அத்தியாயம் 1

ரசமரம் சலசலத்துக் கொண்டிருந்தது. அதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித்தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள் தாள் ஒன்றில் ஆழ்ந்திருந்தார் ஆலங்காட்டுச் சாமியார்.

‘’கமலா (வயது 20) என்ற பெண்ணும் ஜெயசந்திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஓட்டல் அறைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்’’ என்று வாய்விட்டுப் படித்த சாமியார்: “பொழுது விடிஞ்சா ஒரு நல்ல செய்தி கிடையாதா? தற்கொலை செய்துகொண்ட ஜோடி, தடம் புரண்ட ரயில், ஜாக்பாட் மாரடைப்பு, வெளிநடப்பு, கதவடைப்பு, கடத்தல், பதுக்கல், கொள்ளை, கொலை, சதக்! சதக்!’’

சிரித்துக்கொண்டார். அவர் சிரிக்கும்போது கண்கள் இடுங்கி விழிகளும் சேர்ந்து சிரிக்கும்.

‘’டீ ஆறிப் போகுது தாத்தா...'' என்றான் குமாரு. சின்னப் பையன்.

ஆகாசத்தில் வெகு உயரத்தில் விமானம் பறக்கும் சத்தம். சாமியார் அண்ணாந்து பார்த்துவிட்டு, "குமாரு, நாம் ரெண்டு பேரும் ஒரு தடவை ப்ளேன்லே போவோம் வாரியா?" என்று கேட்டார்.

"எந்த ஊருக்கு?"

‘’சிங்கப்பூருக்கு?"

"அங்கே போய்..."

‘’டேப் ரிக்கார்டரு, நைலான் கயிறு...”

‘’கயிறு எதுக்கு?"

‘’கட்டில் பின்ன?"

‘’அப்புறம்?"

‘’பைனாகுலர், ரிஷ்ட் வாட்ச், பிஸ்கோத்து, சாக்குலெட்டு, சாப்பாட்டு ஜாமான்.”

‘’எனக்கு?’’

‘’உனக்குதாண்டா அவ்வளவும். சட்டை, நிஜார், புக்ஸுங்க..."

‘’எனக்குத்தான் படிக்கத் தெரியாதே!"

"உங்க மாமன்கிட்டே சொல்லி படிக்கவைக்கச் சொல்லு.”

"அவர் மாட்டாரு.''

"ஏன்?"

‘’எனக்கு அம்மா இல்லே, அப்பா இல்லே. நான் ஒரு அனாதைப் பையன். அவர் எனக்குச் சாப்பாடு போட்டு வளக்கறாரே, அது போதாதா?"

‘’பைத்தியம். நீ அனாதை இல்லேடா! நான்தான் அனாதை. உனக்கு மாமன் இருக்கான். பணக்கார மாமன். உங்கப்பன் சேர்த்துவெச்ச சொத்தெல்லாம் அவன்கிட்டேதான் இருக்குது. அந்த ரகசியமெல்லாம் உனக்குத் தெரியாது. படி படி, இந்த சாமியார்கிட்டே வந்து வந்து நிக்கறயே. இங்கே என்ன இருக்குது? விபூதி இருக்குது, கயித்துக் கட்டில் இருக்குது; முடிச்சுப் போட்ட கந்தலில் மூணு ரூபா சில்லறை இருக்குது... நீ கொஞ்சம் டீ சாப்பிடறயாடா?"

‘’வேணாம், நான் இங்கேயேதான் இருப்பேன். பொளுதண்ணைக்கும் இருப்பேன். எனக்கு ஒங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ராத்திரி தூக்கம் வரப்போதான் வூட்டுக்குப் போவேன். இதென்ன போஷ்டர்?"

``இது போஷ்டர் இல்லேடா, பானர்! துணியிலே வரைஞ்சது. ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் பார்த்தியா? இதப் பார் அலமேலுவும் ஆடும் கிளிஞ்சு போய் கிடக்கறாங்க" ஒரு எக்காளச் சிரிப்பு! பயங்கரக் குரல், பயப்படாத குரல்.

‘’இது எதுக்கு வச்சிருக்கீங்க?"

‘’கட்டில் கயிறு உறுத்துது. தூங்கி எளுந்திருச்சா முதுகிலே வரி வரியா கயிறு அளுந்திக் கிடக்குது. இந்த பானரைக் கட்டில் மேலே போட்டுக்கிட்டா சுகமா தூங்கறேன். ஆமாம், இப்பவெல்லாம் அலமேலு மேலதான் தூக்கம்... முருகா, முருகா!" தான் சொன்னதை நினைத்து சாமியார் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார்.

"என்ன தாத்தா சிரிக்கிறீங்க?"

‘’நான் தாத்தா இல்லேடா. தாடியும் மீசையும் பார்த்தா தாத்தா மாதிரி தோணுதா? எனக்கு ஐம்பது வயசுகூட ஆகல்லே. நான் யார் மாதிரி இருக்கேன் சொல்லு, பாப்பம்.’’

