அத்தியாயம் 1
மனதில் ஒன்றுமே இல்லை என்று தோன்றும் அடுத்த கணம், ஆற்றலுக்குப் புன்னகை மலரும். எவ்வளவு நேரம் மனதில் ஒன்றுமே இல்லாமல் இருந்தது என்று அவன் பின்னோக்கிப் போனதில்லை. புன்னகை மலர்ந்த அடுத்த கணம், மனதில் திட்டங்கள் சிமெண்ட் இல்லா செங்கல்கள் போல ஒன்றின் மேல் ஒன்றாக ஏறும். செங்கல்களை தட்டி விட்டுவிட்டு தேநீர் குடிப்பது ஆற்றலின் வழக்கம்.
பிளாக் டீ? கிரீன் டீ?
ஆற்றல் 99 சதவீதம் எப்போதும் பிளாக் டீ யைத்தான் தேர்ந்தெடுப்பான். ஆனால், அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக கிரீன் டீயும் உடன் இருக்கும்.
பிளாக் டீயை ஊற்றும்போது, ஜன்னல் வழியே மழை கொட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. தேநீரை ரசித்துக் குடிக்க ஏற்ற சோப்ளாங்கி மழை அல்ல, அரை போத்தல் ரம்மை ராவாக அடித்துவிட்டு, அம்மணமாக இறங்கி வானத்தைப் பார்த்து கத்தி, மழையுடன் இணையக்கூடிய மாதிரியான மழை.
ஆற்றல் ஆடைகள் இல்லாமல் ஆடக்கூடியவன்தான். தன்னைப் பற்றி யாரோ இப்படி எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தது போல அவனது புன்னகை இருந்தது.
“அம்மணமாக ஆடவேண்டிய மழையில், ஃபுல் டிரஸ் போட்டுக்கிட்டு, அறைக்குள் சேஃடியா ஒக்காந்துக்கிட்டு பிளாக் டீ குடிச்சிட்டிருக்கேன்’’ என்று வாய்விட்டுச் சொன்னான். அது மொபைலில் ரெக்கார்ட் ஆகி, பச்சைக் கலர் வட்டம் சுற்ற ஆரம்பித்தது.
ஒருமுறை மலையுச்சியில் அம்மணமாகக் கத்திக்கொண்டு மழைக்கு நடுவே பாட்டிலுடன் ஆற்றல் ரம் குடித்தபோது, அது உடைந்து நொறுங்கியது. உடைந்து கிடந்த ஒரு சில்லில் இருக்கும் ரம்மை எடுத்து கவிழ்த்துக்கொண்டான். கண்ணாடி மாவு வயித்துக்குள் போக வாய்ப்புண்டு என்ற கான்ஷியஸ்னஸ் இருக்கும் அளவுக்கான போதையிலும் இதைச் செய்தான்.
பிளாக் டீயை குடிக்க ஆரம்பித்தபோது மொபைல் ரிங்க் அடித்தது. அதை எடுக்காமல் ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தான். ஒரு விமானம் கடலுக்குள் கப்பல் மிதந்து செல்வது போல பட்டதால் இருக்கலாம், சிரித்துக்கொண்டே போனை எடுத்து, யார் என்றே பார்க்காமல்…
“டீ குடிச்சுட்டிருக்கேன், லைன்ல இருங்க” என்று சொல்லி போனை கீழே வைத்துவிட்டு, டீயைத் தொடர்ந்தான். டீயை முடித்துவிட்டு எழுந்தான். சிகரட் குடிக்க வேண்டும். அறைக்குள் பிடிப்பது ஆற்றலுக்கு முழுத் திருப்தி தராது. வெளியே வந்தான். விடுதியின் தரைத்தளத்துக்கு வந்தான். லாபியைக் கடக்கும்போது சிலர் எழுந்து நின்று புன்னகைப் புரிந்தார்கள்.
ஒரு டிஜிட்டல் போர்ட் இருந்தது. இங்கிலீஷில் வசவசவென்று எழுதியிருந்தது.
