சிறுகதை

காயத்ரி, அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் கண்களை மூடி சலனமற்றுப் படுத்திருந்தார். சிறுவயதில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவள் பலமுறை அவரை உற்றுக் கவனித்திருக்கிறாள். அப்போதிற்கும் இப்போதிற்கு அவளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. 

அவள் எந்தவித அசைவுமின்றி அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து அவ்வப்போது சில துளிகள் வழிந்தவாறு இருந்தன. அப்போதெல்லாம் கண்களை துடைத்துக் கொண்டு அவரைப் பார்க்கும் அந்த நொடி மட்டும் அவர் லேசாகச் சிரிப்பதுபோல் தோன்றியது.

காயத்ரிக்கு தன் அப்பாவைவிட தன் மாமாவைத்தான் மிகவும் பிடிக்கும். உண்மையில் அவள் தன் அப்பாவை வெறுத்தாள். தன்னையும் தன் அம்மாவையும் விட்டு ஓடிப்போன கையாலாகாத ஒரு கோழை என அவரைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொள்வாள். 

தன் அம்மாவின் அண்ணனான சோமசுந்தரம் மாமா மட்டும் இல்லையென்றால் தங்கள் நிலை என்னவாகியிருக்கும் என அவ்வப்போது அவள் உறக்கம் வராத இரவுகளில் நினைப்பதுண்டு. அந்த சமயங்களில் அவள் உடல் மெல்ல நடுங்கும். 

பரந்து விரிந்திருக்கும் தன் ஞாபக மரத்தில் வேறு எதாவது ஒரு நல்ல கிளையைப் பற்றிக் கொள்ளத் துடிப்பாள். மாமாவின் சிரித்த முகம், அவரின் வாஞ்சையான அணைப்பு, அவர் செல்லங்கொஞ்சும் வார்த்தைகள் என அவள் தேடித் தேடி தன் உள்ளத்தை அமைதிப்படுத்திக் கொள்வாள்.

மீண்டும் அவள் படுக்க வைக்கப்பட்டிருக்கும் அவரைப் பார்த்தாள். இனி தன் வாழ்நாள் முழுவதும் அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவரின் இந்த அசைவற்ற உடல்தான் தன் கண்முன் தோன்றும் என நினைக்கும்போதே அவள் இதயம் நொறுங்கியது.

“காயத்ரி” என்று அழைத்தான் சோமசுந்தரத்தின் மகன் ரவி.

“என்ன ரவி?”

“எல்லாருக்கும் ஃபோன் போட்டு சொல்லிட்டேன். யாரும் எதுவும் சரியா பதில் சொல்லல. அக்கம்பக்கத்துல கொஞ்சம் பேரு வந்திருக்காங்க. சித்தப்பா ஸ்டேஷன் வரைக்கும் போயிருக்கார். அங்க லெட்டர் வாங்கனாத்தான் தகனம் பண்ண முடியும். மத்த வேலையெல்லாம் பிரிச்சிக் குடுத்திருக்கேன். இனி ஆகறது ஆகட்டும்” என்று ரவி சொல்லி முடிக்கும்போதே அவன் கண்கள் கலங்கின.

காயத்ரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இந்த நேரத்திலா இப்படி ஆக வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

“ரவி...”

“ம்… சொல்லு காயத்ரி.”

“என் மேல கோவம் ஒன்னும் இல்லையே?”

“ச்சே ச்சே… எனக்கென்ன கோவம். என்ன இந்த நேரத்துல இப்படி ஆயிருக்க வேண்டாம். எல்லாருக்கும் அதான் கஷ்டம். அவருக்கு இப்படித்தான் இருந்தா என்ன பண்ண முடியும், சொல்லு?”

காயத்ரி அமைதியாக இருந்தாள். வெளியே ஏதோ சத்தம் கேட்க, “இதோ வரேன் இரு” என்று சொல்லிவிட்டு ரவி வெளியே சென்றான். மீண்டும் காயத்ரி தன் மாமாவின் முகத்தையே பார்க்கத் தொடங்கினாள்.

