அத்தியாயம் 1

கலையோ, பிணையோ, கவினார் மடமயிலோ!

ஞ்சை மாநகரை மகாராஷ்டிர அரசர்கள் ஆண்டு அரசு புரிந்த காலத்தில், 1812 - ஆம் வருஷத்தில் நமது கதை ஆரம்பமாகிறது. அப்போது, திருவாரூரிலிருந்து நாகைப்பட்டணத்திற்குச் சென்ற ராஜபாட்டையின் ஓரத்தில் ஓர் அழகான மாளிகை இருந்தது. அதைச் சுற்றிலும் பூச்செடிகளும், பழமரங்களும் நிறைந்த ஒரு தோட்டமிருந்தது. அந்தத் தோட்டத்தின் நாற்புறங்களிலும் சவுக்கு, மருதாணி முதலியவற்றாலான உயர்ந்த கனமான வேலியிருந்தது. அந்த அதியலங்காரமான பூஞ்சோலைக்குள் எப்போது பார்த்தாலும் மரங்களில் பழங்கள் குலுங்கி மாதுரியமான மணத்தை நெடுந்தூரம் வரையில் வீசிக்கொண்டிருக்கும். அதுபோலவே, மிகவும் சொகுஸாகவும், அழகாகவும் வைத்து வளர்க்கப்பட்டிருந்த மல்லிகை, ஜாதி, ரோஜா, செண்பகம், இருவாட்சி, சம்பங்கி முதலியவற்றின் செடிகொடிகளில் சப்த நிறங்களைக் கொண்ட பூக்களே மயமாக நிறைந்து, தரையின் மீது ஒரு சாணுயரம் வீழ்ந்து மெத்தை பரப்பப்பெற்றது போலக்காணப்பட்டு, அந்த ராஜபாட்டையின் வழியாகச் செல்லும் பிரயாணிகள் அவற்றினால் கவரப்பட்டு அவ்விடத்தில் சிறிது நேரமாகிலும் மயங்கி ஆனந்த பரவசமுற்று நின்ற பின்னரே போகும்படி செய்தன.

அப்படிப்பட்ட அதிமனோக்கியமான உத்தியான வனத்திற்குள், காலைமாலை நேரங்களில், மடமயில் போலவும், பேடன்னம் போலவும் பிரகாசித்த மகாவசீகரமான வனப்பு வாய்ந்த இரண்டு மடந்தையர் காணப்பட்டு, அந்த ரமணீயமான ஸ்தலத்தின் இனிமையை ஆயிர மடங்கு அதிகரிக்கச் செய்தனர். அவ்வாறு காணப்பட்ட இரண்டு பெண்மணிகளும் சகோதரி முறைமையுடையவர்கள். அவர்கள் தாய்தந்தையற்றவர்களானாலும், தந்தையின் உடன்பிறந்தாளான அத்தையினால் மிகுந்த வாத்சல்யத்தோடு வளர்த்துக் காப்பாற்றப்பட்டு வருகிறவர்கள். 

அந்த மடந்தையரின் தந்தை தஞ்சைபுரி அரண்மனையில், ராணுவத்தில், காலாட்படைகளுக்குத் தலைவராக இருந்து இங்கிலீஷ்காரரோடு நடத்தப்பட்ட ஒரு யுத்தத்தில் மாண்டு போய்விட்டதாகவும், அதைக் கேட்டு அந்த விசனத்தைப் பொறாமல் அவரது மனைவியும் தேக அசௌக்கியமடைந்து ஐந்தாறு மாத காலத்தில் இறந்து போய்விட்டதாகவும், அப்போது குழந்தைகளாகவும் அநாதைகளாகவும் இருந்த அந்த இரண்டு நங்கையரையும், அவர்களது அத்தையான நீலலோசனி அம்மாள் எடுத்து வந்து தனக்குச் சொந்தமான முன் விவரிக்கப்பட்ட மாளிகையில் வைத்து, தாயைக்காட்டிலும் பன்மடங்கு அதிகப் பக்ஷமாகவும், வாஞ்சையோடும் அவர்களை வளர்த்து வருவதாகவும், அந்த ஊரிலுள்ள எல்லோரும் அவர்களது வரலாற்றை அறிந்து கொண்டிருந்தனர். 

