அத்தியாயம் 1
புதிய பரகேசரி
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.
பால் நிலவையும் பகலவனையும் வணங்குவதே கூட அவை முறையே தம் வேந்தனின் வெண்குடை போலவும், ஆணைச்சக்கரம் போலவும் இருப்பதால்தான் என்று சொல்லும் திமிருடைய குடிகள் நிறைந்த அந்தச் சோழ தேசம், கடந்து போன சில திங்கள்களிலே செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் வரலாறுக்கும் கிஞ்சித்தும் பஞ்சமற்றுச் செழித்தது.
பின்னிரவின் அமானுஷ்ய நிசப்தம் வியாபித்திருக்க, தஞ்சை நகரின் இருள் வீதிகளில் நெடுநாள் கழித்து கல்கியும் சாண்டில்யனும் மெல்ல நடை பயின்று கொண்டிருந்தனர்.
முதற்காதலியின் பழம்பரிசினைப் போல் வானம் மூன்றாம் பிறையைப் பத்திரமாய் மேகத்துள் பொத்தி வைத்திருந்தது. கல்கி அதை விழிகளால் அளாவி ரசித்தாள். அவள் மனம் மென்னுணர்வுகளின் பக்கம் சாய்ந்திருந்தது. கடமையின் நிமித்தமே அவனுடன் நடை எனினும் அது அப்படியே முடியாமல் நீளாதா எனத் தோன்றிக் கொண்டிருந்தது.
பக்கவாட்டில் நடந்து கொண்டிருந்த சாண்டில்யனை ஓரக் கண்களால் நோக்கினாள்.
நண்பனின் ராமகாதையிலிருந்து குறும்பா ஏதும் கடன் பெற்று குறும்பாக இப்போது ஒன்றும் கதைக்க மாட்டானா என்றிருந்தது. முதன் முறை அவனைச் சந்தித்த அந்தப் பௌர்ணமி இரவிலிருந்து எத்தனை தூரம் இளகியும் இறங்கியும் வந்து விட்டோம் என அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. சந்திர கிரஹணம் பீடித்த அதே ராத்திரி. ஆதித்த கரிகாலர் கொலையுண்ட அதே அல். மார்புகள் ஏறித்தாழ பெருமூச்சைப் பிரசவித்தாள்.
‘உருண்டு திரண்டு பேரொளி சிந்தும் பூரணையை முகில்கள் ஒளித்து வைத்தது போல் முலைகளை கச்சைக்குள் பொதித்து வைத்திருக்கிறாள், மீறிக் கண்ணைக் கிழிக்கும் சின்னப் பிறை போல் துலங்கும் மார்ப் பிளவு’ என்று சாண்டில்யன் ஏதாவது உளறினால் இந்தக் கறுப்புக் குளிருக்கு இதமாக இருக்குமே என்று ஏங்கினாள். வேண்டுமென்றே அவன் கவனம் கலைப்பது போல் மாராப்பைச் சரி செய்தாள். அவன் கவனிக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. சாண்டியல்யன் அந்தக் கணத்தில் அவ்வளவு நெகிழ்வு உற்றிருக்கவில்லை. அவனது மூளை தீவிர யோசனையில் இருந்தது என்பது புரிந்தது.
சொற்களே இனி சரணாகதி எனத் தீர்மானித்து குழைந்த குரலில் அழைத்தாள் கல்கி.
“சாண்டில்யா…!”
“ம்.”
“வானைப் பார்த்தாயா?”
சட்டெனச் சிந்தை தடைபட்டு சிரமுயர்த்தி, தூர வானில் கண் வீசினான் சாண்டில்யன்.
“ஆம்.”
“என்ன தோன்றுகிறது?”
“நம் முதல் சந்திப்பு நினைவு வருகிறது, கல்கி!”
கல்கி உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாது கேட்டாள்.
“அப்படியா!”