காயத்ரிக்காக அவர் எவ்வளவோ பேரைப் பகைத்துக்கொண்டார். சில நெருங்கிய சொந்தங்கள், நல்ல நண்பர்கள். ஒரு நாள் அவர் மனைவியைக்கூட. ஆனால், எப்போதும் அவர் காயத்ரியை விட்டுக் கொடுத்ததேயில்லை.

***

ல்ல மழை பெய்துகொண்டிருந்த ஒரு மாலை நேரம். டைப் ரைட்டிங் கிளாஸ் முடித்துவிட்டு காயத்ரி வீட்டுக்குள் நுழைந்த சமயத்தில் மாமாவிற்கும் அத்தைக்கும் கடுமையான வாக்குவாதம். இவள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி வீடே அமைதியானது. 

அந்த நொடி அவள் அத்தை அவளைப் பார்த்த பார்வையை அவளால் இன்னும் மறக்க முடியவில்லை. மாமா மெல்ல எழுந்து வந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே சென்றார். சும்மாவே கடைத் தெருவைச் சுற்றி வந்தார்கள். என்னவோ நினைத்தவர் சட்டென ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து இரண்டு மாசாலா தோசை சொன்னார். அது வரும் வரை அமைதியாகவே இருந்தார்.

அதற்குள் காயத்ரி ஒருவாறு என்ன பிரச்சனையென்று ஊகித்திருந்தாள். அப்போதுதான் அவளுக்கு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வந்திருந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். மாமா என்ன அடுத்தது என்று கேட்டபோது இஞ்சினியரிங் என்று வெட்கத்தோடு சொன்னாள். அவரும் சிரித்துக்கொண்டார். 

அப்போதே அத்தையின் முகம் மாறியதை அவள் கவனித்தாள். அப்போதிருந்த சந்தோஷத்தில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுதான் இப்போது வெடித்திருக்கிறது. 

“நமக்குன்னு ஒரு புள்ள இருக்கறது கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்” என்று முன்பு ஒருமுறை அத்தை சொன்னது ஞாபகம் வந்தது. 

“காயத்ரி அடக்கமா இரு. அதிகமா ஆசப்படாத” என்று சாகும்போது அம்மா சொன்னதும் நினைவிற்கு வந்துபோனது.

எப்போது தோசை வந்தது. தான் அதை எப்போது சாப்பிட ஆரம்பித்தோம் என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை. மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தாள்.

“மாமா...”

“ம்…”

“நாளைக்கு காலையில நான் போயி பி.எஸ்ஸி.,க்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்துடறன்.”

சோமசுந்தரம் தோசையை மென்றுகொண்டே அவளை முறைத்தார்.

“இல்ல மாமா.”

“என்கிட்ட நீ என்ன கேட்ட?”

காயத்ரி அமைதியாக இருந்தாள்.

“ஒழுங்கா நீ ஆசப்பட்டத படி. யார் சொல்றதயும் காதுலப் போட்டுக்காத. உனக்கு எதாவது வேணும். என்கிட்ட மட்டும் கேளு.”

காயத்ரி கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டேயிருந்தது.

“சீக்கிரம் சாப்பிடு, போலாம்.”

***

“இங்க எல்லாம் உன் இஷ்டம்ன்னு நெனச்சிட்டு இருக்கியா? உனக்கு பாத்து பாத்து செஞ்சதுக்கு அவரு மூஞ்சில நல்லா கரிய பூசிட்டமா. நல்லா இரு” என்று காயத்ரியை திட்டிக்கொண்டே அழ ஆரம்பித்தாள். அத்தை. 