நீலலோசனி அம்மாள் வைதவ்வியம் அடைந்தவள். அந்த அழகான சிறிய மாளிகையைத் தவிர, சொற்பமான ஆஸ்தியே நீலலோசனி அம்மாளுக்கு இருந்தமையால், அவள் செட்டும் சிக்கனமுமாகக் குடித்தனம் செய்து அந்தப் பெண்மணிகள் இருவரையும் செல்வமாகவும் சிறப்பாகவும் காப்பாற்றி, அக்காலத்தில் பெண்டிர் கற்கத்தகுந்த கல்வியைப் புகட்டி, அவர்களை நற்குண நல்லொழுக்கங்களிற் பயிற்றி வந்தாள். அந்த மங்கையருள் மூத்தவளது பெயர் கமலம். அவள் சுமார் பதினேழு வயதடைந்தவள். இளையவளது பெயர் ஷண்முகவடிவு. அவள் பதினைந்து வயதடைந்தவள். அவர்களிருவரும் உயர்வான ஆடையாபரணங்களை அணிந்திராவிடினும், அவர்களுக்கு இணையான கட்டழகும் காந்தியும் வசீகரத்தன்மையும் வாய்ந்த பெண் சிருஷ்டியே இந்த உலகத்தில் இல்லையென்று எல்லோரும் கூறி பிரமிக்கும் படியாக, அந்த அணங்குகள் இருவரும் இயற்கை எழில்பெற்ற இரண்டு நட்சத்திரச் சுடர்கள் போல் இருந்தனர். 

ஆனால், மூத்தவளான கமலத்திற்கும் இளையவளான ஷண்முக வடிவிற்கும், தேக அமைப்பிலும், குண விசேஷங்களிலும், நடத்தையிலும், அதிக தாரதம்மியம் இருந்து வந்தன. இருவர் களும் அதிதீக்ஷண்ய புத்தியுடையவர்களானாலும் மூத்தவள் மகா தந்திரி; இளையவன் குழந்தை போன்ற கபடமற்ற மனமுடையவள். மூத்தவள் வேளாவேளைக்கு நன்றாக உண்டு, அழகாக உடுத்தி, சொகுஸாக இருந்து, மெலுக்காகப் - பொழுதைப் போக்குகிற சுகவாஸி. இளையவளோ உண்டிசுருங்குதல் பெண்டிர்க்கழகு என்ற வாக்கியத்திற்கு ஒரு உதாரணமாய், எவ்வளவு சொற்பமாக உண்ணக் கூடுமோ அவ்வளவு சொற்பமாக உண்டு வீட்டிலுள்ள சகலமான அலுவல்களையும் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், தலைப்பொறுப்பாகச் செய்யும் உழைப்புக் குணமுடையவள்.

மூத்தவள் மாசுமறுவற்ற தேக அமைப்பையும், கட்டுமஸ்தான அங்கங்களையும், வசீகரமான முகம், மார்பு, இடை, நடை முதலிய சிறப்புகளையெல்லாம் சம் பூரணமாகப் பெற்று, நவராத்திரிக் கொலுவில் சிங்கார மண்டபத்தில் சித்திரப் பதுமைகளிடையில் கொலு வீற்றிருந்து அக்கிராசனம் வகிக்கத் தகுந்த ஒப்புயர்வற்ற பட்டத்து ராணிபோல இருந்து, ரதி தேவியோ, இந்திராணியோ என்று சகலரும் மயங்கிக் கலங்கும்படியாகவும், ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவம் புரியும் துறவிகளும் மோகலாகிரி கொண்டு நெடுமூச்செறியும் படியாகவும் இருந்தாள். ஷண்முகவடிவோ அடக்கம், ஒடுக்கம், வீட்டின் காரியங்களிலே கவனம் முதலிய உத்தம குணங்களெல்லாம் நிறைந்து, மகாலக்ஷ்மியோ, பார்வதி தேவியோ, கலைமகளோ என அவளைக் கண்டோர் எவரும் ஒருவித சந்தோஷமும் வியப்பும் கொண்டு, அவளிடத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைக்கத் தகுந்தகுடும்பஸ்திரீயாக இருந்தாள். வேடிக்கையாகவும், ஆசியமாக வும், உல்லாசமாகவும் பேசிக்கொண்டிருக்க யாராவது மனிதர் அகப்பட்டுவிட்டால், மூத்தவள் மூன்று தினங்களானாலும் ஊணுறக்கமின்றி அவர்களோடு பேசிச் சிரித்துக் கொண்டி ருப்பாள்.

