சிறுகதை

வபாலன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மனிதரின் முகத்தைப் பார்த்தபோது, எனது கண்கள் தாமாகவே திடுமென இறுக மூடிக்கொண்டன. ஏதோவொரு கிரேக்கப் புராணக் கதையில் வரும் உருவமொன்றுதான் என் ஞாபகத்தில் மின்னலாயிற்று. நான் அச்சத்துடனோ அல்லது தயக்கத்துடனோ கண்களைத் திறந்தபோது, தவபாலன் முன்போலவே தனது தலையையும் முகத்தையும் மறைத்திருந்தார். அவரது விழிகள் மட்டும் தணல் போலத் தகித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்தப் பூங்காவின் மேற்குப் பகுதியிலிருந்த இடிந்த கோபுரத்திலிருந்து மூன்று தடவைகள் மணியொலித்தது.

எனக்கு இந்த நகரம் முற்றிலும் புதிது. பிரான்ஸின் எல்லை நாடான இந்த நாட்டுக்கு நான் பல தடவைகள் வந்திருக்கிறேன் என்றாலும், இன்று அதிகாலையில்தான் முதற்தடவையாக இந்தப் பழைமை வாய்ந்த நகரத்துக்கு வந்தேன். நெடுந்தீவில் பிறந்து, தன்னுடைய எழுபத்தைந்தாவது வயதில் இங்கே வந்து, எண்பத்தாறாவது வயதில் காலமாகிவிட்ட, பெரியப்பாவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கிறேன்.

பெரியப்பாவின் சாவு, நிறைவான சாவு. அவருக்கு ஆறு பிள்ளைகள். எல்லோருமே இந்த நாட்டில்தான் வாழ்கிறார்கள். பதினேழு பேரக் குழந்தைகளும், ஆறேழு பூட்டக் குழந்தைகளும் தீப்பந்தம் பிடித்துச் சூழ நிற்க, ‘ஒருமடமாது’ பாடல் முழங்க, கிரியை செய்வதற்காக இலண்டனிலிருந்து ஸ்பெசல் குருக்கள் வந்து, சகல மரியாதைகளுடனும்தான் பெரியப்பா எரிக்கும் மின் இயந்திரத்துக்குள் அனுப்பப்பட்டார். மொட்டை போட்டிருந்த பெரியப்பாவின் நான்கு ஆண்மக்களும் மண்டபத்தின் நான்கு வாசல்களிலும் ஆளுக்கொருவராக நின்றுகொண்டு, வந்தவர்களுக்குக் கை கொடுத்து வரவேற்பதாகவும், உடனேயே கைகளைத் திரவத்தால் சுத்திகரிப்பதாகவுமிருந்தார்கள்

இந்தக் கொரோனா காலத்தில் அல்லாமல் வேறொரு காலத்தில் பெரியப்பா இறந்திருந்தால், இதைவிடப் பத்து மடங்கு ஆரவாரமாக இந்தச் சடங்கைப் பிள்ளைகள் நடத்தியிருப்பார்கள். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் கூட முந்நூறுக்கும் குறையாத சனங்கள் மயானத்துக்கு வந்திருந்தார்கள். அந்த நகரத்தில் தமிழ்ச் சனங்கள் பத்தாயிரத்துக்கும் அதிகமாகவே இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். பிற்பகல் இரண்டு மணியளவில் சடங்குகள் முடிந்ததும், நெருங்கியவர்களிடம் சொல்லிக்கொண்டு நான் புறப்பட்டேன். அன்றிரவு எனக்குப் பாரிஸ் திரும்புவதற்கான இரயில் இருந்தது. நடுவிலிருக்கும் நேரத்தை ‘அலக்ஸாண்ட்ரா பூங்கா’வில் செலவிட நான் தீர்மானித்திருந்தேன். அந்தப் பூங்கா இரயில் நிலையத்திலிருந்து, பத்து நிமிட நடை தூரத்திலேயேயிருந்தது.

நான் மயானத்திலிருந்து புறப்பட்டபோது, எனது மைத்துனர் முறையானவர் ஏற்பாடு செய்துவிட்ட இளைஞனொருவன் என்னைத் தனது வண்டியில் அழைத்துச் சென்றான். அவன் என்னிடம், “எத்தனை மணிக்கு இரயில்?” எனக் கேட்டபோது, “அதற்கு நிறைய நேரமிருக்கிறது, நீங்கள் என்னை அலக்ஸாண்ட்ரா பூங்காவில் இறக்கிவிட்டால் போதுமானது” என்றேன். அந்த இளைஞனோ, அப்படியொரு பூங்காவே இந்த நகரத்தில் கிடையாது என்று சொல்லிவிட்டான். நான் எனது அலைபேசியில் தேடி, பூங்காவின் படங்களை இளைஞனிடம் காண்பித்தேன்.

“ஓ! அம்மணப் பூங்காவா!” என்று சொல்லிவிட்டு, அவன் வண்டியின் வேகத்தை அதிகரித்தான். இங்குள்ள தமிழர்கள் அந்தப் பூங்காவை ‘அம்மணப் பூங்கா’ என்றுதான் அழைப்பார்களாம். பதினைந்து நிமிடங்களுக்குள் பூங்காவின் முன்னால் என்னை அந்த இளைஞன் இறக்கிவிட்டான். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, எனது பையைத் தூக்கிக்கொண்டு பூங்காவை நோக்கிச் சென்றேன். அந்தப் பைக்குள் எனது புகைப்படக் கருவியும், சிறிய ஸ்டாண்டும், லென்ஸுகளுமிருந்தன. இந்தப் பூங்காவைப் பார்க்க வேண்டுமென்பது என்னுடைய பலநாள் ஆசையாகயிருந்தது. பெரியப்பாவால் அது இப்போது நிறைவேறிற்று.

