அத்தியாயம் 1

13. மொட்டைத்தலைக்கேற்ற பட்டுக்குல்லா

நிச்சயதார்த்தத்திற்காகக் குறிக்கப்பட்டிருந்த தினமாகிய வெள்ளிக்கிழமை இரவு கோமளேசுவரன்பேட்டையில் ரமாமணியம்மாள் முதலியோரை அங்கஹீனப்படுத்திவிட்டு ஓடிவந்தவர்களான இடும்பன் சேர்வைகாரனது ஆட்களுள் பதினாறு மனிதர்கள் பிடிபட்டுப் போயினர். அவர்கள் எல்லோரையும் போலீசார் உடனே அழைத்துப் போய் விசாரணைக் கைதிகளை அடைத்து வைக்கும் சப்ஜெயிலில் பந்தோபஸ்தாக அடைத்து வைத்தனர். 

அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் தமக்குள் கலந்து பேசி கட்டுப்பாடாக ஒரே விதமான தகவலைத் தெரிவிப்பார்கள் என்ற நினைவினால், போலீசார் அவர்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பதினாறு அறைகளில் வைத்ததன்றி, அவர்கள் எல்லோரையும் வரிசையாக நிறுத்தி போட்டோ படமும் பிடித்து வைத்துக் கொண்டனர். 

போலீஸ் சப் - இன்ஸ்டெக்டர் அவர்களை ஒவ்வொருவராக வரவழைத்து ரகசியமாக வைத்துக் கொண்டு உண்மையை வெளியிடும்படி கேட்க, அவர்கள் எல்லோரும் ஒரேவிதமான தகவலையே தெரிவித்தனர். தாங்கள் சந்தைகள், கடைகள், ரயிலடி முதலிய இடங்களில் நின்று மூட்டைகள் எடுத்து வேலை செய்யும் கூலியாள்கள் என்றும், அந்த இரவில் தாங்கள் தங்கள் வழக்கப்படி கோமளேசுவரன் பேட்டையில் வீட்டுத் திண்ணைகளில் மூலைக்கொருவராய்ப் படுத்திருந்த காலத்தில் அவ்விடத்தில் உண்டான பெருத்த கூக்குரலைக் கேட்டுத் தாங்கள் திடுக்கிட்டு விழித்து எழுந்து ஓடிவந்ததாயும், கலியாண வீட்டில் திருடர்கள் புகுந்து அடித்து விட்டு ஓடியதைக் கண்டு பயந்து, தாங்களும் அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று ஜனங்கள் எண்ணிவிடப் போகிறார்களே என்று நினைத்து அஞ்சி ஓடியதாகவும், அந்த சமயத்தில் தம்மைப் போலீசார் பிடித்துக் கொண்டதாகவும் உண்மையில் தாங்கள் எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதிகள் என்றும் அழுத்தந் திருத்தமாகக் கூறினர். அந்தப் பதினாறு மனிதர்களும் தமக்குள் ஒருவரை ஒருவர் அப்போதைக்கப்போது பார்த்திருக்கலாம் ஆயினும், ஒருவருக்கொருவர் உறவாவது, சிநேகமாவது, பரிச்சயமாவது இல்லை என்றும் அவர்கள் கூறினர். அவர்கள் சென்னைக்கு வரும் முன்னரே இடும்பன் சேர்வைகாரன் அவர்களுக்கு நன்றாகப் பாடம் ஏற்றி வைத்திருந்தான் ஆதலால், போலீசார் எவ்வளவோ நயமாகவும், பயமுறுத்தியும், வற்புறுத்தியும் கேட்டும், உண்மையை அவர்களிடத்தில் இருந்து கிரகிக்க எத்தனித்ததெல்லாம் வீணாய் முடிந்தது. 

“என்னை நீங்கள் கொன்றாலும் கொல்லுங்கள். நான் யாதொரு பாவத்தையும் அறியேன். நான் திருடவுமில்லை; யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யவில்லை” என்று ஒவ்வொருவனும் கடைசி வரையில் ஒரே சாதனையாய்ச் சாதித்துவிடவே, போலீசார் அவர்கள் சொல்வது ஒருகால் உண்மையாய் இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கொள்ளத் தொடங்கி, அவர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்பதை தாம் வேறு சாட்சிகளின் மூலமாகவே ருஜூப்படுத்த வேண்டும் என்று நினைத்து ரமாமணியம்மாள் முதலியோர் செளக்கியம் அடைந்து சரியான நிலைமைக்கு எப்போது வருவார்கள் என்று நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

ரமாமணியம்மாள், அவளது தாய், தந்தை, பக்கிரியா பிள்ளை, போயி ஆகிய ஐவரும் சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் ஒரு பிரத்தியேகமான கூடத்தில் ஐந்து கட்டில்களின் மீது படுத்திருந்தனர். அக்கினித் திராவகம் கொட்டப்பட்டதனால் பக்கிரியா பிள்ளையின் முகம் முழுதும் வெந்து புண்பட்டுப் போயிருந்தமையால், கழுத்திற்கும் மேல்பட்ட பாகம் எல்லாம் மருந்து பூசப் பட்டிருந்தது. 