“ம். அன்று தூமகேது என்கிற அந்த அபசகுன நக்ஷத்திரத்தைக் கண்டோம். இன்றில்லை. அதன் உதிர்வு நம் இளவரசர் இறக்கப் போகிறார் என்பதன் முன்னறிவிப்பு அல்லவா!”
“சுத்தம்…”
என்ன…?”
“இல்லை. தூய கருத்து எனச் சொல்ல வந்தேன். பாராட்டச் சொற்கள் சிக்காமல்…”
“பல மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் இந்த வானைப் பார்க்கிறேன். மனிதர்கள் கவலையில்லாத, குழப்பமில்லாத வேளைகளில்தான் வானத்தைக் கவனிக்கிறார்கள்.”
‘அதில் நிலவு என்ற ஒன்றும் இருக்கிறதடா, கவனித்தாயா மரமண்டை?’ என்று சொல்லத் தோன்றியதைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள் கல்கி.
“எனில் அன்று கலக்கமின்றி இந்த நிலவின் ரம்மியத்தை ரசித்திருந்தோம் என்கிறாயா?”
“ம்ம்ம். இடைப்பட்ட காலத்தில் சோழத்தில் சரஞ்சரமாக எத்தனை சம்பவங்கள்! எல்லாம் அதிர்ச்சியூட்டும் திகில்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்தவை. விஜயாலயர் சோழப் பேரரசை நிறுவிய காலம் முதல் நூற்றி இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை விட கடந்த சில திங்கள்களில் இந்த மண்ணில் நேர்ந்தவை நாடகீயமானவை அல்லவா!”
அதற்கு மேல் காதலுக்கு இடமில்லை எனத் தோன்றியது கல்கிக்கு. எப்போதும் காதலின் சாபம் இதுதான். இருவரில் ஒருவர் ஆர்வமாக அணுகுகையில் மற்றவர் ஈடுபாடு காட்ட மாட்டார், அறிந்தோ அறியாமலோ! அன்று அவன் முறை; இன்று இவள் முறை போலும்.
நெஞ்சின் இனிமைகளைத் துடைத்தெறிந்து விட்டு உரையாடலுக்கு இறங்கி வந்தாள்.
“சோழப் பட்டத்தரசி வானவன் மாதேவி இந்த வயதில் கருவுற்றதை நாட்டில் ஒரு சாரார் இளவரசர் ஆதித்த கரிகாலர் மறுபடி பிறக்கப் போகிறார் என நம்பி மகிழ்ச்சியுற்றாலும், பெரும்பாலும் கேலியாகத்தான் கிசுகிசுப்பு பேசுகிறார்கள். சொந்தப் பிள்ளைகளுக்குப் போட்டியாக இன்னும் சுந்தர சோழர் மஞ்சத்தில் களமாடிக் கொண்டிருக்கிறார் என.”
“இரண்டுமே முட்டாள்தனமான தரப்புகள் என்பேன், கல்கி. மறுபிறவி பொய். காமத்தின் அரிப்பு என்பதும் பிழை. மன்னரே சொன்னது போல் இது துயரத்தின் கனி என்றே நான் பார்க்கிறேன். அவர்களின் கலவி பல்லாண்டுகளுக்குப் பின் நிகழ்ந்ததாகவே இருக்கும். அதுவும் உடலின்பத்தின் பொருட்டு இன்றி மனக்கிலேசத்திலிருந்து விடுபட ஔடதமாக. துயரிலிருந்து தப்பி வர எதேனும் ஒன்றைப் பற்றிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.”
‘அதற்காக மனையாளின் முலைகளையா பற்றிக் கொள்வது!’ என்று சட்டென மனதில் எழுந்த வினாவை உரையாடலைக் கெடுக்க வேண்டாம் என்று சொல்லாதிருந்தாள். ஒரு கணம் இதில் யார் கல்கி, யார் சாண்டில்யன் எனக் குழப்பம் வந்து விட்டது. காதல் வந்து விட்டால் ஒருவரது குணம் மற்றவர்க்கு சுலபத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு வகையில் இணையை எவ்வளவு ரசிக்கிறோம் என்பதற்கு அளவுகோல் அது! சிரித்துக் கொண்டாள்.