காயத்ரி மாமாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் காயத்ரியைப் பார்ப்பதைத் தவித்தார். எதுவும் பேசவில்லை. அடுத்த முறை வாயைத் திறந்த தன் மனைவியை அதட்டி உள்ளே அனுப்பினார். தன் மகனிடம், “ஏன் லேட்டு” என்று விசாரித்தார். மற்றபடி அவர் காயத்ரியிடம் எதுவுமே பேசவில்லை.

காயத்ரி இரண்டு நாட்களுக்கு அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிலேயே இருந்தாள். எதுவும் பேசவில்லை. ஒருநாள் முழுக்க சாப்பிடவில்லை. அறைக்குள் வந்த மாமாதான் அவளை வற்பூர்த்தி சாப்பிட வைத்தாள். அன்று மாலை கணேஷ் ஃபோன் செய்தான். முதல் இரண்டு காலை அவள் எடுக்கவில்லை. மூன்றாவதை எடுத்து மெல்ல, “ம்...” என்றாள்.

“காலையில உங்க மாமா என்ன பாக்க வந்திருந்தார்.”

இதைக் கேட்டதும் காயத்ரி மின்னல் தாக்கியது போல் துடித்து எழுந்து உட்கார்ந்தாள். “என்ன சொன்னார்?”

“பெருசா ஒன்னுமில்ல, என்னப் பத்தி விசாரிச்சார். அம்மா, அப்பாவப் பத்தி கேட்டார். வீட்டு அட்ரஸ் கேட்டார். கொடுத்தேன். அங்க போயி பேசிருப்பார் போல, எங்கப்பா ஃபோன் பண்ணிக் கேட்டார். சொன்னேன். மொதல்ல எதுவும் சொல்லாம ஃபோனக் கட் பண்ணிட்டார். அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி ஃபோன் பண்ணி பொண்ணு பாக்க போலாம்னு சொன்னார். ஏன் உங்க மாமா இன்னும் வரலயா?”

“வந்துட்டார். எதுவும் சொல்லல. அத்தைக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்னு இருக்கலாம்”

“சரி கொஞ்ச நாள்தானே பாத்துக்கோ. நாளைக்கு ஆபீஸ் வந்துடுவல்ல?”

“ஏன் பாக்கணுமா?”

“இல்ல, வேலை அதிகமா இருக்கு. வந்துடு.”

“அடப்பாவி!”

***

ணேஷ் வீட்டிலிருந்து பெண் பார்த்துவிட்டுப் போன மறுநாள் அத்தை தன் சொந்தக்காரர்களையெல்லாம் ஃபோன் போட்டு வரவழைத்து பிரச்சினை செய்துகொண்டிருந்தாள். சோமசுந்தரத்தை நடுவீட்டில் உட்கார வைத்துவிட்டுச் சுற்றி நின்றுகொண்டு ஆளாளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

“இத பாருங்க… எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.”

“நீங்க ஆம்பளப் புள்ளயத்தான் பெத்து வெச்சிருக்கீங்க. அதுக்காக அவனுக்கும் எதாவது சேத்து வைங்க.”

“இப்படி உங்க தங்கச்சி, தங்கச்சி பொண்ணுக்கே செய்யறதுக்கு எங்க வீட்டு பொண்ண எதுக்கு கல்யாணம் பண்ணீங்க?”

“இருக்கறதயாவது மொதல்ல பொண்டாட்டி பேர்லயோ, இல்ல புள்ள பேர்லயோ எழுதி வைங்க. இல்லன்னா அவ அதையும் லவட்டிக்கிட்டு போயிட போறா.”

பேச்சுக்கள் சுற்றிலுமிருந்து சோமசுந்தரத்தைத் தாக்கிக்கொண்டிருந்தது. அவர் மெல்ல எழுந்தார். சுற்றி அனைவரையும் ஒருமுறை பார்த்தார்.

