அத்தியாயம் 1
“எனக்குப் பைத்தியமா சார் பிடித்திருக்கு?”
“ம்… ம்… ம்”
“எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கு என்று எல்லோரும் கூறுகிறார்களே. நான் உண்மையிலேயே பைத்தியமா?
“இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடிய நீ உண்மையிலேயே எப்படிப் பைத்தியமாக இருக்க முடியும்?” என்று கேட்டேன்.
***
இன்று இந்தக் கேள்வியைக் கேட்டவன் தியாகராஜன். எனக்கு அவனை அவன் பிறந்த நாள் முதற்கொண்டு தெரியும். நடுநடுவே பல ஆண்டுகள் நான் அவனைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். இப்படியும், அப்படியுமாக அவனைப்பற்றி எனக்கு அனேகமாக எல்லா விஷயங்களும் தெரியும். அவன் பிறந்த அன்றைக்குத்தான் என் பதினாறு வயது மனைவியும் என் வீட்டிற்கு வந்தாள்.
சாத்தனூரில் சர்வமானியர் தெருவில் எங்கள் வீட்டிற்குப் பத்துவீடு தள்ளி எதிர் வரிசையில் இருந்தது தியாகுவின் வீடு. அவன் அப்பா ஊரின் மதிப்பிற்கும், மரியாதைக்கும், பாத்திரமானவர். ஒரு லட்சியவாதி என்று சொல்ல வேண்டும். ஊரில் சிலர் அவரைப் பைத்தியம் அல்லது அரைப் பைத்தியம் என்றுதான் சொன்னார்கள். அதற்குக் காரணம் அவர் மற்றவர்களைப் போல இருக்க மறுத்ததுதான். மற்றபடி அவருக்குப் பைத்தியம் என்று சொல்ல முடியாது.
சற்று வயதானவர்தான். கிட்டத்தட்ட அறுபது வயதிற்கு ஒன்றிரண்டு குறைவாக இருக்கும்போது தியாகு வந்தான். இளைய மனைவி வீட்டில் அந்த அம்மாள் இருக்கும் இடம் தெரியாது. ஆனால் அவர் கைவண்ணம் எங்கும் தெரியும்.
ஊரோடு ஒத்து வாழத் தெரியாத ஒரு மனிதன் வாழ்ந்து குப்பை கொட்டுவது மிக மிகச் சிரமம். அந்தச் சிரமமான காரியத்தை அந்த அம்மா மிகவும் சிறப்பாகச் செய்து, “அவங்களா? அவங்களுக்கென்ன லக்ஷ்மியேதான் அவங்க!” என்று அவளை அறிந்தவர்கள் எல்லோரும் சொல்ல வாழ்ந்தவள்.
நாற்பது ஐம்பது நாளைய குழந்தையை அவள் எடுத்துக் கொண்டு வருவாள் - கஷ்கு, முஷ்கு என்று குழந்தை சிவப்பாக அழகாகச் சிரித்த பொக்கைவாயும் அதுவுமாக - எனக்குக் குழந்தையைப் பற்றி பயம். தனியாகப் பிறந்து தனியாகவும் வளர்ந்தவன். குழந்தைகளை எடுத்துக் கொள்ளவும் தெரியாது; சீராட்டவும் தெரியாது. ராஜி நாலைந்து தம்பி, தங்கைகளுடன் பிறந்தவள். அவள் அஜாக்ரதையாக யாராத்துக் குழந்தையையோ தூக்குகிறமாதிரி எனக்கு இருக்கும். “கீழே போட்டுடாதே! அவாத்திலே ஏதாவது சொல்லப்போறா” என்பேன். “தியாகு! தியாகு!” என்று அவன் முகவாய்க் கட்டையிலே விரல் வைத்து அமுக்குவாள். ஏதோ ஒரு பெரிய வேலையைச் செய்கிற மாதிரி. தியாகு பொக்கை வாயைத் திறந்து முழுச் சிரிப்பாக சிரிப்பான். ஒரு அவுட் வாணம் வானத்தில் வெடித்துச் சிதறுவதுபோல இருக்கும். ராஜிக்குத்தான் குழந்தைகளிடம் எத்தனை ஆசை என்று எண்ணத் தோன்றும்!