"மதியளகன் மாதிரி அமுக்கலா குள்ளமா இருக்கீங்க? தாடியும் மீசையும்தான் அதிகப்படி. ஏன் சிரிச்சீங்க?"

‘’அது உனக்குப் புரியாது குமாரு. நீ சின்னப் பையன். இன்னும் அஞ்சாறு வருசம் போகணும்."

‘’ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தீங்களா?"

"ஃபஷ்ட் டே, ஃபஷ்ட் ஷோ பார்த்துட்டேன். டெண்ட் சினிமாவிலே ஓடுதே ‘பத்ரகாளி’, அதுகூடப் பார்த்துட்டேன். ஓசிலேதான். நான் சாமியாராச்சே, எனக்கு ஏது காசு?"

‘’எப்ப சிங்கப்பூர் போகலாம்?"

"மூணு ரூவா வெச்சிருக்கேன். ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தேளு ரூவா குறையுது. சேரட்டும். ஒரு பயணம் போயிட்டு வந்துருவோம்.''

‘’சிங்கப்பூர்லே துப்பாக்கி கிடைக்குமா?"

"துப்பாக்கியா! அது எதுக்குடா உனக்கு? காந்தியைச் சுட்டதாச்சே அது? அதைக் கையாலே தொடலாமா?"

‘’சிப்பாய் மாதிரி கையிலே துப்பாக்கி புடிச்சுக்கிட்டு ஒரு பெரிய வீரனாகப் போறேன்."

‘’நல்ல ஆசைடா! வீரனாகப் போறியா? அப்புறம் ஆகலாம். முதல்லே போய்ப் படிடா! உங்கப்பன் சொத்து ஏராளமாக் கெடக்குது. மாமன் ஏப்பம் விட்டுக்கிட்டிருக்கான். அதெல்லாம் புரிஞ்சுக்கோ."

தூரத்தில் ரிக்கார்ட் சங்கீதம் மெலிதாக ஒலித்தது.

`வாங்கோன்னா... வாங்கோன்னா…’

"பத்ரகாளி பார்க்கணும்."

"படிடா, இந்த சினிமா புத்தி வேணாம்டா உனக்கு?"

‘’நீங்க மட்டும் பார்க்கலாமா?''

‘’நான் சாமியாரு. நான் என்ன வேணாலுஞ் செய்யலாம்."

"சாமியாரு சினிமா பாக்கலாமா?"

"சாமியாருங்க கல்யாணமே செஞ்சுக்கறாங்களே! சாமியார்லே ரெண்டு ரகம். சாமியாரா இருந்துகிட்டே சம்சாரியா வாள்றது ஒரு ரகம். அசல் சாமியாராவே வாள்றது இன்னொரு ரகம்... நான் முதல் ரகம். எனக்கு ஆசை போகல்லே. வாள வசதியில்லாததாலே சாமியாராயிட்டேன். நான் என்ன சாமியார்? சோத்துச் சாமியார்! மசால் வடைச் சாமியார். பிரியாணி சாமியார். காஞ்சீபுரத்திலே இருக்காரு ஒரு சாமியாரு. போய்ப் பாரு, வயிறு ஒட்டிப்போய்... கண்ணுலே ஒரு ஒளி வீசும் பாரு...’’

‘’தாத்தா, இந்த ஊரார் ரகசியம் பூரா உங்களுக்குத் தெரியுமா?"

‘’அக்கு அக்காத் தெரியுமே. எல்லார் சங்கதியும் என்கிட்டே வந்துடும். ஜோசியம் கேக்க வருவாங்க. வைத்தியம் செஞ்சுக்க வருவாங்க. இந்த இரண்டிலேயும் அம்புடாத ரகசியம் என்ன இருக்குது? டெய்லர் கடை கேசவன், ஆப்பக் கடை ராஜாத்தி இவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு ரகசியம், அவுட்போஸ்ட் தாணாக்காரு, டெண்ட் சினிமா தங்கப்பனோட தங்கச்சி இவங்களுக்குள்ளே ஒரு ரகசியம், நாட்டாமை கோதண்டம், ட்ராமாகாரி ரத்னாபாய் - அது ஒரு ரகசியம். இப்படி எல்லார் ரகசியமும் எனக்குத் தெரியும். அதோ வருது பாரு ரத்னாபாய். இப்ப நேரா இங்கேதான் வரும். இதோ, இந்த அரச மரத்தடியிலே அந்தப் பக்கம் இருக்குதே புள்ளையார் அதைச் சுத்தும். அப்புறம் ஒரு சீட்டை எங்கிட்டே கொடுக்கும். லவ் லெட்டர்…’’

‘’சீட்டு யாருக்கு? உங்களுக்கா?"

‘’கருமம்! நாட்டாமைக்கார கோதண்டனுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும் நான்தான் போஸ்டாபீஸ்.”

"சீட்லே என்ன இருக்கும்?"

‘’உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. இப்ப ஒரு சீட்டு வரும். நான் படிச்சுக் காட்றேன் பாரேன்...”

