அத்தியாயம் 1
லீலாவதி, “என்னிடம் நீர் என்ன விதமான உதவியை எதிர்பார்க்கிறீர்? அதை முதலிலேயே சொல்லிவிடுகிறதுதானே! மனசில் ஏதோ ஒரு கருத்தை வைத்துக்கொண்டு வளைத்து வளைத்து இவ்வளவு நேரம் ஏன் பேசவேண்டும்?” என்று கடுகடுப்பாக மொழிந்தாள்.
அதைக் கேட்ட கட்டாரித்தேவன், “ஏனம்மா! என்னைக் கண்ட முதல் இப்படிக் கோபமாகப் பேசுகிறீர்கள்? நான் என்ன புலியா கரடியா? உங்களை எடுத்து விழுங்கிவிட வந்திருக்கிறேன் என்று நினைத்து இப்படி ஆத்திரப்படுகிறீர்களா? அப்படி நீங்கள் பயப்படத் தேவையில்லை.”
“நான் உங்களுக்கு ஒரு கெடுதலும் செய்யக் கூடியவனல்ல. பிறர் உங்களுக்கு எப்படிப் பட்ட கெடுதல் நினைப்பதாக இருந்தாலும், நான் என்னுடைய உயிரைக் கொடுத்தாகிலும், அப்படிப்பட்ட தீங்கு உங்களுக்கு நேராமல் காப்பாற்றக் கூடியவன் என்பதை நீங்கள் உறுதியாக எண்ணிக்கொள்ளலாம்.”
“உங்களுடைய புருஷருக்கும் எனக்கும் நெடுநாளைய சிநேகமல்லவா! அவருக்கு நான் செய்துள்ள உபகாரங்கள் கணக்கில் அடங்குமா! அவராயிருந்தால், நான் வந்ததற்கு அவர் எனக்கு எத்தனையோ உபசாரம் செய்து என்னை மரியாதைப்படுத்தி இருப்பார்.”
“அவர் என்னிடம் வைத்திருந்த மதிப்பு எவ்வளவு என்பது உங்களுக்கு நேரில் தெரிந்திருந்தும், முன்பின் அறியாதவர்கள் போல நீங்கள் என்னிடம் கிடுகிடுவென்று பேசுகிறீர்கள். நீங்கள் அப்படிப் பேசினாலும், எனக்கு உங்கள் மேல் கொஞ்சமும் வருத்தம் உண்டாகவில்லை. போனது போகட்டும்; எனக்கு நேரமாகிறது; நான் வந்த கருத்தை வெளியிட்டு விடுகிறேன்.”
“அது உங்களுடைய மனசுக்குப் பிடித்தாலும் சரி; பிடிக்காவிட்டாலும் சரி; அந்தக் காரியத்தை நீங்கள் எனக்குச் செய்து கொடுத்தே தீரவேண்டும். அந்த உதவி உங்களால் ஆகக்கூடியதே ஆகையால், நீங்கள் அதை அவசியம் முடித்துக் கொடுத்தே தீரவேண்டும்.”
“உங்கள் புருஷரைக் காப்பாற்றுவதற்காக அன்றைய தினம் நாம் எல்லோரும் கூடி இளவரசரைப் பிடித்துக்கொண்டு வந்து கடிதம் எழுதி வாங்கிக் கொண்ட விஷயம் உங்களுக்கு நினைவிருக்கலாம்.”
“அன்றைய தினம் முக்கியமாக நானும் என்னுடைய ஆட்களும் சேர்ந்து அவரைப் பிடித்துக் கொண்டு வராவிட்டால், நீங்கள் பார்சீ ஜாதிப் பெண் போல வேஷம் போட்டு அவரிடம் கடிதம் வாங்க முடிந்திருக்காது. உங்களுடைய புருஷர் நிஜமாகவே கொலைக் குற்றம் செய்தார் என்பது இந்த நாடெங்கும் நிச்சயமாகத் தெரிந்த விஷயம்.”
“வேறே யாராவது இப்படிப்பட்ட பெரிய குற்றம் செய்திருந்தால், அவருக்கு மரண தண்டனை கிடைப்பது நிச்சயம். இவருக்கும் மரண தண்டனை அவசியம் கிடைக்கும் என்றுதான் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.”