***
தியாகுவின் ஆண்டு நிறைவிற்கு தெருவிற்கெல்லாம் அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. பத்மநாபய்யருக்கு வஞ்சனையில்லாத மனசு. ஊரார் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைப்பவர். தாராளமானவர். ஊரார் அவர் நன்றாக இருப்பது கண்டு பொறாமைப்படுபவர்கள். பெரிய பணக்காரராக இருந்து கண் எதிரிலேயே படிப்படியாக இறங்கிக் கொண்டிருப்பவர். அவர் இறங்கிக் கொண்டிருப்பதில் சாத்தனுர்க்காரர்களுக்குப் பரம திருப்தி.
படி இறங்கிக் கொண்டிருப்பதற்காக எதையாவது குறைக்க முடிகிறதோ! பத்து ஐயர் பகட்டாக தன் கடைக் குட்டியின் ஆண்டு நிறைவைக் கொண்டாடினார். அவரை வேண்டாதவர்கள் எல்லாம் வந்து சாப்பிட்டுப் பெரிய ஏப்பம் விட்டுக் கொண்டு, “சாப்பாடு போட்டவன் நீடுழி வாழ்க” என்று மூன்று மொழிகளால் - சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் இம் மூன்றிலும் வாழ்த்திவிட்டு மன ஆசுவாசத்துடன் திரும்பினார்கள். “இந்தக் கிழவனுக்கு ஏகப்பட்ட கடன், சொத்து சுதந்திரம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் ஆடம்பரத்தில் குறைச்சலில்லை. இந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாயாவது செலவழிந்திருக்கும்? எங்கு கடன் வாங்கினானோ! வேணும் அவனுக்கு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு போனார்கள் சாத்தனூர் சர்வமானியத் தெருவில் வசிப்பவர்கள்.
இதற்கு ஒன்றிரண்டு விலக்குகளும் உண்டுதான். போஸ்ட் மாஸ்டர் நாணு ஐயர், பணக்காரராக இருந்து நொடித்துப் போயும் மனம் குன்றாத சாம்பமூர்த்தி ஐயர், இம்மாதிரி சிலர் உண்டு. ஆனால் பத்து எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்; பறையமார் சிநேகிதம், விரோதம் என்று அவருக்குப் பாராட்டவே தெரியாது. எல்லோரையும் சமமாக, மனிதர்களாகப் பார்ப்பவர் அவர். மகா வினைக்காரரான ஸ்கூல் மாஸ்டர் மகாலிங்கமும் அவருக்கு ஒன்றுதான். எதிர்வீட்டு ராமச்சந்திரனும் ஒன்றுதான். இதுவே ஊரில் பலரும் பைத்தியம் என்று அவரைக் கருதுவதற்குக் காரணமாக இருந்தது.
சமையல் மற்றும் எல்லா வீட்டுக் காரியங்களும் பத்துவின் மனைவி - பெண் குலமா? அவர் குணம் போக்கு போலவே லக்ஷ்மி தான் என்று நினைக்கிறேன் - ஒண்டியாகச் செய்து கொள்வாள். மூத்தாள் பெண் இரண்டு பேர் கல்யாணமாகாதவர்கள். நன்றாக வளர்ந்து - குதிரை மாதிரி என்று சொல்வார்கள். நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒரு காரியமும் செய்யத் துப்புக் கிடையாது. ஆனால் அவர்களை லக்ஷ்மி கடுமையாக ஒரு சொல்கூடச் சொல்லமாட்டாள். சொன்னாள் இளைய தாயார் என்று பட்டம் வந்து விடுமே.
கூடமாட உதவி செய்தது மூத்தாளின் கல்யாணமன முதல்மகளும், அவளுடைய கல்யாணமாகாத பி.ஏ. படித்துக்கொண்டிருந்த பதினெட்டு வயதுப் பெண்ணும்தான். அம்மா பெயர் பாகீரதி. பெண்ணின் பெயர் கமலம். ஒரு நூறு, இரு நூறு பேருக்குச் சமையல் செய்து விருந்தளித்துவிட்டார்கள் அவர்கள். மூவரும் ராஜியும், என் ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மனைவி பட்டுவும் அவர்களுக்கு உதவி செய்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருக்கலாம்.
***
“எங்கப்பாவைச் சிலபேர் என் காதில் விழும்படியாகப் பைத்தியம் என்று சொல்கிறார்களே! அது நிஜமா சார்?”
“யார் அவரைப் பைத்தியம் என்று சொன்னது?”
“உங்கள் காதில் விழுந்ததில்லையா? அவர் பைத்தியம். அதனால்தான் சொத்தை வைத்து ஆளத் தெரியாமல் நிறைய சொத்துடன் ஆரம்பித்தும் ஏழையாகிவிட்டார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.”
