அத்தியாயம் 1

31. மயில்விழி மான்

முன்னுரை

அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி. பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் சென்று அந்த வண்டிக்குப் பழக்கமாயிருந்தது. ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது மைல் வேகத்துக்குக் குறைவாகப் போக முடியவில்லை.

திடீரென்று சாலையின் நட்ட நடுவில் ஒருவர் வழி மறித்து நின்று வண்டியை நிறுத்தும்படி கையைக் காட்டினார்.

"ஆள்மேலே ஓட்டட்டுமா? ஒதுக்கி ஓட்டட்டுமா?" என்று டிரைவர் கேட்டார்.

"வேண்டாம் வேண்டாம்! சற்று நிறுத்தித்தான் பார்க்கலாமே! ஏதாவது அவசரமாக ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய காரியமாயிருக்கலாம்!" என்றேன்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை. வண்டியை நிறுத்தச் சொல்லி சிகரெட்டுப் பற்றவைக்க நெருப்புப் பெட்டி இருக்கிறதா என்று கேட்பார்கள். இந்தப் பக்கத்து வழக்கம் அது!" என்று சொல்லிக் கொண்டே டிரைவர் வண்டியை நிறுத்தினார்.

சாலையில் நின்றவர் என் பக்கம் வந்து, "ஐயா! மிக்க அவசரமான காரியம் ஒன்று தங்களிடம் சொல்ல வேண்டும். வண்டியில் ஏறிக்கொண்டால் தாம்பரம் போவதற்குள் சொல்லி முடித்துவிடுவேன்! ஏறிக் கொள்ளலாமா?" என்று கேட்டுக் கொண்டே என்னுடைய பதிலுக்காக காத்திராமல் கதவைத் திறந்து வண்டிக்குள் காலை வைத்துவிட்டார். அப்புறம், அவரைப் பிடித்து வெளியே தள்ளினால் தவிர இறங்கச் சொல்வதற்கு வேறுவழியில்லை. அதைக் காட்டிலும் தாம்பரத்தில் கொண்டு போய் இறங்கி விட்டு விடுவதே நல்லது என்று எண்ணி அவர் உட்காருவதற்கு இடங் கொடுத்தேன்.

டிரைவர் மறுபடி வண்டியை விட ஆரம்பித்த போது, அதன் மெல்லிய இயந்திரக் கருவிகளின் மீது தம் கோபத்தையெல்லாம் காட்டினார். வண்டி பூகம்பத்தினால் அசைவதுபோல் அசைந்துவிட்டுத் தடார், படார் என்று சத்தமிட்டுக் கொண்டு, கிளம்பும் போதே மணிக்கு அறுபது மைல் வேகத்தில் கிளம்பிற்று!

"என்ன அவ்வளவு அவசரமாக என்னிடம் சொல்ல விரும்பிய காரியம்?" என்று கேட்டேன்.

"உம்முடைய தலைமையில் ஒரு கூட்டம் போட்டு 'பழந்தமிழர் நாகரிகம்' என்னும் பொருள்பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று சில நாளாக எனக்கு ஆவல்!"

இதைக் கேட்டதும் என்னை அறியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டேன்.

"எதற்காகச் சிரிக்கிறீர்?" என்று கேட்டார்.

"எதற்காகவா? எல்லாம் வள்ளுவர் பெருமானுடைய வாக்கை நிறைவேற்றுவதற்காகத்தான்."

"'இடுக்கண் வருங்கால் நகுக!' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார் அல்லவா?"

"எனக்குத் தெரிகிறது. சொற்பொழிவு ஆற்றுவதற்கு இவ்வளவு அவசரமா வண்டியைச் சாலையின் நடுவில் நிறுத்த வேண்டுமா என்று நினைத்துச் சிரிக்கிறீர். யக்ஷனுடைய கேள்விக்குத் தருமபுத்திரர் கூறிய பதிலை உமக்கு ஞாபகப்படுத்துகிறேன். இலக்கியத் துறையில் ஈடுபட்டவர்கள் திடீர் திடீரென்று ஒவ்வொருவராகக் காலமாகிக் கொண்டு வருகிறார்கள்!..."

அவர் தம்மைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறாரா, அல்லது எனக்கு எச்சரிக்கை செய்கிறாரா என்று எண்ணி வியந்தேன்.

"ஆகையால், ஒவ்வொருவரும் ஏதாவது முக்கியமாகச் செய்ய வேண்டிய காரியமிருந்தால், ஒத்திப் போடாமல் உடனே செய்து விட வேண்டும். இந்த வண்டி போகிற வேகத்தைப் பார்த்தால்...?"

"எல்லாவற்றுக்கும், நீங்களும் ஒத்திப் போடாமல் உடனே ஆரம்பித்துவிடுவது நல்லது."

"நான் இன்றைக்கு உயிரோடிருப்பதும், உம்முடன் இந்த வண்டியில் ஏறி வருவதும் மிக மிக அதிசயமான காரியங்கள். ஆறு மாதத்துக்கு முன்பே என் ஆயுள் முடிந்திருக்க வேண்டியது. என்னுடைய அதிசயமான அநுபவத்தைத் தமிழ் மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் என்னைக் காப்பாற்றி இவ்வளவு நாள் உயிரோடு வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். இறைவனுடைய கருணையையும் ரொம்பச் சோதிக்கக் கூடாது அல்லவா? ஆகையால் இதோ என் கதையை ஆரம்பித்து விடுகிறேன். ஆமாம்; கதை போலத் தான் இருக்கும். உண்மையில் நடந்தது என்று சொன்னால், யாரும் நம்பப் போவதில்லை. ஆகையால் கதையென்று சொல்லிவிடுவதே நல்லது. நீரும் என் அநுபவத்தை எழுதுவதாயிருந்தால், 'இந்தக் கதையில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் எல்லாம் கற்பனையே; யாரையும் குறிப்பிடவில்லை' என்று திட்டமாக அறிவித்து விடுவது நல்லது!" என்று சொன்னார்.


விவாதங்கள் (7)