அதன் சுருக்கம்: - ஆற்றலின் கதையைப் படமாக எடுத்த ஹாலிவுட் திரைப்படம், ஆஸ்கர் வாங்கியதை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் முன்னிலையில் பாராட்டு விழா. நேரம் மாலை 6 மணி முதல்...
ஆற்றல் தன் ஜீன்ஸின் பின்பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தான். மீண்டும் யாரென்றே பார்க்காமல் “கால் மீ ஆஃப்டர் டூ டேஸ்’’ என்று சொல்லி கட் செய்தான். போலீஸ் பாதுகாப்பு பலமாக இருந்தது.
அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் போர்டிகோவில் ஆற்றலின் கார் மட்டும் கெத்தாக நின்றுகொண்டிருந்தது. லம்போகினி என்பதால் அந்த இடம்.
ஆற்றல் காருக்குள் ஏறப்போகும்போது, மாவிளக்கு மாவு போல முகம்கொண்ட ஒருவர் பதமாக நெருங்கினார். உயர்தர கோட் சூட் போட்டிருந்தார்.
“சார், மணி இப்ப 5.50. சரியா 6 மணிக்கு ஃபங்ஷன். சிஎம் ஸ்டார்டட். இப்ப எங்க போறீங்…”
“அம்ருதான்னு ஒரு பொண்ணு… காஃபி ஷாப்ல மீட் பண்ண போறேன்.’’
“சார், 6 மணிக்கு ஃபங்க்ஷன்… ப்ளான்…”
“ப்ளான்லாம் இல்ல, இப்ப ஜஸ்ட் 30 மினிட்ஸ் முன்னாடிதான் ஆன்லைன்ல ஹாய் சொன்னா, 6 மணிக்கு மீட் பண்லாம்னு சொன்னேன்.”
“இல்ல, சிஎம் வரார… பாராட்டு விழாவே உங்களுக்குதான்…”
“ஆமா, எனக்குதான்! நானா பாராட்டப்போறேன். என்னைத்தானே பாராட்ட போறாங்க? அதுவும் என்னையா? ஆஸ்கரைப் பாராட்டப் போறாங்க!’’
கார் கண்ணாடி ஏறி, கார் நகர்ந்து விடுதியைவிட்டு வெளியேறியது.
*****
கடும் மழையில் லம்போகினி விடுதியைவிட்டு வெளியேறியது. சாலையின் ஓரத்தில் மழைக்கோட்டு அணிந்தபடி காவலர்கள் நின்றிருந்தனர். லம்போகினியை ஆவலுடன் பார்த்தனர் சில காவலர்கள். கார் 2 கிலோமீட்டர் ஓடி, கத்திப்பாரா பாலம் ஏறி சுற்றி, மீண்டும் 2 கிலோமீட்டர் வந்து, விடுதியைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது, ஆற்றலுக்கு கால் வந்தது. எடுக்கவில்லை.
அடுத்த 15 நிமிடங்களில் நான்கு சிக்னல் தாண்டி இடதுபுறம் திரும்பி, கொஞ்சம் தண்ணீரைத் தெறிக்கவிட்டு ஓடி, ஒரு காஃபி ஷாப்பின் முன் நின்றது. பார்க்கிங் இல்லாத காஃபி ஷாப். காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு இறங்கலாமா என்று யோசிப்பது போல இருந்தது ஆற்றலின் முகபாவம். அம்ருதா அனுப்பியிருந்த போட்டோ நினைவுக்கு வந்ததால் இருக்கலாம். காரை அந்த காஃபி ஷாப்பின் வாயிலை அடைத்து நிறுத்தி இறங்கினான்.
அந்தக் கடைக்குள் நுழைந்தான்.
நட்டநடுவில் இருக்கும் மேஜையில் அம்ருதா அமர்ந்திருந்தாள். போட்டோவுக்கும் நேரிலும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும், 30 டிகிரியில் புகைப்படத்தை எடுத்து தன் குண்டான உடலை போட்டோவில் மறைத்திருந்தது தெரிந்தது.