“இங்க பொண்டாட்டிய வச்சி வாழத் துப்பு இல்லாதவன், குடிச்சிட்டு பொண்டாட்டிய அடிக்கறவன், ரோட்டு விழுந்து கிடக்கறவன், கூத்தியா வெச்சிருக்கறவன், சொத்துக்காக அப்பன கொன்னவன், அம்மா தொறத்திவுட்டனத் தவிர எவனாவது யோக்கியன் இருந்தா மட்டும் எங்கிட்ட வந்து நியாயம் பேசு. மத்தவன்லாம் அப்படியே கிளம்பிடு.”

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த வீட்டில் சோமசுந்தரமும் அவர் மனைவி மட்டும்தான் இருந்தனர். அவள் தனக்குள் ஏதோ புலம்பிக் கொண்டேயிருந்தாள்.

இரண்டு மாதத்தில் காயத்ரியின் கல்யாணத்தை முடித்து அவளை கணவனுடன் பெங்களூருக்கு அனுப்பிவைத்தார்.

காயத்ரிக்கு மாமாவை விட்டு பிரிய மனமேயில்லை. “நான் எங்க போவப் போறன்” என்று சிரித்துக்கொண்டே அவளை அனுப்பிவைத்தார்.

***

நினைவுகளிலிருந்து மீண்டு தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள் காயத்ரி. வெளியே ஏதோ சலசலப்புக் கேட்டது. அத்தையின் சொந்தங்கள் வர ஆரம்பித்திருந்தனர். வெளியே ரவியிடம் வாக்குவாதத்தில் இருந்தனர். அடிக்கடி காயத்ரியை திட்டுவதும் ரவி அவர்களைத் தடுப்பதும் காயத்ரிக்கு கேட்டது.

“என்னவாம்?” என்றது ஒரு குரல்.

“இருக்காளாம்” என்றது இன்னொரு குரல்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஒவ்வொருவராக சோமசுந்தரத்தைச் சுற்றி உட்கார்ந்தனர். கூட்டமே இல்லை. இருந்தாலும் சாவு வீட்டிற்கான இறுக்கம் கூடிக்கொண்டே வந்தது. யாருமே காயத்ரி பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. சுற்றி அமர்ந்திருந்த அனைவருமே அத்தையின் சாவின்போது அதற்கு காயத்ரிதான் காரணம் என்று பிரச்சினை செய்து ஒரு சமயத்தில் அவளை அடிக்க வந்தவர்கள். 

அந்த நேரத்திலும் அந்த துக்கத்திலும் சோமசுந்தரம் காயத்ரிக்கு பக்கபலமாக இருந்தார். காயத்ரியை யாரையும் நெருங்கவே விடவில்லை. ரவி காயத்ரியை விட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டார். 

ரவி சோமசுந்தரத்தின் பேச்சைத் தட்டாமல் காயத்ரியுடனே இருந்தான். யாரோ ஏதோ கேட்டதற்கு அவன் காயத்ரிக்குப் பரிந்து பேசி சண்டைக்குச் சென்றான். ரவியும் மற்றவர்களைப் போலத்தான் தன்மீது வெறுப்பில் இருக்கிறானோ என்ற சந்தேகம் அதுவரை காயத்ரிக்கு இருந்தது. அப்போதிலிருந்து அது மறைந்துவிட்டது. 

அக்கா ஸ்தானத்திலிருந்து தான் மறந்துவிட்டது அவனுக்கு எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அதை ஒருமுறை அவள் சோமசுந்தரத்திடம் சொல்லும் போது அவர் மெல்லச் சிரித்துக் கொண்டார்.

புடவையை வாயில் பொத்திக்கொண்டு தேம்பிக்கொண்டிருந்தவர்களின் அழுகை மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் வெறும் அழுகையாகவும் பிறகு அதில் சொற்களின் ஆதிக்கம் நிறைந்தும் காணப்பட்டது. சொற்கள் மெல்ல வசைகளாக மாறி காயத்ரியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத் தொடங்கியது.