“நீங்கள் இளவரசரிடம் எழுதி வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தை உபயோகப்படுத்தி, அவருடைய உயிரைக் காப்பாற்றினீர்கள் என்பது என்னைத் தவிர வேறே யாருக்கும் தெரியாது. நீங்கள் உதவி செய்திராவிட்டால், ஏழு வருஷக் கடின காவலோடு அவர் தப்பித்துக் கொண்டிருக்க மாட்டார் என்பது நிச்சயம்.”
“இந்த விஷயத்தில் எனக்கு மாத்திரம் கொஞ்சம் விசனந்தான். இவ்வளவுதூரம் கடிதம் எழுதி வாங்கிய நீங்கள், அதைச் சரியானபடி உபயோகித்து, உங்களுடைய புருஷர் எவ்வித தண்டனையும் அடையாமல் முழுதும் தப்பித்துக் கொண்டு உடனே வீட்டுக்கு வரும்படி செய்திருக்கலாம்.”
“இந்த விஷயத்தில் இளவரசர் உங்களை ஏமாற்றி விட்டார் என்றே நான் எண்ணுகிறேன். நீங்கள் இளவரசரிடத்தில் கண்டித்துப் பேசி இந்தக் காரியத்தை அவர் பூர்த்தியாக நிறைவேற்றிக் கொடுக்கும் படி செய்திருக்க வேண்டும்.”
“போனது போகட்டும்; நீங்கள் இப்போது என் பொருட்டு ஒரு காரியம் செய்தால், அதுவே போதுமானது. அந்தக் கடித சம்பந்தமாக சமீபகாலத்தில் நீங்கள் இளவரசரைப் பார்த்து அவரிடத்தில் அன்னியோன்னியமான பழக்கம் செய்து கொண்டிருப்பீர்கள் என்பது நிச்சயம்.”
“அவரும் உங்களிடம் அதிகமான பிரியம் வைக்கக்கூடிய சுபாவமுடைய மனிதரே ஆகையால், நீங்கள் எனக்காக ஒருதரம் போய் இளவரசரைப் பார்க்க வேண்டும். என் பேரில் போலீசார் பல குற்றங்களின் சம்பந்தமாக வாரண்டு பிறப்பித்திருக்கிறார்கள்.”
“நான் அவர்களுடைய கண்ணில் படாமல் ஒளிந்து திரிந்து கொண்டிருக்கிறேன். இனி போலீசார் தொடராதபடி என்மேல் யாதொரு குற்றமும் இல்லையென்று அவர்கள் தஸ்தாவேஜுகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இளவரசர் மனசு வைத்தால் இந்தக் காரியம் ஒரு பெரிதல்ல; வெகு சுலபத்தில் முடிந்து போம்.”
“நான் இதுவரையில் செய்த குற்றங்கள் எல்லாம் ஒரு க்ஷணத்தில் நிவர்த்தியாகிவிடும். பிறகு, நான் போலீசாருக்குப் பயப்படாமல் சுயேச்சையாக வெளியில் வரலாம். நீங்கள் உங்கள் புருஷருக்குச் செய்தது போல, எனக்கும் இந்த உதவியைச் செய்து வைக்கவேண்டும்.”
“இது உங்களுக்கு ஒரு பிரயாசையான காரியமல்ல. உங்களுடைய வாய் வார்த்தையில் எல்லாம் அடங்கி இருக்கிறது. நீங்கள் சொன்னால், இளவரசர் அதை மீறி நடக்கக் கூடியவரல்ல. அவருக்கும் இது ஒரு பொருட்டல்ல ஆகையால், இந்த உதவியை நீங்கள் எனக்குச் செய்தே தீரவேண்டும்” என்று நயந்து வற்புறுத்திக் கூறினான்.
அதைக் கேட்ட லீலாவதி முற்றிலும் திகைப்பும் கலக்கமும் அடைந்து, தான் அவனுக்கு என்னவிதமான மறுமொழி சொல்வது என்பதை அறியாதவளாய்ச் சிறிதுநேரம் சஞ்சலம் அடைந்திருந்தபின் அவனை நோக்கி,
“ஐயா! நீர் பிரஸ்தாபிப்பது நிரம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. நானாவது உம்மைப்பற்றி இளவரசரிடம் சிபாரிசு செய்கிறதாவது. அது ஒருநாளும் முடியாத காரியம்.”