சரி, அதே 30 டிகிரி கோணத்தில் அமர்ந்து பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னையே சமாதானப் படுத்திக்கொண்டு, ஆற்றல் அவளருகே சென்று சாய்ந்து அவள் உதட்டில் முத்தமிட்டான். அவள் அதை எதிர்பார்க்கவில்லை. எனினும், ஓவர் ரியாக்ட் செய்யாமல் சிரிக்க முயன்றாள்.
அவள் பக்கத்தில் இருந்த நாற்காலியை 30 டிகிரி கோணத்தில் போட்டு அமர்ந்தான்.
“வந்த உடனே கிஸ் பண்றீங்க ? ரைட்டர்ன்ற பவரை யூஸ் பண்றீங்களா?”
“யெஸ்!”
*****
முதலமைச்சர் கான்வாய் வந்துகொண்டிருந்தபோது ஆற்றல் கிளம்பிவிட்டான் என்ற தகவல் முதலமைச்சரின் பர்சனல் செக்ரட்டரிக்கு வந்துசேர்ந்தது.
பர்சனல் செக்ரட்டரி அதை முதலமைச்சருக்குச் சொல்வதற்கு முன், உளவுத்துறைத் தலைவருக்கு போன் போட்டார்.
“சொல்லுங்க பட்டாபி.”
“ஹலோ, என்னாய்யா இன்டெலிஜென்ஸ் பாக்கறீங்க? இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல ஃபங்ஷன் நடக்கும் இடத்துக்கு சி.எம் வந்துடுவாரு. இப்ப பாத்து அந்த ரைட்டர் வெளில போய்ட்டானாம். அவன் என்ன நக்ஸ்லைட்டா? ஏதாச்சும் ரெபல் ப்ளானா? இப்ப என்னா செய்யறது?’’
“அவனைப் பத்தி பெருசா நெகடிவ் ரிப்போர்ட் ஏதும் இல்லியே…”
“இப்பிடி எல்லார்க்கும் நன்னடத்தை சர்டிஃபிகேட் குடுத்துக்கிட்டு இருக்கத்தான் ஒளவுத்துறை… சனியன்! இப்ப என்னய்யா பண்றது? ஃபங்க்ஷனுக்குப் போலாமா? யூ டர்ன் போடச்சொல்லவா?”
“சாரி, உளவுத்துறை நடந்ததை மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். நடக்கப்போற திட்டத்தை ஸ்மெல் பண்ணலாம். ஆனா, ஒரு தனி மனுஷன் எப்ப எப்டி பிஹேவ் பண்ணுவான்னு கண்டுபிடிக்க முடியாது.”
“தனி மனுஷன் ஒண்ணுக்கு வந்தா அடக்குவானா, டாய்லெட் போவானான்னு கண்டுபுடிக்க முடியாது. அதான மயிரு.’’
“சாரி சார், டூ மினிட்ஸ் குடுங்க… சி.எம்மை ஃபங்க்ஷனுக்குப் போகச் சொல்லுங்க.’’
ஆற்றலின் மொபைல் டிராக்கிங், சிசி டிவி கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு, ஆற்றலின் இருப்பிடம் நோக்கி போலீஸ் வாகனம் விரைந்தது.
****
ரெய்ன் கோட் அணிந்த இரண்டு காவலர்கள், அந்த காஃபி ஷாப் உள்ளே நுழைந்தனர். அதில் ஒருவர் பெண்.
ஆற்றலை நெருங்கினார்கள்.
“சார் சி.எம். மேடை ஏறிட்டாரு, வாங்க போலாம்.’’
ஆற்றல் அம்ருதாவைப் பார்த்தான்.
“இது பவரா? நான் கிஸ் பண்ணது பவரா?’’
“ரெண்டும்தான்!’’
“இல்ல, இதான் பவர். நான் பண்ணது பவர்ஃபுல் லவ்!’’
அம்ருதா எழுந்து ஆற்றலை உதட்டுடன் கவ்வி முத்தமிட்டாள்.
“சார், சி.எம். மேடை …”
“சி.எம். மேடை ஏறினா கிஸ் அடிக்கக் கூடாதா?’’
“சார், ஃபர்ஸ்ட் பப்ளிக் ப்ளேஸ்ல கிஸ் அடிக்கக் கூடாது!”