இளையவளோ மிருதுபாஷிணி; அநாவசியமான வார்த்தைகளைப் பேசினால் வாய் முத்து சிந்திவிடுமென எண்ணுகிறாளோவென மற்றவர் நினைக்கும்படியாக, ஏதேனும் அவசியமான விஷயங்களை மாத்திரம் பேசுவாள்; மற்ற வேளைகளில், வீட்டின் அலுவல்களைச் செய்வதிலோ, அல்லது, நல்ல புண்ணிய சரிதங்களைப் படிப்பதிலோ, அல்லது, தனது அத்தை அக்காள் முதலியோருக்கு ஆகவேண்டிய குற்றேவல்களைச் செய்வதிலோ தனது கவனத்தை நாள் முழுதும் செலுத்திக் கொண்டிருப்பாள். தன் மனது நினைத்த காரியத்தை மற்றவர் நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற ஒரு பிடிவாத குணம் கமலத்தினிடத்தில் இருந்துவந்தது. ஷண்முக வடிவோ, மூத்தோர் சொல்லும் வார்த்தையை அமிர்தமாக மதித்து அவர்களுக்கு அடங்கி அவர்களது பிரியப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற உத்தமஸ்திரீயின் லக்ஷணம் பூர்த்தியாகப் பெற்றிருந்தாள்.

இவ்விதமாக அந்த இரண்டு பெண்மணிகளின் குணாதிசயங்களின் தாரதம்மியம் இருந்துவந்ததானாலும், அவர்களிருவரும் ஒருவர் மீதொருவர் கரைகடந்த பிரியமும், வாஞ்சையும் வைத்தவர்களாய் இரண்டுடலும் ஓருயிரும் போல இருந்ததன்றி, தாயைக் காட்டிலும் பன்மடங்கு அதிக அன்பாகத் தங்களைக் காப்பாற்றி வந்த அத்தையிடத்தில் மட்டுக்கடங்காத மரியாதையும் பயபக்தியும் வைத்து விருத்தாப்பிய தசையிலிருந்த அந்த அம்மாளைப் பேணிப் பாராட்டி வந்தனர்.

அவ்வாறு, அந்த எளிய குடும்பத்தினர் வாழ்க்கை நடத்தி வந்த காலத்தில், அவர்களுக்கு மகாவிபரீதமான ஒரு பொல்லாங்கு சம்பவித்தது. அந்தப் பொல்லாங்கு, எவரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று நேர்ந்தமையால், அதன் கொடுமை அவர்களால் சகிக்க ஒண்ணாததாக இருந்தது. அந்த மடந்தையரின் அத்தையான நீலலோசனியம்மாளுக்குத் திடீரென்று பக்ஷவாத நோய் ஏற்பட்டுப் போகவே, அவள் பாயும் படுக்கையுமாக ஆகிவிட்டாள். வாயைத் திறந்து பேசமாட்டாமல், அவளுக்கு வாய் அடைத்து போய்விட்டது. கைகளால் சைகை காட்டித் தனது மனதிலுள்ளதை வெளியிடலாமென்பதற்கும் கைகளும் சொரணையற்றுக் கட்டை போலப் போட்ட இடத்தில் கிடந்தன. அவளது உயிர்மாத்திரம் உடலில் தங்கியிருந்தது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவள் நன்றாக உணர்வது; அவளது கண்களின் பிரகாசத்தினால் தெரிந்தது. 

ஆனால், அவளது உடம்பின் எந்தப் பாகமும், அவளது விருப்பத்தின்படி அசையாமல் உயிரற்ற மாம்சத்திரளாக இருந்தது. அவள் அப்படிப்பட்ட விபரீதமான நிலைமையிலிருந்தது அவள் இறந்து போவதைவிடப் பன்மடங்கு அதிகமான கொடுமையாக இருந்தது. அந்த விபரீதத்தைக் கண்டு மிகுந்த கலக்கமும் திகிலும், கவலையும் கொண்ட அந்தப் பெண்மணிகள் இருவரும், கையைப் பிசைந்து கொண்டு, தாங்கள் என்ன செய்வதென்பதை அறியாமல் தத்தளித்திருக்க, அவர்களது வீட்டின் வேலைக்காரியான முத்தம்மாள் என்பவள், அந்த ஊரிலுள்ள பிரபல வைத்தியனான நாவித முருகனை அழைத்து வந்து நீலலோசனியம்மாளின் தேகக்கூறை உணர்ந்து அதற்குத் தகுந்த ஒளஷதங்களைக் கொடுக்கும்படிச் செய்தாள். அவன் தன்னால் இயன்ற வரையில் முயன்று பல நாட்கள் வரையில் மருந்துகள் கொடுத்ததெல்லாம் சாம்பலில் பெய்த நெய்போல வீணாயிற்று. அந்த ஊரில் அவர்களுக்குப் பழக்கமாக இருந்த சில மனிதர்களது யோசனையின் மேல் வேறே ஊர்களிலிருந்த பல பிரபல வைத்தியர்களும் வருவிக்கப்பட்டனர். அவர்கள் தங்களது திறமையை முற்றிலும் புலப்படுத்தி மாதக்கணக்கில் அங்கே இருந்து சிகிச்சை செய்து பார்த்தனர். 