ரமாமணியம்மாளின் மூக்கிலும், போயியின் கண்களிலும், மற்ற இருவரது காதுகளிலும் மருந்துகள் வைத்து பெரிய துணிக்கட்டுகள் போட்டிருந்தார்கள் ஆதலால், வீக்கத்தினாலும் துணிக்கட்டுகளினாலும் அவர்களது முகங்கள் பார்வைக்கு நிரம்பவும் பயங்கரமாகத் தோன்றின. ரமாமணியம்மாளின் மீது காணப்பட்ட விலையுயர்ந்த ஆடையாபரணங்களைக் கொண்டும், அவர்களது சாத்வீகத் தோற்றத்தைக் கொண்டும், அவர்கள் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாய் இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிர்பாராத பெரிய இடர் நேர்ந்து விட்டதென்றும் போலீசாரும், ஆஸ்பத்திரியில் உள்ளவர்களும் நினைத்து, அவர்களது விஷயத்தில் அளவற்ற அனுதாபமும் இரக்கமும் விசனமும் உருக்கமும் காண்பித்து, அவர்களை மிகுந்த அன்போடும் பச்சாதாபத்தோடும் நடத்தி, அவர்களது வேதனைகளையும் சிகிச்சைகளையும் நிரம்பவும் கவனிப்பாகச் செய்து வந்தனர். 

ஆரம்பத்தில் அவர்கள் முற்றிலும் ஸ்மரணை இன்றி, பிணங்கள் போலக் கிடந்த காலத்தில், அவர்கள் எல்லோரையும் ஒன்றாக வைத்துப் போலீசார் போட்டோப் படம் எடுத்து வைத்துக் கொண்டனர். ஏனெனில், அவர்கள் பிழைக்காமல் இறந்து போவார்களாகில், அவர்கள் இன்னார் என்பதை அறிந்து கொள்வதற்கு அனுகூலமாய் இருக்கும் என்று அவர்கள் அவ்வாறு படம் பிடித்து வைத்துக் கொண்டனர். 

அந்த முரட்டு ஆள்களைக் கொண்டு வேலாயுதம் பிள்ளை வீட்டாரை மூளிபடுத்தும் பொருட்டு, ரமாமணியம்மாள் முதலியோர் வந்தவர்கள் என்பதைப்பற்றி போலீசாரும் மற்றவரும் சிறிதும் சந்தேகங் கொள்ளவில்லை ஆதலால், அவர்கள் ஐவரையும் தனித்தனியான இடத்தில் பிரித்து வைக்க வேண்டும் என்பதை எண்ணாது ஒரே கூடத்தில் பக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்த கட்டில்களில் படுக்க வைத்திருந்தனர். 

மறுநாளாகிய சனிக்கிழமை பகல் முழுதும் அவர்கள் எல்லோரும் வாய் திறந்து பேச இயலாத நிலைமையில் கிடந்தனர். அக்கினித் திராவகத்தின் எரிச்சலைத் தாங்க மாட்டாமல் புழுவைப் போலத் துடிதுடித்திருந்த பக்கிரியா பிள்ளை அன்றைய தினம் மாலையில் தாங்கள் இன்னார் என்ற விவரத்தை மாத்திரம் வெளியிட்டானே அன்றி, மற்ற விவரம் எதையும் தெரிவிக்காமல் நரகவேதனை அனுபவித்திருந்தான். 