“அவரை ‘Excentric’ என்று சொல்லலாம். பல விஷயங்களில் அவர் மற்ற சாத்தனூர் சர்வமானியத் தெருவினரைப் போல இல்லை. பிறர் நடந்து கொள்கிற மாதிரி தன் விஷயத்தைத் தவிர பிறர் விஷயத்தைப் பற்றிக் கவலைப்படாதிருப்பது என்பதெல்லாம் அவரால் முடியாது. யாருக்கும் வேலைகளுக்கு கூலி குறைத்துக் கொடுக்க அவருக்கு மனசு வராது. ஒரு ரூபாய் கேட்பானானால், ஒண்ணேகால் தருகிறேன் - நன்றாகச் செய்” என்பார். இதனாலெல்லாம் அவரைப் பைத்தியம் என்றோ சொல்ல முடியாது.
“அவரை லட்சியவாதி என்று சொல்லலாமா?”
“லட்சியவாதிதான் அவர். உலகில் லட்சியவாதிகளைப் பைத்தியக்காரர்களாக எண்ணத் தொடங்கி விட்டார்கள் அந்தக் காலத்திலேயே என்று வேண்டுமானால் சொல்லலாம். சற்று பிடிவாதக்காரர். சற்று முன்கோபி. ஆனால் அவர் பிடிவாதத்தினாலும் முன்கோபத்தினாலும் கஷ்டப்பட்டவர் என்று அவர் மனைவியைப் பற்றி வேண்டுமானால் சொல்லலாம். மற்ற யாருக்கும் அவரால் ஒரு தொந்தரவும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. பத்துவைப்போல எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என் வாழ்க்கையில் பல தடவைகள் நினைத்ததுண்டு. ஆனால் மற்றவர்கள் பலரும் குறுகிய மனத்தவர்களாக, பிறருக்குத் தீங்கு செய்பவர்களாக, தன் காரியத்தையே கவனிப்பவர்களாக இருக்கிறார்களே - என்ன செய்ய? லட்சியம் என்றால் அது என்ன என்று கேட்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த நாளில் லட்சியவாதியாக இருப்பது பைத்தியக்காரத்தனம்தான்!”
“அம்மாவைப் பற்றி”?
“உன் அம்மாவைப்பற்றி எனக்கு நேரடியாக ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை. என் மனைவி உங்கம்மாவைப் பார்த்துப் பழகிய அளவில் ஒரு சடங்காக ஊரோடு ஒத்துப் போகாத கணவனோடு ஈடுகொடுத்துக்கொண்டு, மூத்தாள் குழந்தைகள் - மூன்றும் பெண்கள் - மூன்றிடமும் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு படிஇறங்கும் தருணத்தில் குடும்பத்தைக் கட்டிக்காப்பாற்றிய பெருமை உங்கம்மாவுடையதுதான்!
இதற்குள் உள்ளே வந்த ராஜி, “லக்ஷ்மி என்றால் அந்தப் பெயர் உங்கம்மாவுக்குத்தான் பொருந்தும்” என்றாள்.
***
‘பத்து’ என்கிற பத்மநாபய்யரின் முதல் மனைவி மூலமாகப் பிறந்த குழந்தைகள் மூன்றும் பெண்கள், அவற்றில் இரண்டு கல்யாணத்திற்கிருந்தன. மூத்த மகளுக்கு கலியாணமாகி ஒரு பெண்ணும் பிள்ளையும் இருந்தன. அவள் புருஷன் உள்ளூரிலே ஒரு பள்ளிக்கூட வாத்தியார்.
பத்துவிற்கு இளையாளிடம் பிறந்த முதல் ஆறு குழந்தைகளும் பையன்கள். மூத்தவன் பெயர் ராஜா. அவன்தான் மற்ற குழந்தைகளையெல்லாம் தூக்கி வைத்துக்கொண்டு வளர்த்துப் பெரியவனாக்கியவன் என்று சொல்லவேண்டும். பத்து அதிகமாகக் குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சமாட்டார்; அவருக்கு நேரம் கிடைக்காது என்பது மட்டுமல்ல; குழந்தைகளிடமும் அதிகமாக ஈடுபாடும் கிடையாது ஒதுங்கிவிடுவார். அம்மாவுக்கோ வீட்டு வேலைகள் ஏராளம். இரண்டு கட்டுவீடு, வாசலில் ஒரு கிணறு, கொல்லையில் ஒரு கிணறு, தினமும் வீட்டுப் பேர்வழிகள் பத்துப் பனிரெண்டு பேருடன் - சாப்பிடுவதற்கு தெருவோடு போகிறவர்கள், தெரிந்தவர்கள், தேடி வந்தவர்கள் என்று யாரையாவது நாலு பேரைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்.