சிலநூறு வருடங்களுக்கு முன்பு, இந்த நகரமும் சுற்றியுள்ள கிராமங்களும் சேர்ந்து தனி நாடாகயிருந்தது. அய்ரோப்பாவின் மிகப் பழமையான நாடுகளில் இதுவுமொன்று. பதினேழாம் நூற்றாண்டில் ராணி அலக்ஸாண்ட்ராவால் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. அந்த ராணி சிற்பக்கலையில் தீராக் காதலுடையவர். ராணியே ஒரு சிற்பிதான். இந்தப் பூங்காவில் அவர் முப்பது சிலைகளை அமைத்திருந்தார். இரண்டு உலகப் போர்களுக்குப் பின்பு பன்னிரண்டு முழுமையான சிலைகளும், பதினைந்து சிதைந்துபோன சிலைகளும் எஞ்சியுள்ளன. மூன்று சிலைகள் விமானக் குண்டுவீச்சில் முற்றாக அழிந்துவிட்டன. பூங்காவின் மேற்கு மூலையிலுள்ள மணிக்கூண்டுக் கோபுரமும் இரண்டாம் உலகப் போரில் குண்டுவீச்சுக்கு உள்ளாகிப் பாதி சிதைந்துபோயிருக்கிறது. இந்தப் பூங்கா கலைக் கோயிலாக மட்டுமல்லாமல், போர் நினைவுச் சின்னமாகவும் பராமரிக்கப்படுகிறது.

பூங்காவின் நுழைவாசலில் யாருமில்லை. அறிவிப்புப் பலகையில் பூங்கா மூடப்படும் நேரம் மாலை ஆறுமணி என்றிருந்தது. எனக்குப் போதிய நேரமிருக்கிறது. செப்ரம்பர் மாதம் என்பதால் சூரிய வெளிச்சம் ஆறு மணிவரையிருக்கும்.

உண்மையில் அந்தப் பூங்கா நான் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிதாகயிருந்தது. ஆனால், ஆள் நடமாட்டம் சற்றுக் குறைவாகயிருந்தது. சிலைகளிருந்த பகுதி பூங்காவின் மையத்திலிருந்தது. நுழைவாயிலில் இருந்து பார்த்தபோதே, சிலைகள் பூஞ்செடிகளுக்கு மேலால் தெரிந்தன. நறுமணம் ஒவ்வொரு புல்லிலும் நுரைத்துக்கொண்டிருந்தது. முகக் கவசத்தைத் தாடைக்கு இறக்கிவிட்டு, நறுமணத்தை நெஞ்சுக்குள் நிறைத்துக்கொண்டேன்.

அந்தச் சிலைகளுக்கு நடுவில் நான் நின்றபோது, ஏதோ புராண காலத்தில் நிற்பதுபோலவே உணர்ந்தேன். ஆறடி உயரமுள்ள பீடத்திலிருந்த ஒவ்வொரு சிலையும், பத்தடி உயரத்துக்குக் குறையாமலிருந்தது. ஆண், பெண், குழந்தைகள் எனக் கற்களில் சித்திரிக்கப்பட்டிருந்தார்கள். எல்லாச் சிலைகளும் நிர்வாணத்தின் பல்வேறு நிலைகளில் வடிவமைக்கப்பட்டிருந்தன. மனித உடலின் அழகுக்கு ஒப்பாக வேறோர் உயிரினத்தின் அழகு இருக்கவே முடியாது என்பதை அந்தச் சிலைகள் சொல்லின. ஒவ்வொரு சிலையும் என்னையே பார்ப்பது போலவும், அழைப்பது போலவுமே உணர்ந்தேன்.

ஒரு பெண் குந்தியிருந்தவாறே குழந்தையைப் பெற்றெடுப்பதாக ஓர் உயரச் சிலையிருந்தது. அந்தச் சிலைக்கு வலது பக்கமாக, பத்துப் பதினைந்தடிகள் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லாலான நீண்ட இருக்கையில், உயிருடன் ஒருவர் உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். அந்த உருவம் முழுவதுமாக ஆடைகளால் மூடப்பட்டிருந்தது. தலையிலிருந்த தொப்பி கவிழ்ந்திருந்து நெற்றியையும் மறைத்தது. முகத்திலிருந்த கறுப்புநிறத் துணி கண்கள் வரை ஏறியிருந்தது. அந்தக் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் எனது தாடையில் கிடந்த முகக் கவசத்தை மூக்குக்கு மேலாக ஏற்றிவிட்டுக்கொண்டு, ஒவ்வொரு சிலையையும் படம் பிடிப்பதில் மூழ்கிவிட்டேன். நடுவில் சில பார்வையாளர்கள் வருவதாகவும், சிலைகளைப் பார்த்துப் பரவசமாகிக் கூச்சலிடுவதாகவும், படம் பிடித்துக்கொள்வதாகவும், போவதாகவுமிருந்தார்கள். ஆனால், கல்லிருக்கையில் அமர்ந்திருந்தவர் மட்டும் அப்படியே சிலைகளோடு சிலைபோல அசையாமலிருந்தார். அந்தக் கல்லிருக்கையை நான் கடந்தபோது, அதில் அமர்ந்திருந்தவரை ஓரக்கண்ணால் பார்த்து, “குட் ஈவினிங்” என்றேன். பதிலுக்கு அந்த மனிதர், “நான்தான் தவபாலன்” என்றார்.