“என்னுடைய புருஷர் செய்த உபத்திர வத்துக்குக் கட்டுப்பட்டு நான் பார்சீ ஜாதிப் பெண்ணாக வேஷம் போட்டு அந்தக் கடிதத்தை எழுதி வாங்கினேனே ஒழிய நான் என் மனப்பூர்வமாக இணங்கி அந்தக் காரியத்தில் இறங்கவில்லை.”
“அன்னிய புருஷரான இளவரசரிடத்தில் பெண்பிள்ளையான நான் போய் எந்த உதவியையும் கேட்பது அடுக்குமா? நான் அந்தக் கடிதத்தை வாங்கினேனே ஒழிய, நான் மறுபடி அவரிடம் நேரில் போகவும் இல்லை; அந்தக் கடிதத்தை உபயோகப்படுத்தவும் இல்லை.”
“நான் என் பெரிய தகப்பனாரை இளவரசரிடம் அனுப்பி என் புருஷருக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டேன். அவர் எவ் வித உதவியும் செய்யத் தம்மால் இயலாது என்று கண்டிப்பாகச் சொல்லி மறுத்து விட்டார்.”
“அதன் பிறகு நாங்கள் வக்கீல் வைத்து வாதாடி அவருக்குச் சொற்பமான தண்டனை ஏற்படும்படி செய்தோம். அவ்வளவுதான் வரலாறு. எனக்கும் இளவரசருக்கும் அதன் பிறகு பழக்கம் ஏற்படவே இல்லை.”
“இனி அவருடைய முகத்தில் விழிக்க எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை ஆகையால், நீர் கோரும் விஷயத்தில் என்னால் எவ்வித உதவியும் செய்ய முடியாது ஆகையால், நீர் போகலாம்” என்றாள்.
கட்டாரித் தேவன் அவள் சொன்ன வரலாற்றைச் சிறிதும் நம்பாதவன் போலக் குறும்பாகப் பேசத் தொடங்கி, “என்ன அம்மா ! இப்படிப் பேசுகிறீர்கள்? இளவரசர் வசமாக எழுதிக் கொடுத்திருந்த அந்தக் கடிதத்தை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லையென்றால் யார்தான் நம்புவார்கள்?”
“இது கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்னும் கதைபோல் இருக்கிறது. அப்படியே நீங்கள் அந்தக் கடிதத்தை உபயோகப்படுத்திக் கொள்ள வில்லையென்றே வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தாலும், உங்கள் பெரிய தகப்பனாருக்கும் இளவரசருக்கும் அந்தரங்கமான சிநேகமுண்டு என்பது எனக்குத் தெரியாதா?”
“இவர் சொன்னால் அவர் அதைமீறி நடப்பாரா? ஒரு நாளும் நடக்கமாட்டார் ஆகையால், நீங்கள் சொல்வதை நான் ஒருநாளும் நம்பமுடியாது. எனக்கு எவ்வித உதவியும் செய்ய உங்களுக்கு இஷ்டமில்லை என்றே நான் எண்ணிக் கொள்ள வேண்டும்.”
“எப்படியாவது எனக்கு நீங்கள் இந்த உதவியைச் செய்து வைக்காவிட்டால் நான் உங்களை இலேசில் விடப் போகிறவளல்ல. நீங்களே நேரில் இளவரசரிடம் போய் இதை முடித்தாலும் சரி அல்லது, உங்களுடைய பெரிய தகப்பனாரைக் கொண்டு இதை முடித்தாலும் சரி.”
“இரண்டு வகையில் எப்படியாவது காரியத்தை முடித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பு உங்களைச் சேர்ந்தது. நீங்கள் அப்படிச்செய்யத் தவறினால் அதன்பிறகு நான் என்ன செய்வேன் என்பதை இப்போது வெளியிட எனக்கு இஷ்டமில்லை” என்றான்.
