அத்தியாயம் 1

வேதாந்தி

ன்று பகல் எல்லோரும் அடுத்த ஊருக்குப் பெண் ‘பார்க்க’ப் புறப்படுவதாக இருந்தார்கள். பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஸ்வர்ணம் கவனித்துக் கொண்டிருந்தாள். பாதி விழிப்புடன் படுத்திருந்த ரகுபதியின் காதுகளில் வீணையுடன் இழைந்துவந்த மத்யமாவதி ராகம் விழுந்து பரவசமூட்டியது. மத்யமாவதியுடன் ஸரஸ்வதி, அநேகமாகப் பாட்டை முடித்து விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும். 

படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் ரகுபதியின் படுக்கை அறை வாயிற்படியில் ஸரஸ்வதி வந்து நின்று, “அத்தான்! இன்றைக்குக்கூட என்ன இவ்வளவு தூக்கம்! சாவித்திரியைக் கைப்பிடிக்கப் போகும் சத்தியவானாகிய நீ இப்படிச் சோம்பேறியாக இருக்கலாமா அத்தான்? காபி ஆறிப்போகிறதாம். அத்தை ஒரு பாட்டம் சமையலறையில் இருந்து கொண்டு கத்துகிறாள். ஹும்... ஹும்... எழுந்திரு! அத்தான் எழுந்திரு! இல்லாவிட்டால் திருப்பள்ளியெழுச்சி பாடினால்தான் எழுந்திருப்பாயோ?” என்று பரிகாசம் தொனிக்க உற்சாகத்துடன் ரகுபதியின் அரைத் தூக்கத்தைக் கலைத்துவிட்டாள்.

ரகுபதி ஆச்சரியத்துடன் ஸரஸ்வதியின் முகத்தைப் பார்த்தான். பிறகு, “அப்படியானால், நேற்று வந்து போனார்களே அவர்கள் வீட்டுப் பெண்ணுக்குச் சாவித்திரி என்று பெயரா, ஸரஸு?” என்று கேட்டான்.

“ஆமாம் அத்தான்! புராணத்துச் சாவித்திரிக்கும் இவளுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கும். அப்பா, அம்மாவுக்கு ரொம்ப செல்லப் பெண்ணாம் - பாட்டி ஒருத்திக்கு அருமைப் பேத்தியாம்! நாலு பேருடன் பிறந்தவளாக இருந்தாலும், தனிக் காட்டு ராணிமாதிரி அதிகாரம் செய்வாளாம்!”

ஸரஸ்வதி, குறும்புப் புன்னகையுடன் தலைப்பின்னலை கையில் முறுக்கிக்கொண்டே ரகுபதியைப் பார்த்து இவ்விதம் கூறினாள்.

“ஓஹோ! உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே, ஸரஸு! நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. நீ சங்கீதம் பயில்வதை விட்டு விட்டு, ஏதாவது பத்திரிகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்தாயானால், இந்தமாதிரி சரடு விடுவதில் அர்த்தம் உண்டு!” என்றான் ரகுபதி சிரித்துக்கொண்டே.

“ஐயையோ, சரடா? இல்லை. அத்தான், நிஜமாகத்தான் சொல்லுகிறேன். பெண்ணின் தகப்பனாரே அத்தையிடம் தன் பெண்ணைப்பற்றிய பிரதாபங்களை வாய் ஓயாமல் அளந்து கொண்டிருந்தார்! “ என்றாள் ஸரஸ்வதி.

அவர்கள் இருவரும் மேற்கொண்டு தொடர்ந்து வம்பளப்பதற்கு முடியாமல், அடுப்பங்கரையிலிருந்து அதிகாரத்துடன் ஒரு குரல் அவர்கள் இருவரையும் அதட்டியது.

“ஸரஸு! பேச ஆரம்பித்தால் ஓய மாட்டாயே நீ? அவனுந்தான் என்ன? பாட்டுப் பைத்தியம்; பேச்சுப் பைத்தியமும்கூட” என்று அத்தை ஸ்வர்ணம் அதட்டினாள்.

ஸரஸ்வதி மாடிப் படிகளில் மெதுவாக இறங்கினாள். “சிந்தை அறிந்து வாடி, செல்வக் குமரன் - சிந்தை அறிந்து வாடி” என்று பாடிக்கொண்டு, அத்தானைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தாள் அந்தப் பெண் ஸரஸ்வதி. சிரிப்பில் சேர்ந்துகொண்ட ஸ்வர்ணம், ஸரஸ்வதியின் அருகில் வந்து வாஞ்சையுடன் அவள் தலையைத் தடவிக் கொடுத்தாள். 

பிறகு, “ஸரஸு! நீ என்னதான் உன் அத்தானுடன் கபடமில்லாமல் பழகினாலும், பிறர் தவராக நினைப்பார்கள், அம்மா. போகிற இடத்திலெல்லாம் நீ பேசாமல் இருக்கிறதில்லை. இந்தக் காலத்தில் நல்லது எது, கெட்டது எது என்பதை யார் ஆராய்ந்து பார்க்கிறார்கள்? நான் சொல்கிறேனே என்று கோபித்துக்கொள்ளாதே. ஸரஸு!” என்றாள் ஸ்வர்ணம்.

ஸரஸ்வதி, அன்புடன் அத்தையை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நான்தான் உங்களுடன் பெண் பார்க்க வரப்போகிற இல்லையே, அத்தை. நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கபடமில்லாமல் கேட்டாள்.