நான் அந்த மனிதரை நோக்கித் திரும்பி, “தவபாலனா? எனக்கு யாரென்று தெரியவில்லையே” என்றேன். அந்த மனிதர் தனது தலையிலிருந்த தொப்பியை இடது கையால் மெதுவாக எடுத்துத் தனது மடியில் வைத்துக்கொண்டார். அவரது கை மிக மெதுவாகவே தடுமாற்றத்துடன் இயங்கியது. பின்பு அதே கையால் மெதுவாக முகத்திலிருந்த துணியையும் விலக்கினார். எனது கண்கள் சடுதியில் மூடிக்கொண்டன. நெஞ்சுக்குள்ளிருந்த நறுமணம் தீய்ந்து புகையாக என் வாயால் வெளியேற, ‘ஈங்’ என்ற ஏங்கல் என் தொண்டைக் குழியில் எழுந்து வீழ்ந்தது.

அந்த மனிதரின் தலையில் முடியே இல்லை. உச்சந்தலையில் தோல்கள் சுருண்டு சிறிய கொம்புகள் போலத் தோற்றமளித்தன. காதுகள் இருக்கவேண்டிய இடத்தில் தசைக்கோளங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. நெற்றியில் கறுப்புத் தோலின் நடுவே சிலந்தி வலை போல வெள்ளை படர்ந்திருந்தது. அந்த மனிதரின் முகத்தில் மூக்கே இல்லை. துவாரங்கள் மட்டுமே இரண்டு புளியங்கொட்டைகள் போலிருந்தன. கன்னச் சதைகள் பாசி போல எலும்பில் ஒட்டிக் கிடந்தன. வாய்க்குக் கீழே அவரின் முகம் முடிந்துவிடுகிறது. தாடையே இல்லை.

“என்னைத் தெரியாதா?” என்று அந்த மனிதர் மீண்டும் கேட்டார்.

“இல்லை, நான் பிரான்ஸிலிருந்து வந்திருக்கிறேன்.”

“அப்படியா! நல்லது. நான் இந்தப் பூங்காவுக்கு ஒவ்வொரு நாளும் வருவேன். இங்கிருக்கும் ஒவ்வொரு சிலைக்கும் என்னைத் தெரியும். இந்தப் பூங்காவைப் பற்றி நீங்கள் அறியாத விஷயமொன்றை நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார் தவபாலன்.

அந்த நீண்ட கல்லிருக்கையின் நடுவில் அமர்ந்திருந்த தவபாலன், மெதுவாக வலது மூலைக்கு நகர்ந்தார். நான் போய் இடது மூலையில் உட்கார்ந்துகொண்டேன்.

2

நீங்கள் ஒரு சிலையைச் சுற்றிப் படம் பிடிக்கும் நேரத்திற்குள் என்னைப் பற்றிச் சொல்லிவிடலாம். இந்த நகரத்தில் என்னைத் தெரியாதவர்களே இல்லை. தமிழர்களைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை. வெள்ளையர்களுக்கும் என்னைத் தெரியும்.

1984ஆம் ஆண்டு எந்த விசயத்தால் முக்கியத்துவம் பெறுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த வருடத்தின் பெயரால் ஒரு புத்தகம் இருப்பது மட்டுமே எனக்குத் தெரியும். என்னுடைய நண்பன் கபிலன் அந்தப் புத்தகத்தை வைத்திருந்தான். அவன் நீண்டகாலமாக வெலிகடச் சிறையிலிருக்கிறான்.

அந்த வருடம்தான் நான் பிறந்தேன். அடுத்த வருடமே கொழும்புக்கு மிளகாய் மூடைகள் கொண்டு சென்ற அப்பா காணாமல் போய்விட்டார். கைக்குழந்தையான என்னையும் தூக்கிக்கொண்டு, அம்மா இராணுவ முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அப்பாவைத் தேடியலைந்தார். அப்பா என்னவானார் என யாருக்கும் தெரியவில்லை. அப்பா திரும்பி வரவேயில்லை.

எங்களுக்கு வட்டக்கச்சியில் பெரிய விவசாய நிலமிருந்தது. அம்மாவே விவசாயத்தைக் கவனிக்கத் தொடங்கினார். சாரம் கட்டி, சேர்ட் போட்டிருக்கும் பெண்ணை நீங்கள் கண்டிருப்பீர்களோ தெரியாது. எனது அம்மாவுக்கு உழவு இயந்திரம் ஓட்டக்கூடத் தெரியும். கூலியாட்களை வைத்து விவசாய வேலைகளை அம்மா கவனித்தாலும், அவரும் சாரத்தைக் கட்டிக்கொண்டு நிலத்தில் இறங்கி எல்லா வேலைகளையும் பார்ப்பார். அவரது கையாலேயே கூலியாட்களுக்கு உணவும் தேநீரும் தயாரித்துக் கொடுப்பார். ஆனால், அவர் ஒருபோதும் என்னைத் தோட்டத்திற்குள் இறங்க விட்டதேயில்லை. “படிப்பது மட்டுமே உன்னுடைய வேலை” என்று கண்டிப்பாகச் சொல்லிவிடுவார். நானும் அம்மா சொல்வதைக் கேட்டு நடக்கக் கூடிய பிள்ளைதான். அப்படிச் சொல்வதைக் காட்டிலும், எனக்குச் சுயமாக ஒன்றுமே செய்யத் தெரியாது என்று சொல்வதே சரியாகயிருக்கும். அன்றன்றைக்கு என்ன உடையணிய வேண்டும் என்பதைக் கூட நான் அம்மாவிடம்தான் கேட்பேன். பள்ளிக்கூடத்தைத் தவிர வேறெங்குமே அம்மா இல்லாமல் நான் தனியாகச் சென்றதேயில்லை. “சுமதி, நீ தவபாலனை சுயபுத்தியில்லாத பிள்ளையாக வளர்த்திருக்கிறாய்” என்று மாமா கூட, அம்மாவிடம் அடிக்கடி சொல்வார்.