காயத்ரி எதையும் கண்டுகொள்ளாமல் தன் மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் கணேஷ் மெல்ல அவள் தோள்மீது கை வைத்தான். அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தாள்.

“எதுக்கு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க. மியூட்ல போட்டு பாக்க வேண்டியது தான?”

“ஏன் உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கா?”

“அதுக்கு இல்ல... அதெல்லாம் கேட்கும்போது டென்ஷன் ஆகுது.” கணேஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போது காயத்ரியின் மகள் அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, “அம்மா வால்யூம கம்மி பண்ணுங்க… ஆன்லைன் கிளாஸ் போகுது… மிஸ் என்ன என்னன்னு கேக்கறாங்க” என்று சலிப்பாகச் சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்துகொண்டாள். கணேஷ் மீண்டும் டைனிங் டேபிளில் இருந்த தன் லேப்டாப்பின் அருகில் சென்று தன் வேலையைத் தொடந்தான்.

காயத்ரி பெருமூச்சொன்றை விட்டாள். அருகில் இருந்த ஹெட்போனை எடுத்து கணினியில் இணைத்து மாட்டிக்கொண்டாள். இப்படியா தனக்கு நேரவேண்டுமென்று தன்னையே நொந்துக்கொண்டாள். 

தனக்காக எல்லாம் செய்து தனக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்துக்கொடுத்த மாமாவின் சாவிற்குப் போவதற்குக் கூட தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைத்தபோதே அவள் கண்கள் மீண்டும் கலங்கியது. ‘இந்த பெருந்தொற்று ஒழியும்வரை நீங்களாவது காத்திருக்கக்கூடாதா மாமா?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

திரையில் காட்சிகள் மாறத்தொடங்கின. காயத்ரிக்காக ஸூம் லைவ்வில் மாமாவின் இறுதிச் சடங்கை ரவி காட்டிக்கொண்டிருந்தான். அவளோடு சேர்த்து வரமுடியாத இன்னும் சிலரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சாட் பாக்ஸில் வந்து அடிக்கடி சிலர் காயத்ரியை வம்பிழுத்தனர். 

“நீயாவது போயிருக்கக்கூடாதா, உனக்கு எவ்ளோ செஞ்சிருப்பார்” என்று அடிக்கடி யாராவது சொல்லிய வண்ணம் இருந்தனர். தொற்று உச்சத்திலிருந்த சமயம். கடுமையான கட்டுப்பாடு. அதுவுமில்லாமல் அவள் தொற்று அதிகம் பாதித்த தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்தாள். 

அவள் தெருவே முழுக்க அடைக்கப்பட்டிருந்தது. அவையனைத்தும் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த நாக்கு மட்டும் மண்டைக்குள் இருப்பதை எப்போதுமே உணருவதில்லை. அது அதன் பாட்டுக்குப் பேசிக்கொண்டேதான் இருக்கும்.

ஸ்டாண்டில் இருந்த ஃபோனை எடுத்த ரவி, “காயத்ரி, இன்னும் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவோம். என் ஃபிரண்ட் கிட்ட போன் இருக்கும். அவன் லைவா வருவான். எனக்கு வேலை இருக்கு. நான் போறேன்” என்று சொல்லிவிட்டுக் கலங்கிய கண்களுடன் ரவி தன் போனை நண்பனிடம் கொடுத்துவிட்டு வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டான். சவத்தை வெளியே எடுத்துச் சென்று குளிப்பாட்டி மற்ற சடங்குகளை ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தனர்.

ரவியின் நண்பன் அனைத்தையும் அவனால் முடிந்த அளவிற்கு துல்லியமாகக் காண்பித்துக்கொண்டிருந்தான்.