“மேடைலயே சினிமா நடிகன் இன்னொரு நடிகனை கிஸ் அடிக்கிறான். ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை கிஸ் அடிக்கிறா…’’
“சார், அது வந்து…”
“ஓஹ்… தமிழ்நாடு ஹோமோ அண்டு லெஸ்பியன் புரோமோட் பண்ணுதா?”
“ஆற்றல் ப்ளீஸ், இதெல்லாம் அவங்களுக்குத் தெரியாது. பாவம் அவங்க, கெளம்புங்க ஃபங்க்ஷனுக்கு.’’
“ஏய்… நானே சும்மா ஃபேஸ்புக் ரெபல் மாதிரி காமடியா பேசிட்டிருக்கேன். இதுவே இவங்களுக்குப் புரியாதா?”
“சார், நீங்க கெளம்பியே ஆகணும்… இல்லனா…”
“அரஸ்ட் பண்ணுவீங்களா?”
“அஃப்கோர்ஸ்!’’
“அப்ப நான் பி.எம்.முக்கு கால் பண்ணறேன்.’’
போலீஸ் ஜெர்க் ஆகிறார்.
“சார் பி.எம். ஃபாரீன் டூர். இப்ப ஃபிளைட்ல இருப்பார். நாட் ரீச்சபிள்.’’
“உங்க ஊர் பி.எம்.முன்னு யார் சொன்னா?”
“ஆற்றல் லந்து பண்ணாதீங்க, கெளம்புங்க!’’
“நைட்டு ரூமுக்கு வர்றியா? கெளம்பறேன்.’’
******
லம்போகினியில் ஏறமுடியாது என்று போலீஸ் சொல்லிவிட்டது. தங்களுக்கும் ஓட்டத் தெரியாது என்று கை விரித்துவிட்டது.
போலீஸ் இன்னோவாவில் ஆற்றல் ஏறிக்கொண்டான். அம்ருதாவுக்கு இன்னோவாவில் ஏற அனுமதி இல்லை. இன்னோவா விரைந்து கொண்டிருக்கும்போது, அந்தப் பெண் போலீஸ் ஆர்வமுடன் கேட்டார்…
“சி.எம்மை வெயிட் பண்ண வச்சிட்டு அப்டி என்ன சார் இந்தப் பொண்ணுகிட்ட பேச்சு?’’
“இந்தப் பொண்ணுன்னு இல்லீங்க, நீங்க கூப்டு இருந்தாலும் வந்திருப்பேன்.”
அந்த இன்ஸ்பெக்டர் கண்ணைக் குறுக்கி மற்ற போலீஸைப் பார்த்து, “ஃபாஸ்ட்” என்றார்.
மீண்டும் கிடைத்த அமைதியில், “உங்க லவ்வரா? நாங்க இருக்குறப்பவே கிஸ் பண்ணிச்சி?”
“இல்ல, இப்பதான் மீட் பண்ணேன்.’’
“அதுக்குள்ள லவ்வா?”
“இல்ல, சண்டை!’’
“என்ன சண்டை?”
“வந்த உடனே கிஸ் பண்றீங்க? ரைட்டர்ங்ற பவரை யூஸ் பண்றீங்களா?”
“யெஸ்!’’
“யெஸ்ஸா? பவருக்கு எதிரான ஆளுன்னு ரைட்டிங்க்ல சொல்றீங்க. நீங்களே மிஸ் யூஸ் பண்ணலாமா?”
“பவரை யூஸ் பண்றதையோ, மிஸ்யூஸ் பண்றதையோ ரைட்டரைத் தவிர வேற யார்கிட்டயாவது கேட்டு இருக்கீங்களா?”
“வாட் யூ மீன்?”
“பவரை கேள்வி கேளுங்கன்னு நான் சொல்லிக் குடுத்தா, என் கிட்ட கத்துகிட்டு என்னை மட்டும் கேள்வி கேளுங்க.’’
“இதான் சண்டை!’’
“சார், திடீர்னு கிஸ் அடிச்சா தப்பு இல்லியா? அதைக் கேக்கக் கூடாதா?”
“நாலு நாள் கழிச்சி கிஸ் அடிச்சா ஓகேவா?’’