பஞ்சாட்சரம் மாமா, அம்மாவின் மூத்த அண்ணன். கொழும்பில் ஆட்டுப்பட்டித் தெருவில் கிட்டங்கி வைத்து மொத்த வியாபாரம் செய்துகொண்டிருந்தார். எங்களது நிலத்தில் விளையும் பொருட்களை அவர்தான் வாங்கிக்கொள்வார். அவரது குடும்பம் கொழும்பிலேயே இருந்தது. எனக்குப் பதினாறு வயதான போது, என்னை அதற்கு மேலும் வன்னியில் வைத்திருக்க அம்மா விரும்பவில்லை. மாமாவின் பொறுப்பில் என்னைக் கொழும்புக்கு அனுப்பிவிட்டார். அதற்குப் பின்பு, இன்றைக்குவரை நான் வட்டக்கச்சிக்குத் திரும்பவேயில்லை. மாமாவின் வீட்டிலிருந்து படித்துத்தான், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன். அங்கிருந்துதான் பல்கலைக்கழகத்துக்குப் போய்வந்தேன்.

யுத்தம் ஓரளவு தணிந்திருந்த காலங்களில், மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அம்மா கொழும்புக்கு வந்து என்னைப் பார்த்துப் போவார். யுத்தம் உக்கிரமாக நடந்த காலங்களில் கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது அம்மா எப்படியும் கொழும்புக்கு வந்துவிடுவார். ஆனால், இரண்டே நாட்களில் திரும்பவும் வன்னிக்குப் போய்விடுவார். “அங்கே தோட்ட வேலைகள் நடுவில் நிற்கின்றன தவம்” எனச் சொல்லி, என்னை முத்தமிட்டு விடைபெறுவார்.

பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டில் நான் படித்துக்கொண்டிருந்த போதுதான், என்னுடன் படித்துக்கொண்டிருந்த கபிலனை புலனாய்வுத்துறையினர் கைது செய்தார்கள். கொழும்பில் கார்க் குண்டுவெடிப்பு நடத்தி, விமானப் படைத் தளபதியைக் கொலை செய்தவர்களது குழுவில் கபிலனும் இருக்கிறான் எனக் காவல்துறை சொன்னது. இதை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை. கபிலனிடம் எனது தொலைபேசி எண்ணும் முகவரியும் இருந்ததாலேயே நானும் கைது செய்யப்பட்டேன். அவற்றை 1984 என்ற புத்தகத்தின் முதற் பக்கத்தில் அவன் எழுதி வைத்திருந்தான்.

என்னை விசாரணை செய்தபோது, அந்தப் புத்தகம் புலனாய்வு அதிகாரியின் மேசையிலிருந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றித்தான் அதிகாரி நிறையக் கேட்டார். எனக்குத்தான் அதைப் பற்றி எதுவும் தெரியாதே. என்னைக் கொஞ்ச நேரம் விசாரித்தவுடனேயே, அந்த அதிகாரிக்கு நானொரு ‘சோத்து மாடு’ என்பது புரிந்திருக்கும். “குண்டு வைக்கும் வேலையையெல்லாம், உன்னை நம்பி யாருமே கொடுக்கமாட்டார்கள்” என்று அந்த அதிகாரி சொல்லிவிட்டு, என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். இருபத்தியிரண்டாவது வயதில்தான் நான் முதன் முதலாக, என் தேகத்தில் ஓர் அடியைப் பெற்றுக்கொள்கிறேன். அந்த அதிகாரியின் கை மரக்கட்டை மாதிரியானது. கொஞ்ச நேரத்திற்கு எனது கண்கள் இருண்டேயிருந்தன.

என்னிடமிருந்து எந்தத் துப்பும் தேறப் போவதில்லை என்பது அந்த அதிகாரிக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அவர் தேவையில்லாமல் தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் வீணாக்கி என்னைக் கைது செய்திருக்கிறார். தன்னுடைய தவறுக்கு, அந்த அதிகாரி என்மீதுதான் கோபப்பட்டார். 1984 என்ற அந்தப் புத்தகத்தை என் வாய்க்குள் திணித்து, அந்தப் புத்தகத்தை முழுவதுமாகச் சாப்பிட வேண்டுமென எனக்குக் கட்டளையிட்டார். எனக்குப் பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர் வைக்கப்பட்டது. ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துத் தண்ணீரில் நனைத்து, முழுப் புத்தகத்தையும் நான் சாப்பிட்டு முடித்தேன். அருமந்த நேரத்தைச் செலவு செய்து பிடித்துவந்த என்னை வெளியே விட்டுவிட அந்த அதிகாரிக்கு மனமில்லை. என்னைப் பார்த்துத் தலையை இடமும் வலமுமாக அசைத்து, கால்களால் நிலத்தில் தாளமிட்டவாறே, “எதிர்காலத்தில் நீ குண்டு வைக்கலாம்” என்றார். ஒரு பத்து வருடங்களுக்காவது என்னைச் சிறையில் வைத்துவிட அவர் திட்டம் போட்டார்.