நானும், அம்மாவும், பாட்டியும் சாத்தனூரில் பழைய வீட்டைப் புதுப்பித்துக் கொண்டு தங்குவதற்கு முந்தியேகூட நான் சாத்தனூரில் பத்மநாப அய்யர் வீட்டிற்குப் பலதடவை போயிருக்கிறேன். எங்கள் சொல்ப நிலங்களை அவரிடம்தான் குத்தகைக்கு விட்டிருந்தோம். குத்தகைப் பணத்தை வாங்க சிலசமயம் நான் போவதுண்டு. பத்துவிற்கு என் பெயர் ஞாபகம் இராது. “நாணா வந்திருக்கிறார் - சாப்பாடு போடு” என்று நல்ல சாப்பாடும் போட்டு, குத்தகைப் பணமும் கொடுத்தனுப்புவார் அவர்.
குழந்தைகளைப் பெறத்தான் அந்த அம்மாளுக்குப் பொழுது இருந்ததே தவிர அவர்களைக் கவனிக்கப் பொழுது இல்லை. முதலில் ராஜாவைக் கட்டாயப்படுத்தி முதல் இரண்டு குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டு விளையாட்டுக் காட்டி சமாதானமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்து, பிறகு அவனுக்கு அதுவே வழக்கமாகிவிட்டது. பொழுது போக்காகவும் முழுக்காரியமாகவும் குழந்தைகள் காரியத்தைக் கவனிக்கவும், நன்றாகப் பார்த்துக் கொள்ளவும் ராஜா பழகி விட்டான் என்றே சொல்லலாம்.
முதல் ஆறு பிள்ளைகளுக்குப் பிறகு வரிசையாக இரண்டு பிள்ளைகள் பிறந்தன லக்ஷ்மியம்மாளுக்கு. அதற்குப் பிறகு ஒரு பிள்ளை. அவன்தான் தியாகராஜன். அது 1933ஆம் வருஷம் என்று நினைக்கிறேன். 1933தான். அந்த வருடம்தான் ராஜி எங்கள் வீட்டிற்கு வந்தாள். தியாகராஜன் என்கிற தியாகுவிற்குப் பிறகு அந்த அம்மாளுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. வீடு இதற்குமேல் தாங்காது என்ற நினைப்பும் இருக்கலாம். அல்லது அந்த அம்மாள் உடம்பு ஒன்பது பிள்ளைகளுக்கு மேல் தாங்காது என்று டாக்டர் சொல்லியிருக்கலாம். பத்து விருத்தியை நிறுத்திக் கொண்டார்.
அந்த வருஷம் ராஜா கும்பகோணம் காலேஜில் இண்டர்மீடியட் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் என்று ஞாபகம். கடைசிக் குழந்தைகள் மூன்றையும் கவனித்துக் காலையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்துவிட்டு பரக்கப்பரக்க அரை வயிறு சாப்பிட்டு விட்டு, ஐந்து மைல்கள் நடப்பதற்கு ஓரு மணி நேரம் வைத்துக் கொண்டு ஒன்பது மணிக்குக் கிளம்பி காலேஜுக்குப் போவான். நடைதான். சைக்கிள் வாங்கித் தந்திருக்கலாம், சைக்கிளில் போனால் பையன் விபத்துக்குள்ளாகி விடுவான் என்று பத்துவிற்கு பயம். மூன்றாவது பையன் தலைப்பட்டு காலேஜுக்குப் போக ஆரம்பித்தவுடன்தான் அவர் சைக்கிள் வாங்க சம்மதித்தார் என்று எனக்கு நினைவிற்கு வருகிறது.
- தொடரும்
விவாதங்கள் (3)
- Bhuvaneswari Lakshmanan
😱😱😱 9pillaingala?????
0 likes - Bhuvaneswari Lakshmanan
m....irupanga yaro oruthar ivara mathiri.....suyanalam illama Iruka mudiyathu...
0 likes - Bhuvaneswari Lakshmanan
ellarukume appadi oru manasu irukum...matthavanga nalla irukatumnu ninaikiravanga romba kuraivu.
0 likes