“நம்ப கிட்ட எதாவது பேசறானா பாரு, கடங்காரன். எல்லாத்தயும் அவகிட்டயே சொல்றான்” என்று யாரோ பேசியது அவள் காதில் விழுந்தது. எல்லாம் முடிந்து பிணத்தைப் பாடையில் ஏற்றும் போது காயத்ரி, “கணேஷ் வரீங்களா…”

அவன் மைக்கை ஒரு கையாள் பிடித்துக்கொண்டு “ஃகிளையண்ட் கால், ஃபை மினிட்ஸ்” என்றான். அதற்குள் கிளாஸ் முடிந்து அவள் மகள் வந்து அவள் அருகில் உட்கார்ந்துகொண்டாள். தன் அம்மாவின் கைகளை ஆதரவாக பிடித்துக்கொண்டாள். 

சிறிது நேரத்தில் கணேஷ் அவள் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். சவ ஊர்வலம் தொடங்கியது. சிறிது ஆடியபடியும் அவ்வப்போது தெளிவில்லாமலும் நடப்பதை காயத்ரி பிரம்மை பிடித்ததுபோல் பார்த்துக்கொண்டிருந்தாள். ரவி முன்னால் போய்க்கொண்டிருந்தான். யாரோ பூக்களை இறைத்துக்கொண்டிருந்தனர். 

மொத்தமே பத்துபேர் கூட இல்லை. ஒரு வண்டியில் வைத்து வண்டியை மெல்ல நகர்த்திக்கொண்டிருந்தனர். காயத்ரிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டெனத் திரையில் இருந்த காட்சி மறைந்து இருள் சூழ்ந்தது. காயத்ரி பதட்டமாகி தன் செல்போனை எடுத்து ரவியின் என்னைத் தொடர்புகொள்ள முயற்சித்தாள். அது அணைக்கப்பட்டிருப்பதாக்கத் தெரிவித்தது. தொடர்பில் மற்றவர்கள் மெல்ல விலகினர். காயத்ரி பெருங்குரலெடுத்து அழுதாள். பக்கத்து வீட்டிலிருந்து ஃபோன் செய்து விசாரித்து விவரங்களை தெரிந்து கொண்டு அதை வாட்ச்சாப்பில் பகிர்ந்துகொண்டனர்.

காயத்ரி அழுது ஓய்ந்திருந்தாள். மூன்று மணி நேரத்திற்கு பிறகு ரவி அழைத்தான்.

“இப்ப எதுக்கு சும்மா சும்மா ஃபோன் பண்ணி டிராமா பண்ற?” என்று கத்தினான் ரவி.

அவனின் திடீர் கோபத்தைக் கண்டு அதிர்ந்தாள் காயத்ரி. அதிர்ச்சியில் அவளுக்கு வார்த்தைகளே எழவில்லை. அவன் தொடர்ந்து கத்தினான்.

“இங்க பாரு, எங்கப்பா உன்ன வளத்தாரு, படிக்க வெச்சாரு, எல்லாம் செஞ்சாரு. அத்தோட முடிஞ்சது உன் சங்காத்தம். இப்ப எப்படி தூரமா இருக்கியோ அப்படியே இருந்துக்கோ. அதான் எல்லாருக்கும் நல்லது.” 

அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் பின்னால் ஒரு குரல் காயத்ரிக்குக் கேட்டது, “தம்பி, வக்கீல் கூப்பிடறாரு” என்று அந்தக் குரல் சொன்னதும், “சும்மா என்ன டிஸ்டர்ப் பண்ணாத” ஃபோனை அவன் துண்டித்தான்.

“ம்...” என்று சொல்லிவிட்டு ஃபோனை அணைத்தாள். சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். பிறகு தன் கணவனிடமும் மகளிடமும், “போயி தலைக்கு குளிச்சிட்டு வந்துடுங்க, நானும் வீட்ட கழுவித் தள்ளிட்டு குளிச்சிட்டு வரேன்”. என்று சொல்லிவிட்டு மெல்ல எழுந்து உள்ளே சென்றாள் காயத்ரி.


விவாதங்கள் (23)