பஞ்சாட்சரம் மாமா சும்மாயிருக்கவில்லை. தன்னுடைய எல்லா வியாபாரத் தொடர்புகளையும் உபயோகித்தும் பணத்தை வாரியிறைத்தும், புலனாய்வுத்துறையினரிடமிருந்து என்னை ஒருவாறு மீட்டுவிட்டார். அதற்குப் பின்பு ஒரு நிமிடம் கூட என்னைத் தன்னுடைய வீட்டில் வைத்திருக்க மாமா தயாராகயில்லை. யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருந்ததால், அம்மாவோ கொழும்புக்கு வர முடியாமல் வன்னிக்குள் அடைபட்டிருந்தார். மாமா தொலைபேசியில் அம்மாவிடம் பேசியபோது, அம்மா எங்களது விவசாய நிலத்தை, மாமாவின் பெயரில் எழுதி வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். மாமா இருபத்தைந்து இலட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, என்னை இந்த நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.

பஞ்சாட்சரம் மாமியின் தம்பி முறையான, மாயவரின் தொலைபேசி எண்ணை நான் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். அவரைத் தொடர்புகொண்டு, இந்த நகரத்துக்கு வந்து சேர்ந்தேன். மாயவரின் வீட்டில் எனக்கோர் அறை கொடுத்தார்கள். வாடகை, அது இதுவென்ற பேச்செல்லாம் இருக்கவில்லை. என்னுடைய அம்மா மீது மாயவருக்கு நல்ல மதிப்பிருந்தது. மாயவரின் மனைவியும், அவர்களது பதினேழு வயதுப் பெண்ணான நதிராவும் என்மீது மிகவும் கரிசனையாக இருந்தார்கள்.

இந்த நாட்டுக்கு வந்தும் நான் மாறவில்லை. ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும், அம்மாவுக்குத் தொலைபேசி செய்து ஆலோசனை கேட்பேன். ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் பேசுவேன். “தவம், உனக்கு இருபத்துமூன்று வயதாகிறது, நீ சுயமாக முடிவு எடுத்துப் பழக வேண்டும் அப்பன்” என்று அம்மா சொல்லாத நாளில்லை.

இங்கே என்னுடைய அகதி விண்ணப்பத்தைச் சீக்கிரமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ‘இலங்கையில் இப்போதும் யுத்தம் நடக்கிறதா என்ன’ என்ற தோரணையிலேயே விசாரணை அதிகாரி கேள்விகளைக் கேட்டார். “இராணுவம் உங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள்?” என விசாரணை அதிகாரி கேட்டபோது, “1984 என்ற புத்தகத்தை என்னை முழுவதுமாகச் சாப்பிட வைத்தார்கள்” என்றேன். “அந்தப் புத்தகம் எத்தனை பக்கங்கள் இருக்கும்?” என அதிகாரி கேட்டபோது, “ஆயிரம் பக்கங்கள் இருக்கும்” என்றேன். அந்த அதிகாரி என்னைப் பார்த்து, “எனக்கு மிகவும் பிடித்தமானது அந்தப் புத்தகம். ஆனால், அந்தப் புத்தகம் 328 பக்கங்கள்தானே” என்று சொல்லிவிட்டு என் கண்களையே பார்த்தார். “ஒவ்வொரு நாட்டைப் பொறுத்துப் பக்கங்கள் கூடிக் குறையலாம்” என்று பதிலளித்தேன். அந்தப் பதில் அதிகாரிக்கு ஏற்புடையது என்றுதான் நினைக்கிறேன். அவர் என்னை அகதியாக அங்கீகரித்துவிட்டார்.

மாயவரின் உதவியால், ஒரு வாரப் பத்திரிகை நிறுவனத்தின் இயந்திரப் பகுதியில் எனக்கு வேலை கிடைத்தது. அது இரவு வேலை என்பதால், பகலில் மொழி படிக்கும் வகுப்புக்குச் சென்றேன். சீக்கிரத்திலேயே மொழி எனக்குப் பிடிபட்டது. ஆங்கிலத்தைச் சற்றுப் பிழையாகப் பேசினால், அதுதான் இந்த மொழி. அம்மாவுக்கு நான் ஒருபோதுமே பணம் அனுப்பியதில்லை. கேட்ட போதெல்லாம், “எனக்குப் பணம் காசு வேண்டாம் தவம். நீ பத்திரமாக இருந்தால் போதும். மாயவர் குடும்பத்தை அனுசரித்து நட. அவர்களுடனேயே இரு” என்றார் அம்மா. அவர் சொன்னபடியே இரண்டு வருடங்கள் இருந்தேன். எனக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற ஆசை அம்மாவைப் பிடித்துக்கொண்டது. அதைப் பற்றி என்னிடம் சாடைமாடையாகக் கதைத்தார். மாயவரின் பெண்ணான நதிராவும் இருபது வயதை நெருங்கியிருந்தாள். அவளையே எனக்குப் பேசி முடிக்க வேண்டுமென்பது அம்மாவின் விருப்பம்.