ட்ராமாக்காரி வந்தாள். பிள்ளையாரைச் சுற்றினாள். சாமியாருக்கு பக்கோடா பொட்டலம் கொடுத்தாள். ஜாக்கெட்டுக்குள்ளிருந்த சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.

"சேர்த்துடறேன் போ." பக்கோடாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தூ!

தலையை வாரிப் பின்னாமல் ரிப்பன் கட்டிவிட்டிருந்தாள் ரத்னாபாய்.

நெற்றியிலே குங்குமப் பொட்டுக்குக் கீழே இரு புருவத்தையும் இணைத்து விபூதிப் பொட்டு.

‘’நான் வரட்டுமா?"

"அடுத்த தடவை நல்ல பக்கோடாவா வாங்கிட்டு வா... ஒரே காறல்... எங்கே வாங்கினே?”

‘’நாடகத்துக்கு கோயமுத்தூர் போயிருந்தேன். மிட்டாய்க் கடைலே வாங்கினேன்."

‘’கலப்பட எண்ணெய். காறுது...”

அவள் திரும்பி கொஞ்ச தூரம் போய்விட்டாள்.

"மூஞ்சியைப் பாரு. புருவத்தைச் சிரைச்சுக்கிட்டு... கண்றாவி...'' சாமியார், குமாருவிடம் முணுமுணுத்தார்.

பக்கோடா வாசனைக்கு நாய் ஒன்று ஓடிவந்தது.

‘’பக்கோடா வாசனையை நல்லா மோப்பம் புடிப்பே. திருடன் வந்தா கோட்டை விட்டுடுவே. இந்தா, தொலை..."

மீண்டும் வானத்தில் விமானம் பறக்கிற சத்தம்.

சாமியார் நிமிர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பும்போது, கொடிக் கம்பம் அவர் பார்வையில் பதிந்தது. அதில் மூவண்ணக் கிழிசல் கொடி ஒன்று, தன் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்திக்கொண்டிருந்தது.

"இந்த ஊர் கட்சித் தலைவன் மாலை போட்டுக்க வருவான். வோட்டுக்கு வருவான். வசூலுக்கு வருவான். நீட்டா அங்கவஸ்திரம் போட்டுக்குவான். இந்தக் கொடியை- ஒருநாளாவது நிமிர்ந்து பார்ப்பானா? ஏன் பின்னே கட்சி இந்தக் கதிக்கு வராது?” சாமியார் உறுமலோடு சிரித்தார்.

அடுத்தாற்போல் நாட்டாமைக்காரன் வந்தான்.

‘’என்ன சாமியாரே! உஷ்ணத்துக்கு மருந்து கேட்டேனே. வச்சிருக்கியா?"

‘’இந்தா" என்று அந்தச் சீட்டை எடுத்துக் கொடுத்தார் சாமியார்.

"இதைப் படி; உஷ்ணம் குறையும். காலண்டர் கேட்டேனே, எங்கே?”

ஒய்.விஜயா போட்ட காலண்டரை எடுத்துக் கொடுத்தான் நாட்டாமைக்காரன். அந்த காலண்டர் சுருளுக்குள் ஒரு கடிதம் இருந்தது. ட்ராமாக்காரிக்கு நாட்டாமைக்காரன் எழுதிய கடிதம். அதைப் படித்த சாமியார் “சீ... அசிங்கம்... இப்படியா எளுதுவாங்க? கடாமாடாட்டம் வயசாச்சு. வூட்லே சம்சாரத்துக்கு நாலு புள்ளைங்க... வெளிவிவகாரம் வேறே. பெரிய மனிசனாம், நாட்டாமைக்காரனாம். நாம வாயைத் திறக்க முடியுமா? என்னை ஊரைவிட்டே துரத்திடுவான். ஒய்.விஜயாவைப் பார்த்தார். தன் அகன்ற கண்களை விரித்துச் சிரித்தாள் விஜயா.

‘’ட்ராமாக்காரி புள்ளையாரைச் சுத்றா! இந்த நாட்டாமைக்காரன் ட்ராமாக்காரியைச் சுத்தறான். உங்க மாமன் யாரைச் சுத்தறான் தெரியுமாடா குமாரு?”

‘’தெரியாதே..."

"இதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு. ம்... உனக்கெதுக்கு அந்த வம்பெல்லாம்? தெரிஞ்சா துப்பாக்கி கேப்பே... வீரனாயிடுவே. வேணாம். வூட்டுக்குப் போ."

"எங்க மாமா நல்லவராச்சே!"

"குமாரு! ஊரே அப்படித்தான் நம்பிக்கிட்டு இருக்குது. எந்தப் புத்துலே எந்தப் பாம்பு இருக்குதுன்னு எனக்குத்தான் தெரியும்? மாமனை நம்பாதே! ஆளுக்குள்ளே ஆளு. பாக்கப் போனா இந்த ஒலகத்திலே எல்லாருமே இரட்டை வேஷக்காரங்கதான். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் இன்னொரு ஆள் இருக்கான். நீ போயிடு. அதோ, உங்க மாமன் வந்துகிட்டிருக்காரு...''

(தொடரும்...)


விவாதங்கள் (31)