“எப்படியோ இந்தக் கிண்டல் குரல்கள் ஏதும் கேளாத தொலைவுக்குப் போய் உட்கார்ந்து கொண்டார் மன்னர். அனேகமாக வானவன் மாதேவிக்கு அங்கேதான் பிரசவம் நடக்கும் எனத் தெரிகிறது. தலைமை ராஜவைத்தியரான அசுவத்தாம பட்டருடன் காஞ்சிக்கு இடம் பெயர்ந்து விட்டார். ஆக, பொன் மாளிகையில் பிறக்கப் போகின்ற தங்க மகன்!”
“ஆண் வாரிசு என்பது அரசியலில் புதுக் குழப்பத்தை ஏற்படுத்துமா என இனி தெரியும்.”
“அதுதான் தெளிவாக எல்லாம் அறிவிக்கப் பட்டாயிற்றே! சுந்தர சோழர் முன்னின்று மதுராந்தகருக்கு இளவரசுப் பட்டம் கட்டி விட்டார்கள். நீயும் பார்த்தாய்தானே? அவருக்கு இளவரச கிரீடம் சூட்டியது வானவன் மாதேவி. பட்டத்துக்குரிய வாளைக் கையளித்தது செம்பியன் மாதேவி. பதவியேற்றதும் இருவரையும் ஒரு சேர நிற்க வைத்து பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக நின்று வணங்கினார் மதுராந்தகர். அதாவது அவருக்குப் பட்டம் சூடுவதில் எவர்க்கும் ஏதும் சங்கடமில்லை என்ற செய்தி குறியீடாகச் சொல்லப்பட்டது.”
“பரகேசரி மதுராந்தக சோழர்!”
சாண்டில்யன் அதை உச்சரித்த விதத்தில் ஒரு விதமான கசப்பும் வெறுப்பும் இருந்தது.
“ஒற்றர்களுக்குச் சார்பு இருக்கவே கூடாது, சாண்டில்யா. நாம் சோழ அரசுக்கு மட்டுமே விசுவாசிகள், தனி நபர்களுக்கு அல்ல. அரசரின் முடிவே நமக்குச் சாசனம். மதுராந்தகர் தொடர்பான உன் வருத்தம் கூட ஒரு வகையில் கடமை மீறல்தான். ராஜதுரோகம்தான்.”
“அறத்துக்குப் பிறகே உலகின் அனைத்து சட்டங்களும். அவ்வகையில் மனசாட்சியே தெய்வம். அதைப் புறக்கணித்துவிட்டு யாருக்கு விசுவாசங்காட்டி என்ன பிரயோஜனம்?”
“ம். சரி. நான் சொல்ல வந்தது மணிமுடியில் இனிக் குழப்பம் ஏதும் இல்லை என்பதே.”
“அரசியல் அவ்வளவு சுலபமானதில்லை. எதிர்பாராதவைகளே அதன் கல்யாண குணம்!”
“என்ன யோசித்தாலும் பொருந்தவில்லை. இப்போதைக்கு சுந்தர சோழரே மன்னர். குழந்தை பிறக்கப் போகும் உற்சாகத்தில் வேறு இருப்பதால் புத்திர சோகத்திலிருந்து விடுபட்டு கூடுதல் ஆயுள் பெறவே வாய்ப்பதிகம். அவருக்குப் பின் மதுராந்தகர்தான் அரசர் என்பதும் உறுதியாகி விட்டது. ஒருவேளை அவர் காலம் முடிந்தாலும் அவரது மகனான கண்டராதித்தனோ, சுந்தர சோழர் புதல்வர் அருண்மொழி வர்மரோதான் ஆட்சிக்கு வர முடியும். இதெல்லாம் நடக்கவே பல்லாண்டுகள் ஆகும். அப்படி இருக்க, இப்போது கருவிருக்கும் இந்தப் புதுச் சிசுவுக்கும் அதிகாரத்துக்கும் என்ன தொடர்பு!”