அவனது பயமுறுத்தலான சொற்களைக் கேட்ட லீலாவதி, “ஐயா! நீர் கோரும் காரியம் என்னால் ஆகக்கூடியதல்ல. என் உயிர் போவதானாலும் நான் இனி இளவரசருடைய முகத்தில் விழிக்க மாட்டேன்.”
“உம்மைப்பற்றி நான் என் பெரிய தகப்பனாரிடம் சொன்னால் அவர் உமக்கு ஒருநாளும் உதவி செய்ய எண்ண மாட்டார் ஆகையால், நீர் என்னைவிட்டு இந்த விஷயத்தை வேறே யார் மூலமாவது முடித்துக்கொள்ளும்.”
“நீர் வீணாக பயமுறுத்திப் பேசுவதில் உபயோகமில்லை. நான் இப்போது என் பெரிய தகப்பனாருடைய சவரக்ஷணையில் இருக்கிறேன் என்பது உமக்குத் தெரியும் ஆகையால், நீர் பயமுறுத்தி ஒன்றையும் செய்ய முடியாது என்பது நினைவில் இருக்கட்டும்” என்று முறுக்காகப் பேசினாள்.
அதைக் கேட்ட கட்டாரித் தேவன் புரளியாகப் பேசத் தொடங்கி, “ஓகோ! இப்படிப் பேசினால் நான் உங்களைச் சும்மா விட்டு விடுவேன் என்ற எண்ணமோ! அது ஒரு நாளும் பலியாதம்மா! வெந்நீர் அண்டாவுக்குள் நீங்கள் வைத்துக் கொன்ற மனிதர் யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.”
“அவருடைய பிள்ளை தம்முடைய தகப்பனாரைக் காணோம் என்று தேடியலைந்து துக்க சாகரத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். நீங்கள்தான் அவரைக் கொன்று பங்களாவின் பின்புறத்தில் புதைத்திருக்கிறீர்கள் என்று நான் அவருக்கு ஒரு மொட்டைக் கடிதம் எழுதிப் போட்டு அந்த விஷயத்தில் நானும் சாட்சி சொல்வேனானால், உங்களுடைய மானமும் போய் விடும். பிராணனும் போய் விடும்.”
“அதுவும் அல்லாமல், நீங்கள் பார்சீஜாதிப் பெண்போல வேஷம் போட்டு இளவரசரை ஏமாற்றிய விஷயத்தையும் ஊரெல்லோரும் அறியும்படி பகிரங்கப்படுத்தி விடுவேன். இதெல்லாம் உங்களுக்குச் சம்மதமானால், நீங்கள் எனக்கு எவ்வித உதவியும் செய்ய வேண்டியதில்லை. நான் உடனே செலவு பெற்றுக்கொண்டு வெளியில் போய் விடுகிறேன்” என்றான்.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட லீலாவதியினது உடம்பு அச்சத்தினால் கிடுகிடென்று ஆடியது. மூளை குழம்பியது; அறிவு தளர்ந்தது. தான் அந்த முரட்டு மனிதனைப் பகைத்துக் கொண்டால், அவன் சொன்னபடியே செய்யத் தகுந்தவன் என்பதும் தெரிந்தது.
அவன் பொருட்டுதான் இளவரசரைப் பார்ப்பதும் தனது பெரிய தந்தையிடம் சிபாரிசு செய்வதும் அவளுக்குச் சம்மதப்படவில்லை ஆகையால், அவள் அவனை எப்படி சமாதானப்படுத்தலாம் என்று சிந்தனை செய்து கொண்டிருக்க அப்போது ஒரு வேலைக்காரி கதவண்டை வந்து நின்று,
“அம்மா! வாசலில் யாரோ ஓர் உத்தியோகஸ்தர் வந்திருக்கிறார். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராம்! உங்களிடம் அவசரமாகப் பேசவேண்டுமாம்; வெளியில் காத்திருக்கிறார்” என்றாள்.
- தொடரும்
விவாதங்கள் (3)
- rina
good onee
0 likes - Meena Nagarajan
நல்ல சமயத்தில் இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார்.பார்ப்போம்.
0 likes - KS Mani
ஆகா பிரமாதம் 👍
1 likes