் மௌலானாவுக்குக் கூறிய புத்திமதியையும் வெளிப்படுத்தினார். மௌலானா முகம்மதலி 'பயந்துபோய் மன்னிப்புக் கேட்கவில்லை' என்பதை அப்போது அனைவரும் அறிந்து கொண்டனர்.

இவ்விதம் தமக்கு நேர்ந்த அபகீர்த்தியைக் கூடப் பொருட்படுத்தாமல் மௌலானா முகம்மதலி மகாத்மாவின் சொல்லை மேற்கொண்டு வந்தார். அப்படிப்பட்டவரைத் தம்மிடமிருந்து பிரித்துக் கைது செய்து போலீஸார் கொண்டுபோனது மகாத்மாவைக் கலங்கச் செய்துவிட்டது. ஆயினும் அந்தக் கலக்கமானது மகாத்மா காரியம் செய்வதைத் தடைசெய்ய வில்லை. ஜனக்கூட்டம் கூடியிருந்த இடத்துக்கு மகாத்மா நேரே சென்று மக்களை அமைதியாயிருக்கும்படி கேட்டுக் கொண்டார். திரும்பவும் மௌலானாவைச் சிறைப்படுத்தி யிருந்த இடத்துக்கு வந்து அவரைப் பார்த்துப் பேச அநுமதி கேட்டார். அதற்கு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மௌலானாவுடன் பிரயாணம் செய்த பீகம் முகம்மதலியும் மௌலானாவின் காரியதரிசியும் அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு அப்போதுதான் வெளியில் வந்தார்கள். அவர்கள் மௌலானாவை 107-வது பிரிவின்படியும் 108-வது பிரிவின்படியும் கைது செய்திருப்பதாக விவரம் தெரிவித்தார்கள்.

கன்னிங் காம் என்ற பெயர் தமிழ் நாட்டில் பலருக்கு நினைவிருக்கும். சென்னையில் பின்னால் உப்புச் சத்தியாக்கிரஹம் நடந்தபோது தடபுடலான அடக்கு முறையைக் கையாண்டு கொடுமைக்குப் பெயர் பெற்ற மனிதர். இவர் அச்சமயம் சி.ஐ.டி.போலீஸ் டிபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலாயிருந்தார். மௌலானா முகம்மதலியைக் கைது செய்யும் கௌரவம் இவருக்குத்தான் கிடைத்தது. விசாகப்பட்டினம் ஜில்லா மாஜிஸ்ட்ரேட் மேற்படி கன்னிங்காமுக்கு அனுப்பிய உத்தரவின் விவரம் பின்வருமாறு:-

"முகம்மது அலி அமைதியாகவும் நன்னடத்தையுடனும் இருப்பதற்காக அவரிடம் 107, 108-வது பிரிவுகளின் கீழ் ஜாமீன் கேட்க வேண்டியிருப்பதால். மேற்படி முகம்மது அலியைக் கைதுசெய்து என் முன்னால் கொண்டுவந்து ஒப்புவிக்கவேண்டியது. இதில் தவறவேண் டாம். 14உ செப்டம்பர் 1921.

(ஒப்பம்) ஜே.ஆர்.ஹக்கின்ஸ், ஜில்லா மாஜிஸ்ட்ரேட், விசாகப்பட்டினம்"

மேற்படி உத்தரவைப் பற்றித்தெரிந்து கொண்டதும் மகாத்மா காந்தி ரயில் ஏறித் தமது பிரயாணத்தைத் தொடர்ந்தார். ரயிலில் பிரயாணம் செய்துகொண்டே மௌலானா முகம்மதலி கைதியானதைப் பற்றி உருக்கமான கட்டுரை ஒன்று "எங் இந்தியா"ப் பத்திரிகைக்கு எழுதினார். அந்தக் கட்டுரை யின் கடைசிப் பகுதி பின்வருமாறு:-

"அலி சகோதரர்களுக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை என்ன? பயம், சந்தேகம், சோம்பல் ஆகியவற்றை உடனே விட்டொழிப்பதுதான். அலி சகோதரர்களுடைய தைரியம், நம்பிக்கை, அச்சமின்மை, சத்தியம், இடைவிடாச் செயல் திறமை ஆகியவற்றையும் அனைவரும் மேற்கொண்டால் சுயராஜ்யம் அடைவது பற்றிச் சந்தேகம் என்ன? ஜில்லா மாஜிஸ்ட்ரேட் போலீஸ் அதிகாரிக்குப் போட்ட உத்தரவின் கடைசியில் "இதில் தவறவேண்டாம்!" என்று கண்டிருந்தது. அந்த உத்தியோகஸ்தர் அதை நிறைவேற்றுவதில் தவறவில்லை! மேலேயிருந்து வரும் உத்தரவை நிறைவேற்றுவதில் அநேக ஆங்கில உத்தியோகஸ்தர்கள் தங்கள் உயிரையே அர்ப் பணம் செய்திருக்கிறார்கள். இதுதான் இங்கிலீஷ் சாதியின் பெருமை. காங்கிரஸ் இந்தியர்களுக்கு அவ்விதமே 'உத்தரவு' இட்டிருக்கிறது. 'உத்தரவு' 'கட்டளை' 'புத்திமதி' – எப்படி வைத்துக்கொண்டாலும் சரிதான். 'அதில் தவறவேண்டாம்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. அவ்விதம் நாம் செய்யப் போகிறோமா? மிச்சமுள்ள சில மாதங்களில் நாம் தீவிரமாக வேலை செய்து, 'காங்கிரஸ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதில் தவறவில்லை' என்று நாம் நிரூபிக்க வேண்டும்."

(தொடரும்)


விவாதங்கள் (2)