“அது பழகி, புரிஞ்சுக்கிட்டு…”
“இதையேதான் அவளும் சொன்னா.”
“இல்ல ஆற்றல், உங்களைப் புரிஞ்சுக்கிட்டு…”
“என் ரைட்டிங்தான் நான். என்னை நீ கடைசி வரை புரிஞ்சுக்கவே முடியாது. ஒரு கிஸ் பண்ண இவ்ளோ காம்ப்ளெக்ஸ் தியரியா? கிஸ் பண்ண ஏன் புரிஞ்சுக்கணும்?”
“என்ன சார், புரிஞ்சுக்கிட்டா ஒரு அண்டர்ஸ்டான்டிங்க்…”
“அவளை எல்லாம் நான் புரிஞ்சுக்கிட்டா, அப்புறம் நான் கிஸ்ஸே பண்ண முடியாதுங்க. கிஸ் ஈஸ் ஜஸ்ட் எ கிஸ்!’’
“ஆனா, அவளே உங்களை கிஸ் பண்ணா…”
“சீ… அம்ருதா, யூ ஆர் சோ யூனிக்! நீ ஒரு ஏஞ்சல்! உன்னை கிஸ் பண்றது மூலமா என்னோட லைஃப் ப்ளஸ் கிரியேட்டிவிட்டி கூடுது. உன்னை கிஸ் பண்றது மூலமா, லட்சக்கணக்கான பேருக்கு என் ரைட்டிங்க் மூலமா ப்ளஷர் கிடைக்கும்.’’
“இதான் நிஜமா? எனக்குப் புரியலை. அவளுக்குப் புரிஞ்சுதா?”
“அவ இந்த லிட்ரேச்சர் படிக்கிற அரை மெண்டல். அதனால, அவளுக்கு ஏதாச்சும் புரிஞ்சு இருக்கும்.’’
“உண்மை என்னதான் சார்?”
“அவளுக்கான என் டைம் ஒன் ஹவர். அதுல எப்டீங்க `ஹாய்’ சொல்லி பேசிப் பழகி, புகழ்ந்து நடிச்சி, பொய் சொல்லி லவ் பண்ணி, மெண்டல் மாதிரி பேசி கடைசியா கிஸ் பண்றது?”
“அப்ப அவ பாவம் இல்லியா? இது சீட்டிங்க்தானே?”
“சரக்கு போட்டு ஒரே ரூம்ல இருந்தா கூட யார் இருந்தாலும், செக்ஸ் வைச்சுப்பா. எனக்கு சரக்கு போட நேரமில்லை!’’
“என்ன சார் பொண்ணுங்களை இவ்வளவு மட்டமா பேசறீங்க?’’
“இல்ல மேடம், தமிழ்நாட்டு சரக்கை மட்டமா பேசறேன்!’’
(தொடரும்...)
விவாதங்கள் (135)
Sheik Mohamedமழையின் தீவிரத்தை பொறுத்து டீ
0 likesVinith Kumar
black tea
0 likesAarsh Puvi Rajagopal
superngaa
0 likesAarsh Puvi Rajagopal
intha vaakiyatha padikkum bothu yenaku yaarkooda kiss pannannumngaratha kandupudichen
1 likesAarsh Puvi Rajagopal
azhagaavalaa
0 likesAarsh Puvi Rajagopal
Oscar is like rating ....how can you find a good hotel without rating
0 likesKshiv Kumar
kshivakumrakshivakumra kahivakumrakshivakumrakshivakumrakshivakumra kahivakumrakumrakshivakimra
0 likesavinash sarathi
good one
1 likesSuga d
ஆற்றல் அப்படின்னு கதாப்பாத்திரத்தின் பெயர்... கொஞ்சம் ஒழுங்கான introduction கொடுத்திருக்கலாமே... ரெண்டாவது தடவை படிக்கும் போது தான் தெரிஞ்சது... hero பேரு ஆற்றல் ன்னு... முடியலப்பா..
2 likesஇயற்கை நலம் மருத்துவர் அன்புமதி
Black tea. Sudden preparation ; sudden action
0 likes