“நியாயம்தான். பார்ப்போம். காலம் என்ன கலகம் திட்டமிட்டு வைத்திருக்கிறதென!”
“மதுராந்தகர் பட்டம் சூட்டிக் கொண்ட சூட்டோடு பழுவேட்டரையரின் மகளைக் கரம் பிடிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. இது அவருக்கு ஐந்தாம் மனைவியல்லவா!”
“உண்மையில் அது பழுவேட்டரையரின் அவசரமாகவே இருக்க வேண்டும். இப்போது விடுத்தால் பிறகு மதுராந்தகர் தட்டிக் கழிக்கக்கூடும். பழுவேட்டரையர் கையில்தான் சோழத்தின் மொத்தப் படைகளும் இருக்கின்றன. அவர் ஒத்துழைப்பின்றி மதுராந்தகன் செயல்படுவது சிரமம். அதனால் அவர் அழுத்தம் கொடுத்திருந்தால் மதுராந்தகர் ஒப்புக் கொண்டிருக்கவே வாய்ப்பதிகம். எல்லாம் இங்கு அரசியல் கூட்டணிக் கணக்குகள்தாம்.”
“சுந்தர சோழர் இல்லாத நிலையில் மதுராந்தகரே பெரும்பான்மை நிர்வாகங்களைக் கவனிக்கிறார். போர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் மட்டும் நேரடியாக காஞ்சிக்கு அனுப்பப்பட்டுத் தீர்மானிக்கப்படுகிறது. மதுராந்தகர் ஓரளவு நன்றாகவே செயல்படுவதாக அறிகிறேன். அதாவது பலரும் கணித்தபடி அத்தனை மோசமல்ல.”
“உண்மையில் ராஜ்யம் ஆளப்படுவது அதிகாரிகளாலேயே. அவர்களின் ஆலோசனை கேட்டு யோசனையுடன் மன்னர் நடந்தாலே பெரும்பாலும் நல்லாட்சி தந்து விட முடியும்.”
“செம்பியன் மாதேவியும் நிம்மதியாகச் சிவகாரியங்களில் ஈடுபடக் கிளம்பி விட்டார்!”
“அவருக்கு என்ன! தன் வாழ்நாளின் ஒரே லட்சியமும் ஒரு சாவில் நிறைவேறி விட்டது.”
“தஞ்சை அரண்மனையின் அந்தப்புரத்தில் அந்தப் பெண் பெருந்தேவியின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கிறதாம். மதுராந்தகரே இப்போது சோழத்தின் அதிகாரப்பூர்வமற்ற அரசர் என்றாலும் முதல் தாரமாக அல்லாதவருக்கு இது சற்றே அதிகப்படி அல்லவா!”
“புதுப் பெண்டாட்டி என்றால் புருஷனும் இடங்கொடுக்கத்தான் செய்வான், மனைவியும் கொஞ்சம் தலை மீது ஏறி அமரத்தான் பார்ப்பாள். பெருந்தேவியின் கொங்கைகளுக்குச் சோழ தேசத்தையே எழுதி வைக்கலாம் என மதுராந்தகர் ஒருமுறை மதுப்போதையில் சொன்னதாகக் கேள்வி. யோசித்தால் அதில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.”
சாண்டில்யன் கல்கியைப் பார்த்துக் கண்ணடிக்க, ‘ஊரில் இருப்பவள் கொங்கையை எல்லாம் ரசிப்பான், உடன் வருபவள் உடல் பழகிப் புளித்து விட்டதோ!’ என எரிச்சல் எழ, பற்களைக் கடித்துக் கொண்டு உரையாடலை மாற்று விஷயத்துக்கு நகர்த்தினாள்.