ஆனால் நீலலோசனி அம்மாளது தேக ஸ்திதியில் சொற்ப அநுகூலமும் காணப்படவில்லை. அவளது தேகத்தின் ஒவ்வோர் அங்கமும் மீளாதபடி இறந்து போக, அவளது உயிர் மாத்திரம் நிற்பதுபோல ஆகிவிட்டது. அவ்வாறு ஆறுமாத காலம் கழிந்தது; நீலலோசனியம்மாளது பெட்டியில் பணமிருந்த வரையில், அந்தப் பெண்களுக்குப் பணவிஷயத்தைப் பற்றிய கவலையே தோன்றாமலிருந்தது. மூத்தவளான கமலம் துரும்பையெடுத்துத் துரும்போடு போடாமல் மெலுக்காக இருக்கும் இயற்கை யுடையவளாதலால், வீட்டின் சகலமான பொறுப்பையும் அலுவல்களையும் ஷண்முக வடிவே ஏற்று நடத்திக்கொண்டு போக நேர்ந்தது.

கடைசியாக ஒருநாள், ஷண்முகவடிவு தனது அத்தையின் பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த கடைசி ரூபாயை எடுத்து வேலைக்காரியிடத்தில் கொடுத்துக் கடைக்கு அனுப்பிய போதுதான் மறுநாளைக்கு வேண்டிய பணத்திற்கு என்ன செய்கிறது என்ற கவலையும் அச்சமும் அவளது மனதில் எழுந்து சஞ்சலப்படுத்தத் தொடங்கியது; அவள் உடனே தனது அக்காளண்டையில் போய்த் தனது கவலையை வெளியிட, அக்காள் சிறிது நேரம் சிந்தனை செய்தபின், தனது அத்தையின் பெட்டிகளை நன்றாக ஆராய்ந்து அவற்றுக்குள்ளிருந்த தஸ்தாவேஜுகளை எல்லாம் படித்துப் பார்த்தால் அத்தைக்கு அதுவரையில் எந்த மூலமாக வருமானம் வந்து கொண்டிருந்ததென்பது தெரியுமென்று தங்கைக்கு யோசனை சொன்னாள். அவ்வாறே அத்தையின் பெட்டிகளிற்குள்ளிருந்த தஸ்தாவேஜுகள் யாவும் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. அவைகளில் பண விஷயமான தகவல் எதுவும் அகப்படவில்லை. மிகவும் இடுக்காக இருந்த அந்த நிலைமையில் அவர்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் உண்டாக்கத்தக்க எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை.

பெண்கள் இருவரும் கையைப் பிசைந்துகொண்டு தவிக்கிறார்கள். அப்போது இளையவளுக்கு ஒரு நினைவு தோன்றியது. தங்களது அத்தை ஆறு மாத காலத்திற் கொருமுறை திருவாரூரிலிருந்த ஒரு செட்டியாரது பாங்கிக்கிப்போய்ப் பணம் வாங்கிக் கொண்டு வந்ததை அவள் அறிந்து கொண்டிருந்தாளாதலால், தான் அங்கே போய் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்ற நம்பிக்கை கொண்டவளாய், ஷண்முகவடிவு தனது வேலைக்காரியை அழைத்துக் கொண்டு திருவாரூரிலிருந்த செட்டியார் பாங்கிக்குப் போய்த் தங்களது வரலாற்றைச் சொல்லி, தங்களுக்கு எங்கிருந்தாகிலும் பணம் வருவதுண்டா வென்று விசாரித்தாள். 

- தொடரும்


விவாதங்கள் (4)