2009ஆம் ஆண்டு தொடக்கத்தில் வன்னியில் சண்டை கடுமையாகியபோது, அம்மாவுடனான என்னுடைய தொடர்புகள் அறுந்துபோயின. தொலைபேசியில் அம்மாவைத் தொடர்புகொள்ள முடியாமலிருந்தது. ஒவ்வொரு நாளும் பஞ்சாட்சரம் மாமாவைத் தொலைபேசியில் அழைத்து, அம்மாவைப் பற்றி விசாரிப்பேன். அம்மா இப்போது இராமநாதபுரத்தில் இருக்கிறார், இப்போது விசுவமடுவில் இருக்கிறார் என அவ்வப்போது மாமாவிடமிருந்து தகவல்கள் கிடைத்தன. ஆனால், அம்மாவுடன் பேச முடியவில்லை. கடைசியில் ஏப்ரல் மாதத்தில் மாயவரின் வீட்டுக்கு மாமா தொலைபேசியில் அழைத்தார். மாயவர் குழறி அழுதவாறே என்னிடம் தகவல் சொன்னார்.

அம்மா, உழவு இயந்திரத்தில் வீட்டுப் பொருட்களையும், சில அயலவர்களையும் ஏற்றிக்கொண்டு, சில மாதங்களாகத் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்தவாறே இருந்திருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, வீதியில் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது விமானக் குண்டுவீச்சு நடந்திருக்கிறது. உழவு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அம்மா, சாரதி இருக்கையில் இருந்தவாறே ஒரே விநாடியில் முழுவதுமாக எரிந்து போயிருக்கிறார்.

நதிரா என்னருகே வந்து, எனது தோளை அணைத்துக் கொண்டாள். நீங்கள் நம்புவீர்களோ தெரியாது. எனது கண்களிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட விழவில்லை. ‘அம்மா இனி இல்லை! இனி நான்தான் சுயமாக முடிவுகளை எடுக்கவேண்டும்’ என்ற சிந்தனைதான் எனக்குத் திரும்பத் திரும்ப வந்து என் மண்டையை அடைத்துப்போட்டது. நான்கு நாட்கள் நான் எனது அறையிலிருந்து வெளியே வரவேயில்லை. மாயவர் குடும்பம் என்னைத் தேற்றுவதற்கு வழி தெரியாமல் தவித்தார்கள். பலர் மாயவர் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்துப் போனார்கள். நான் அறையைவிட்டு வெளியே வரவேயில்லை.

ஒரு வாரத்திற்குப் பிறகு வேலைக்குப் போனேன். பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான அண்ட்ரியாஸ் ஸ்வாட், இயந்திரப் பிரிவுக்கு வந்து என்னிடம் துக்கம் விசாரித்தார். ஆனால், அவருக்கும் இலங்கையில் ஒரு யுத்தம் நடந்துகொண்டிருப்பதே தெரியாமலிருந்தது. அதற்காக அவர் வருந்தத்தான் செய்தார் என்றாலும், எனக்குள் எழுந்த கோபத்தை என்னால் அடக்க முடியவில்லை. “உங்களது நாட்டில் நடப்பவை குறித்துச் சரியான செய்திகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை” என்றார் அண்ட்ரியாஸ் ஸ்வாட்.

மே மாதம் தொடங்கியபோது, வன்னியில் யுத்தம் உச்சமடைந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை ஒருவழியாக ஒப்புக் கொண்டது. அய்ரோப்பிய ஊடகங்களும் போனால் போகிறதென்று, இலங்கைக்காகச் சில விநாடிகளைச் செலவழித்தார்கள். நான் வேலைக்குப் போவதை நிறுத்தியிருந்தேன்.

இந்த நகரத்தில், ஒவ்வொரு நாட்களும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அய்ரோப்பிய யூனியனும், அய்.நா.சபையும் முன்வந்து இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துப் பல போராட்டங்கள் நடந்தன. மாயவர் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முக்கியமானவராகயிருந்தார். அவரது குடும்பத்துடன் ஒவ்வொரு நாளும் புறப்பட்டுச் சென்று, நானும் போராட்டங்களில் கலந்து கொள்வேன்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துக்கொண்டே வந்தது. ஏழாயிரம், எட்டாயிரம் என்ற எண்ணிக்கையில் தமிழ்ச் சனங்கள் தெருவில் இறங்கிய போது, இந்தச் சிறிய நகரம் சற்றுத் தடுமாறியது. இந்த நாட்டின் பல்வேறு நகரங்களிலும் தமிழர்கள் தெருவில் இறங்கினார்கள். எங்களுடைய குரல் கேட்கப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால், எங்களது கோரிக்கையை இந்த நாடோ, இந்த நகரத்தின் முதல்வரோ காது கொடுத்துக் கேட்பதாகயில்லை. மாறாக அவர்கள் போராட்டக்காரர்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள். போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுத்தார்கள். வன்னியிலோ சாவு அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

இதற்குள் போராட்டம் செய்தவர்களுக்குள்ளும் சில பிளவுகள் ஏற்பட்டன. போராட்டத்தில் அந்தக் கொடியை ஏற்ற வேண்டும், கூடாது, இந்தத் தலைவரின் படம் வைக்க வேண்டும், வேண்டாம் என்றெல்லாம் பிரச்சினைகள் வலுத்தன. போராட்டத்துக்கு வருபவர்களின் தொகையும் மெல்ல மெல்லக் குறைந்துகொண்டே வந்தது. ஆனால், நானும் மாயவர் குடும்பமும் தொடர்ந்தும் போராட்டத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம்.

எங்களுக்குத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட போது, நாங்கள் இந்தப் பூங்காவில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம். பூங்காவில் நாங்கள் கூடுவதை அரசாங்கத்தால் உடனடியாகத் தடுக்க முடியவில்லை. ஆனால், பூங்கா முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இரண்டு போராட்டக்காரர்களுக்கு நடுவே ஒரு பொலிஸ்காரன் நின்றான். கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீர் பீச்சிக் கூட்டத்தைக் கலைக்கும் வண்டிகள் எல்லாம் பூங்காவுக்குள் கொண்டு வரப்பட்டன. வரும் சனிக்கிழமை தொடக்கம் ஒரு மாதத்திற்கு பூங்கா மூடப்படும் என்று நகரசபை அறிவித்தது.