சனிக்கிழமை இரவில் மற்ற எல்லோரும் சிறுகச் சிறுக தெளிவடையத் தொடங்கி தங்களுக்கு நேரிட்ட பேரிடரையும் தாங்கள் இருந்த நிலைமையையும் உணரத் தொடங்கினர். இடும்பன்சேர்வைகாரனது ஆட்கள் தங்களை வேலாயுதம் பிள்ளை முதலியோர் என்று ஆள்மாறாட்டமாக எண்ணி அவ்வாறு அங்கஹீனப்படுத்திவிட்டார்கள் என்பதும் அவர்களுக்கு எளிதில் விளங்கிவிட்டது. இனி தாம் தமது ஆயுள்காலம் முழுதும் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியதான பெருத்த அவக்கேட்டை அந்த மனிதர்கள் தங்களுக்கு உண்டாக்கிவிட்டார்களே என்பதை எண்ண எண்ண அவர்களது மனம் கட்டிலடங்காமல் கொதித்து அந்த ஆட்களின் மீது மிகுந்த ஆத்திரங் கொண்டதானாலும், அவர்கள் வேண்டும் என்று அவ்வாறு தங்களுக்குக் கெடுதல் செய்யவில்லை என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது ஆகையால், அவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். 

அந்த ஆட்களைப் போலீசாரிடம் காட்டிக் கொடுத்து அவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற ஆக்கிரோஷம் அவர்களது மனதில் எழுந்தெழுந்து துடித்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியை விடுத்துச் சென்ற பிறகு இரண்டு நாழிகை காலம் கழிந்தது. நமது நீர்மேல்குமிழி நீலலோசனியம்மாள் மடிகஞ்சியும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் வந்து சேர்ந்தாள். அவளது முகம் நிரம்பவும் விசனகரமாகவும் வாட்டமடைந்தும் இருந்தது. தேகம் பதறித் துடிதுடித்தது. கண்களில் இருந்து கண்ணீர் அருவி போலக் கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

அத்தகைய பரிதாபகரமான நிலைமையில் வந்து தோன்றிய நீலலோசனியம்மாள் ரமாமணியம்மாள் முதலியோர் இருந்த கூடத்திற்குள் விரைவாக நுழைந்து, “விசாலாக்ஷியம்மா! குழந்தாய் ரமாமணி! நீங்கள் இங்கே படுத்திருக்கிறீர்கள், ஐயோ என்ன கொடுமை, என்ன கொடுமை, ஆகா! உங்களைப் பார்க்க என் இருதயம் வெடித்துப் போய்விடும்போல இருக்கிறதே! ஐயோ! உங்களுக்கு என்ன காலம் வந்ததோ! ஆகா! அந்தப் போலீஸ் ஜெவான் சொன்னதைக் கேட்டபோது, அது சுத்தப் பொய் என்றல்லவா நான் நினைத்தேன். அவன் சொன்னது போலவே காரியம் நடந்திருக்கிறதே! எப்பேர்ப்பட்ட வேளையில் நீங்கள் அந்தச் சத்திரத்தை விட்டுப் புறப்பட்டீர்களோ தெரியவில்லையே. ஆகா அந்தத் திருடர்கள் உங்களை எப்பேர்ப்பட்ட கொடுமைக்கு ஆளாக்கி விட்டார்கள். அவர்களுடைய தலையில் இன்னமும் இடி விழவில்லை. இவ்விதமான அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டு கோவிலில் உள்ள தெய்வங்கள் எல்லாம் சும்மா இருக்கின்றனவே! அடப்பாவிகளா! சண்டாள துரோகிகளா! இப்படியும் செய்ய உங்கள் மனம் எப்படித் துணிந்ததோ! உங்களுடைய கைகள்தான் கூசாமல் இந்த அக்கிரமத்தை எப்படிச் செய்தனவோ! படுபாவிகள் படுபாவிகள்!” என்று கூறி நிரம்பவும் உருகித் தவித்துக் கண்ணீரை ஆறாய்ப் பெருக்கி ஓலமிட்டதும், அவ்விடத்தில் இருந்த வைத்தியசாலைச் சிப்பந்திகள், “உஸ், உஸ், யாரம்மா அது? ஏனம்மா இப்படிக் கூச்சலிட்டு நோயாளிகளை அலட்டுகிறாய்? உன்னைப் பார்த்து இவர்களும் அழுது உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறார்கள். சும்மா சாதாரணமாகவே பேசிவிட்டு சீக்கிரம் வெளியில் போ அம்மா” என்று அதட்டிக் கூறினர். 

அதைக் கேட்ட நீலலோசனியம்மாள் சிறிது சாந்தமடைந்தவளாய், “அப்படியே ஆகட்டும், ஐயா! இப்பேர்ப்பட்ட அக்கிரமக் காட்சியைக் காண, என் மனசுக்குத் தாளவில்லை. அதனால் அழுது விட்டேனப்பா. கோபித்துக் கொள்ளாதேயுங்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். நான் மெதுவாகவே இவர்களிடம் பேசுகிறேன்” என்று சமாதானமாக மறுமொழி கூறி அவர்களை அடக்கி அப்பால் அனுப்பிவிட்டு, விசாலாக்ஷியம்மாளிருந்த கட்டிலண்டை போய் அவளது முகத்தையும் உடம்பையும் மிகுந்த வாத்சல்யத்தோடு தடவிக் கொடுத்து, “அம்மா இந்தக் கோலத்தை அடையவா அன்று நீங்கள் சத்திரத்தை விட்டுப் போனீர்கள்!” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.