“என் வியப்பெல்லாம் மதுராந்தகருக்குப் பட்டம் சூட்ட குந்தவைப் பிராட்டி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதே. தன் தம்பி அருண்மொழி வர்மர் மீதான அவரது பிரியம் உலகம் அறிந்ததே. குந்தவை அவரை முன்வைத்துப் பிரச்சனை செய்வார் என எண்ணினேன்.”
“ம்ம்ம்..."
“தவிர, மக்களுக்கும் மதுராந்தகரை விட அருண்மொழி வர்மர் மீதே நல்லபிப்பிராயம் உள்ளது. அதைப் பயன்படுத்தி ஆதரவு திரட்டியிருக்க முடியும். ஆனால், செய்யவில்லை.”
“சோழத்தில் நடப்பது மன்னராட்சி என்பதை மறந்து விடாதே, கல்கி. எல்லாவற்றையும் தாண்டி இதில் அரசரின் விருப்பதே நிறைவேறும். மொத்த நாடும் எதிர்த்து நின்றாலுமே அவரது ஆசை நடக்கும். சுந்தர சோழர் மதுராந்தகருக்குத் தான் இழைத்த அநீதியே தன் மகனைக் காவு வாங்கி விட்டது என உள்ளூர நம்புகிறார். மேலும் தன் பிள்ளைகளை அது பாதிக்கலாகாது என அஞ்சுவதாலேயே மதுராந்தகருக்குப் பட்டம் சூட்டி விலகி விட்டார்.”
“அருண்மொழி வர்மரும் இந்த ஆட்சி அதிகார அக்கப்போர்கள் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இன்றி ஈழத்துக்குப் போருக்குச் சென்று விட்டார். போர் தீரச் சமயமெடுக்கும் என்றாலும் ஆரம்பகட்ட முன்னேற்றத்தை வைத்து வெற்றி சோழத்துக்கே என்கிறார்கள்.”
“அவர் பிறவிப் போர் வீரர். தன் தமையன் போலவே. அரியாசனம் அவருக்குச் சிறையே.”
“போரில் வென்று நாடு திரும்பியதும் அருண்மொழி அனேகமாக தந்திசக்திவிடங்கியை மணப்பார் என்பது என் ஊகம். அந்தப் பெண்ணின் தந்தை பராந்தகன் சிறிய வேளார் அருண்மொழி வர்மருக்குப் பக்கத் துணையாக ஈழ யுத்தகளத்தில் நிற்கிறார். அப்பெண் இங்கே பழையாறையில் சர்வகாலமும் குந்தவையுடனே சுற்றிக் கொண்டிருக்கிறார்.”
“அப்பெண்ணுக்கு வேறு சிந்தனை ஏதும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமே!”
“ஓ!”
“அந்தப் பெண் சாந்தசொரூபியாகவும் நிதானம் வாய்ந்தவராகவும் தென்படுகிறார்.”
“அடடா! சாண்டியல்யா, நீ வியக்காத, விதந்தோதாத பெண் உலகில் எவரும் உண்டா?“
“நீ இருக்கிறாயே, கல்கி!”
“இருக்கும் இருக்கும். எல்லாம் என் தவறு. இன்னும் அலைய விட்டிருந்தால் காலைச் சுற்றி இருப்பாய். தின்னத் தின்னத் தேனும் தெவிட்டும். அள்ள அள்ள அமுதமும் அலட்சியம்!”
“ஏன் அவசரம் கல்கி? மற்ற பெண்களைப் பற்றி நல்லவிதமாகப் பேசுவது விதந்தோதல். ஆனால், உன் பற்றி அப்படிச் சொன்னால் அது உண்மை உரைத்தல் ஆகி விடுமல்லவா!”