இப்போது நான் செய்யப் போவதைக் குறித்து ஆலோசனை கேட்க அம்மா இல்லை. என் வாழ்க்கையில் நானாகச் சிந்தித்து, சுயமாக முதற்தடவையாக ஒரு முடிவடுத்தேன். அன்று மே மாதம் பதினான்காம் தேதி வியாழக்கிழமை. காலை பத்தரை மணியளவில் பூங்காவில் முப்பது போராட்டக்காரர்கள் கூடியிருந்தோம். மதியத்திற்கு மேல்தான் நிறையப் பேர் வருவார்கள். மாலை வேளையில் எப்படியும் ஆயிரத்துக்கும் குறையாத மக்களிருப்பார்கள். இந்தச் சிலைகளின் கீழே கூடிநின்று இருவர் மூவராகப் பேசிக்கொண்டிருந்தார்கள். மாயவர் குடும்பம், இங்கே குழந்தை பெறும் பெண்ணின் சிலையருகே நின்றுகொண்டிருந்தது. நான், இதோ நீங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தேன். ஒவ்வொரு சிலையைச் சுற்றியும் பத்துப் பொலிஸ்காரர்கள் நின்றிருந்தார்கள்.

சரியாகப் பதினொரு மணிக்கு, நான் அதோ, அந்த மையத்தில் போய் நின்றுகொண்டேன். எனது கையில் கறுப்புநிறத்தில் வெந்நீர் குடுவையிருந்தது. அந்தக் குடுவைக்குள் ஒரு லீட்டர் பெட்ரோலை நான் நிறைத்து வைத்திருந்தேன். கையில் லைட்டரைத் தயாராக மறைத்து வைத்துக்கொண்டே, குடுவையைத் திறந்து எனது தலையிலிருந்து இடுப்புவரை பெட்ரோலை வேகமாக விசிறிவிட்டு, எனது தலையில் தீ வைத்துக்கொண்டேன். அம்மாவை நினைத்துக் கண்களை மூடிக்கொண்டு அசையாமல் நின்றேன்.

சனங்கள் கூக்குரலிடுவதும், காவல்துறையினர் சத்தமெழுப்புவதும் காதில் கேட்டது. சில விநாடிகளிலேயே அந்தக் குரல்கள் தேய்ந்தன. அப்போது எனது உடல் வேதனைப்பட்டது எனச் சொல்ல முடியாது. உறைபனி நிலைக்குள் நான் போவதாகத்தான் உணர்ந்தேன். ஆனால், என்னையறியாமலேயே எனது கால்கள் ஓடத் தொடங்கின. என்மீது தண்ணீர் பாய்ச்சப்படுவதை என் கால்கள்தான் முதலில் உணர்ந்தன.

இரண்டு மாதங்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன். இந்த நகரத்திலிருக்கும் தமிழ் மக்களில் முக்கால்வாசிப் பேர்களாவது மருத்துவமனைக்கு வந்து என்னைப் பார்த்துச் சென்றார்கள். வெள்ளைக்காரர்கள் கைகளில் பூங்கொத்துகளோடு வந்து என்னைப் பார்த்தார்கள். மருத்துவமனை அறை எப்போதும் பூக்களால் நிரம்பியேயிருந்தது. நான் வேலை செய்த பத்திரிகை நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் அண்ட்ரியாஸ் ஸ்வாட் என்னை வந்து பார்த்தார். அந்த வாரம் வெளியான இதழை என்னிடம் காட்டினார். அட்டையில், நான் எரிந்துகொண்டிருக்கும் படம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உள்ளே நான்கு பக்கங்களில் ‘இலங்கை எரிகிறது’ என்ற தலைப்பில் விரிவாக எழுதப் பட்டிருந்தது. ஆசிரியர் அந்த இதழை எனது தலைமாட்டில் வைத்துவிட்டு, எனது கண்களையே பார்த்துக்கொண்டு நின்றார். “இப்போதுதான் எங்களுக்குச் சரியான செய்தி கிடைத்திருக்கிறது” என்று அண்ட்ரியாஸ் ஸ்வாட் சொன்னபோது, அவரது சதுர வடிவ முகம் கோணிக்கொண்டு, அவரது கன்ன மடிப்புகளுக்குள் நீர் வழிந்தது.

எனது உடம்பில் பெரும்பகுதி தீயால் கருகிவிட்டது. வலது கையில் எலும்பே எரிந்து, இந்தக் கை செயலற்றுப் போய்விட்டது. என்னை முதன் முதலாகக் கண்ணாடியில் பார்த்தபோது, அம்மாவைத்தான் நினைத்துக்கொண்டேன். அம்மாவும் இப்படித்தானே எரிந்திருப்பார்.