தங்களுக்கு அத்தகைய அபாயம் நேர்ந்ததென்பது நீலலோசனியம்மாளுக்குத் தெரிந்திருக்காதென்றும் அது தெரிந்தாலும், அவள் தங்களைப் பார்க்க விரும்பமாட்டாள் என்றும் அவர்கள் நினைத்திருந்தார்கள் ஆதலால், அதற்கு மாறாக, அவள் வந்ததைக் கண்டு எல்லோரும் திடுக்கிட்டு மிகுந்த வெட்கமும் கிலேசமும் அடைந்து குன்றிப் போய் எவ்விதமாக அவளிடம் பேசுவதென்பதை உணராது தத்தளித்தனர். 

ஆயினும் அந்த அம்மாள் கூறிய அனுதாப மொழிகளைக் கேட்டு, அவள் காட்டிய உள்ளார்ந்த உருக்கத்தையும் அபிமானத்தையும் உணர, அவர்களது மனம் ஒருவிதமான துணிவை அடைந்தது. அந்த அம்மாள் தங்களிடம் வைத்த பிரியமும் மதிப்பும் குறையவில்லை என்றும், அவை முன்னிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன என்றும் அவர்கள் எளிதில் உணர்ந்து கொண்டனர். 

தங்களுக்கு நேர்ந்த அந்த எதிர்பாராத அவக்கேட்டினால், தாங்கள் அந்த அம்மாளிடத்திலிருந்து அபகரிக்க எண்ணிய ஐந்து லக்ஷம் ரூபாய் தங்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று ரமாமணியம்மாள் அதற்கு முன் நினைத்துவிட்டாளானாலும், அவளை மறுபடி கண்டு அவளது மன நிலைமையை உணரவே, பழைய துர்நினைவும் சதியாலோசனையும் திரும்பவும் ரமாமணியம்மாளின் மனதில் தலையெடுக்கத் தொடங்கின. 

அவள் நீலலோசனியம்மாளுக்குத் தெரியாதபடி தனது தாயை நோக்கிக் கண் ஜாடை காட்டினாள். அதன் உள் கருத்தை உணர்ந்து கொண்ட விசாலாக்ஷியம்மாள், “அம்மா! எங்களுக்கு நேரிட்ட இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வேன்? கோமளேசுவரன்பேட்டையில் எங்களுக்குத் தெரிந்த சில மனிதரைப் பார்ப்பதற்காக நாங்கள் வெள்ளிக்கிழமை மாலையில் போனோமல்லவா? போன இடத்தில் அகால வேளை ஆகி விட்டது. திரும்பி ராமசாமி முதலியார் சத்திரத்திற்கு வருவதை விட அவ்விடத்திலேயே படுத்திருந்து மறுநாள் காலையில் எழுந்து வரலாம் என்று நினைத்து அங்கேயே படுத்துத் துங்கினோம். நடு இரவில் திருடர்கள் உள்ளே புகுந்து ஆள் மாறாட்டமாய் எங்கள் மேல் பாய்ந்து இவ்விதமான கொடுமையை நடத்திவிட்டார்களம்மா. நாங்கள் இனி என்ன செய்யப் போகிறோம்! இவ்வித விகாரத் தோற்றத்தோடு நாங்கள் இனி எங்கள் ஊருக்கு எப்படிப் போகிறது? எல்லா மனிதருடைய முகத்திலும் எப்படி விழிக்கிறது? நாங்கள் இனி உயிரை வைத்துக் கொண்டிருப்பதைவிட இந்த ஆஸ்பத்திரியிலேயே இறந்து விடுவது சிலாக்கியம் எனத் தோன்றுகிறது. மறுபடி நாங்கள் உங்களைப் பார்க்கப் போகிறோமா என்று நாங்கள் சந்தேகித்திருந்தோம். ஏதோ மலையவ்வளவு பாவத்தில் நாங்கள் கடுகவ்வளவு புண்ணியம் செய்திருந்தோம் போலிருக்கிறது. உங்களுடைய மாறாத பிரியமும் சிநேகமும் எங்களுக்கு இன்னமும் இருக்கின்றன” என்றாள்.

- தொடரும்


விவாதங்கள் (2)