சொல்லிக் கொண்டே கன்னக் கதுப்பில் முத்தமிட எத்தனித்த சாண்டில்யனை நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டாள் கல்கி. அவன் விழுவதுபோல் பாவனை செய்து சிரித்தான்.
“வாய்ஜாலம் காட்டி என்னை ஏமாற்றாதே. எட்டிப் போ!”
“நிஜமாகவே வாய்ஜாலம் உனக்குப் பிடிக்காதா, கல்கி?”
“ச்சீய்…”
கல்கி நாணிச் சிரிக்க, சாண்டில்யன் மறுபடி உரையாடல் பாதைக்குத் திரும்பினான்.
“குந்தவைக்கும் வல்லவரையர் குல வந்தியத்தேவருக்கும் காதல் என்பது என் கணிப்பு.”
“சுந்தர சோழருமே அன்றைய பெருமுடி கோயில் நிகழ்வில் அதைக் கோடி காட்டினார்.”
“காதலர்கள் ரகசியம் அக்காதலர்களைத் தவிர மற்ற யாவருக்கும் தெரிந்து விடுகிறது.”
“ஆனால், காதலர்கள் சமீபத்தில் சந்தித்துக் கொண்டது போலவே தெரியவில்லையே!”
“வந்தியத்தேவர் தன் போக்கில் சோமன் சகோதரர்களைத் தேடி சேர தேசம் முதலான இடங்களுக்குப் போயிருக்கிறார். சொல்லப் போனால் மொத்தச் சோழ தேசத்தில் அவர் மட்டுமே ஆதித்தர் படுகொலையை நினைவில் நிறுத்தி தீவிரமாகக் குற்றவாளிகளைத் தேடுவது போல் தோன்றுகிறது. மற்றவர்கள் எல்லோரும் ஒரு மாதிரி அதைக் கடந்து வந்து விட்டனர். பழுவேட்டரையரி ன் ஆட்கள் எல்லாத் திசையிலும் போயிருந்தாலும் அவர்கள் அதைச் சரிவரிச் செய்கிறார்களா என்று உறுதிபடச் சொல்ல முடியவில்லை. சுந்தர சோழரே கூட பாண்டிய ஆபத்துதவிகள் தாண்டி இதில் சிந்திக்க மறுக்கிறாரே!”
“இதில் மேலும் ஏதேனும் மனங்கோணும் உண்மைகள் இருக்குமோ என அஞ்சுகிறாரோ!”
“இருக்கலாம். காரணம் எதுவாகினும் விஷயம் அதுதானே! எவருக்கும் ஆர்வமில்லை.”
“நீ சொன்னதில் ஒன்று மட்டும் பிழையானது. இந்தச் சோழ மண்ணில் ஆதித்த கரிகாலர் கொலையாளிகளை அக்கறையுடன் தேடும் இன்னொரு தரப்பும் இருக்கிறதல்லவா!”
“நம்மை பற்றிச் சொல்கிறாயா, கல்கி?”
“ஆம். அதாவது அநிருத்த பிரம்மராயர்!”
பேசியபடி நடந்ததில் இலக்கை அடைந்து விட்டிருந்தார்கள். ஆதித்த கரிகாலர் வாழ்ந்த புலிப்பறழ் மாளிகை அதற்கான சுவடு ஏதும் இன்றி அவர்களின் எதிரே நின்றிருந்தது.
-தொடரும்
விவாதங்கள் (46)
Vinay Kuppu
thandhai sollai Meera kudadhu allava
0 likesSwaminathan B
நல்ல கதை செக்ஸ் அதிகம்.
0 likesVijaya Bps
சாண்டில்யனின் ராஜ்யசிக்ச் நாவல் upload please
2 likes
intellecta nice read
0 likes
intellecta good read
0 likes
intellecta nice read
0 likes
intellecta good read
0 likes
intellectnice read
0 likes
intellecta good read
0 likes
intellecta good read
0 likes