முதலில் சில வாரங்கள் சக்கர நாற்காலியில்தான் நடமாடினேன். ஒருநாள் மாயவர் என்னிடம் தயங்கித் தயங்கிப் பேச்சை ஆரம்பித்தார். சக்கர நாற்காலியோடு நடமாடுவதற்குத் தனது வீடு வசதியாக இருக்காது என்றும், நல்லதொரு இடத்தை எனக்குத் தேடித் தருவதாகவும் சொன்னார். அம்மா, மாயவர் குடும்பத்தை விட்டுப் போகக் கூடாது என எனக்குச் சொல்லியிருந்தார். ஆனால், கரிக்கட்டையாக மாறியிருக்கும் என்னை வைத்திருப்பது அவர்களுக்கும் துன்பம்தானே. மாயவரின் உதவியுடன் ஊனமுற்றவர்களுக்கான அரசாங்க விடுதியில் இடம் பிடித்துக்கொண்டேன். அதுவும் வசதியான இடம்தான். ஊனமுற்றவர்களுக்கான உதவிப் பணமும் மாதாமாதம் எனக்குக் கிடைக்கிறது.

சில மாதங்களிலேயே நதிராவுக்குக் கல்யாணம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். எனக்கு அழைப்புக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. மெல்ல மெல்ல எல்லோரும் என்னை மறந்துவிட்டார்கள். சனங்களுக்கு என்மேல் அன்போ, அனுதாபமோ இல்லையென்று சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் எப்போதுமே என்னையே கவனித்துக்கொண்டிருக்க முடியுமா என்ன! மருத்துவமனைக்கு வந்தார்கள், பூக்கள் கொடுத்தார்கள், போய்விட்டார்கள். அதுவே பெரிய விசயமில்லையா?

ஆனால், சிலர் வேறுவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன். நதிராவை எனக்குக் கட்டித் தரமாட்டேனென்று மாயவர் சொல்லிவிட்டதாலேயே நான் என்னைக் கொளுத்திக்கொண்டேன் எனச் சிலர் பேசினார்கள். கடன் தொல்லை, மனநிலை சரியில்லாதவன் என்றுகூடச் சிலர் பேசிக்கொள்வதாக அறிந்தேன். ஏதோவொரு அமைப்பு எனது மூளையைக் கழுவிக் கொளுத்திக்கொள்ள வைத்தது என்று சில இணையதளங்களில் எழுதினார்கள். என்னால் என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்! உடம்பு வலுவாக இருந்தால்கூட இவர்களோடு சண்டைக்குப் போக முடியும். நானோ கரிக்கட்டை.

அம்மா உயிரோடு இருக்கும்போது எனக்குக் கல்யாணம் செய்துவைக்க ஆசைப்பட்டார். எனக்கு இப்போது முப்பத்தாறு வயதாகிறது. அருகிலிருந்து பேசவாவது ஒருவர் வேண்டும்தானே. சிலநேரங்களில் ஊருக்குத் திரும்பிப் போய்விடலாமா என்றும் நினைப்பேன். அங்கே எனக்கென யாராவது இருப்பார்களல்லவா! ஆனால், நான் என்னைக் கொளுத்திக்கொண்ட செய்தி, அப்போது பத்திரிகைகளில் வந்திருந்ததால், இலங்கை அரசாங்கத்திடம் என்னைப் பற்றிய விபரங்கள் இருக்கும் என்கிறார் பஞ்சாட்சரம் மாமா. அதுதான் அச்சமாகயிருக்கிறது. என்னால் பேச முடிகிறதே தவிர, தாடை எலும்புகள் சிதைந்திருப்பதால் ஒரு துண்டு பாணுக்கு அதிகமாக மென்று சாப்பிட என்னால் முடியாது. ஆயிரம் பக்கப் புத்தகத்தை நான் எப்படிச் சாப்பிட முடியும்?

என்னுடைய முகத்தைப் பார்த்துப் பேசுவது எவருக்குமே சிரமமானது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள்கூட எனது முகத்தைப் பார்த்தவுடனேயே உங்களது கண்களை மூடிக்கொண்டீர்களல்லவா! ஒவ்வொரு நாளும் இந்தப் பூங்காவில் வந்து உட்கார்ந்துகொள்கிறேன். உங்களைப் போலவே எவ்வளவோ தூரங்களிலிருந்து, எத்தனையோ நாடுகளிலிருந்து விதவிதமான மக்கள் வந்து இந்தச் சிலைகளைப் பார்த்துச் செல்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அவர்களில் சிலர் என்னுடைய அம்மாவைப் போல இருக்கிறார்கள், சிலர் நதிராவைப் போல இருக்கிறார்கள், சிலர் கபிலனைப் போல இருக்கிறார்கள். என்னுடைய அதிர்ஷ்டம், இன்று பேசுவதற்கு நீங்கள் கிடைத்தீர்கள்.

3

வபாலன் அதிகமாகப் பேசிவிட்டதால், அவருக்கு மூச்சிரைத்தது. அவர் பேசும்போது கீழ் வாயை அசைக்காமலேயே பேச வேண்டுமாம். அதை அசைத்தால் பேச்சுக் குழம்பி ஒலிக்குமாம். தவபாலன் தனது காலடியில் வைத்திருந்த வெந்நீர் குடுவையை எடுத்து, முகத்தை மூடியிருந்த துணிக்குள் நுழைத்து, தலையை மெதுவாகப் பின்னே சாய்த்து நீண்ட நேரமாக மெது மெதுவாக வெந்நீர் குடித்தார். நான் அங்கிருந்த நிர்வாணச் சிலைகளின் மீது பார்வையை அலைய விட்டுக்கொண்டிருந்தேன்.

இந்த மனிதர், அன்று இங்கேயே எரிந்து சாம்பலாகியிருந்தால், தமிழ் மக்கள் இந்தப் பூங்காவை ‘அம்மணப் பூங்கா’ என அழைக்கும் பழக்கம் அப்போதே ஒழிந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

(காலம் - சனவரி 2021 இதழில் வெளியாகியது)


விவாதங்கள் (2)