ஸ்வர்ணத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. துஷ்டத்தனம் செய்யும் குழந்தையைத் தாய் அதட்டியதும், அதன் பிடிவாதம் அதிகமாவதைப்போல் இருந்தன, ஸரஸ்வதியின் பதிலும், செய்கையும்.

“உன்னை நான் என்ன சொல்லிவிட்டேன் ஸரஸு? லக்ஷணமாக, கன்னிப் பெண்ணாக நீ என்னுடன் வராமல், அழகாக இருக்கிறது நான் ரகுவை அழைத்துப்போய் அவர்கள் எதிரில் நிறுத்துவது? நீ வராவிட்டால், பாட்டுப் பரீக்ஷையைத்தான் யார் நடத்துவது? போ, போ. புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து கொள், போ” என்று உரிமையுடன் ஸரஸ்வதியை அதட்டினாள் ஸ்வர்ணம்.

அதென்னவோ வாஸ்தவம். அத்தான் ஒரு பாட்டுப் பைத்தியம் என்று தெரிந்த ஸரஸ்வதி, பெண் பார்க்கப் போகும் இடங்களிலெல்லாம் ஒரு சிறிய சங்கீதப் பரீட்சையே வைத்து விட்டாள் எனலாம். சில பெண்கள் அறுபது கீர்த்தனங்கள் பாடமென்று சொல்லி விட்டு, ஸ,ப வுக்கு வித்தியாசம் தெரியாமல் விழித்தார்கள். 

சிலரின் சங்கீதம் ஒரே சினிமா மயமாக இருந்தது! கச்சிதமாக நாலு பாட்டுகள் பாடுகிறேன் என்று அதுவரையில் பார்த்த பெண்கள் யாரும் முன் வரவில்லை. ஸரஸ்வதி ஒரு தினம் விளையாட்டாக ரகுபதியிடம், “அத்தான்! உனக்குத்தான் வீணை வாசிக்கத் தெரியுமே. சங்கீதமே தெரியாத பெண்ணாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டுவிடேன். பிறகு நீயே பாட்டுக் கற்றுக்கொடுத்துவிடலாம்” என்றாள்.

“ஆமாம். கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைகள் மாமனார் வீட்டில் இருந்து கொண்டு, மேற்படிப்புப் படித்துப் பாஸ் செய்கிற லக்ஷணத்தைப்போலத்தான் இதுவும் இருக்கும்!” என்றாள். அத்தை ஸ்வர்ணம் சிரித்துக் கொண்டே.

“அத்தானுடைய சுபாவம் அப்படி இல்லை அத்தை. அவனுக்கு லட்சியம் ஒன்றுதான் முக்கியம்” என்றாள் ஸரஸ்வதி.

படுக்கையில், பாதி திறந்த விழிகளுடன் பழைய நினைவுகளில் மனத்தை லயிக்க - விட்டிருந்த ரகுபதிக்குப் பளிச்சென ஞாபகம் வந்தது இந்தச் சம்பாஷணை. அதோடு, யார் லட்சியவாதி; அவனா, ஸரஸ்வதியா என்ற கேள்வியும் எழுந்தது. 

எப்படிப் பார்த்தாலும், தன்னைவிட ஒருபடி மேலாகவே கண்டான் அவளை. நல்ல சங்கீத ஞானமும், நிறைந்த சாரீர சம்பத்தும் பெற்றவள் அவள். அழகில் மட்டுந்தான் குறைந்தவளா? தாழம்பூ மேனியும் சுருண்டு, அடர்த்தியாக, அலை பாயும் கூந்தலும் மருண்ட விழிகளும் குளிர்ந்த உதடுகளும் தாமரை மலர் போன்ற கரங்களும் பெற்று அழகியாகத்தான் இருந்தாள். 

அதோடு ‘குடும்பப் பெண்’ என்பதற்கு இலக்கணமாக விளங்குபவள். உஷக்காலத்தில், வெள்ளி முளைத்திருக்கும்போது எழுந்து, முகம் கழுவி, பொட்டிட்டு, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, வீணையுடன் இழையும் மெல்லிய காலில் பாட ஆரம்பித்து விடுவாள் அவள். அவள் பாட்டைக் கேட்ட பிறகுதான் அந்த வீட்டில் மற்றவர்கள் எழுவார்கள்.

எனினும் ஒரே ஒரு குறை அவளிடம். அதுவும், ரகுபதியால் ஏற்பட்ட குறைதான். பால்யத்தில் ரகுபதியின் மாமன் மகளாகிய ஸரஸ்வதியும், அத்தான் ரகுபதியும் ஒன்றாக விளையாடியபோது ரகுபதி விளையாட்டாகப் பின்புறம் வந்து அவள் கால்களை இடறி விட்டபோது ஸரஸ்வதி விழுந்துவிட்டாள். 

சாதாரண விளையாட்டு, வினையாகி ஒரு கால் எலும்பு முறிந்து, நிரந்தரமான ஊனம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் குறை ஸரஸ்வதியின் மனத்திலும் அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. என்னதான் அழகாக இருந்தாலும், என்னதான் சங்கீதம் தெரிந்திருந்தாலும், ஊனம் ஊனந்தானே! 

ரகுபதியும் பெரியவனாகிய பிறகு, தான் தவறுதலாகச் செய்துவிட்டதை நினைத்து வருந்தியிருக்கிறான். “இசைக்கும், கலைக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணித்துவிடுகிறேன் அத்தான். எனக்காக நீ ஒன்றும் வருத்தப்பட வேண்டாம்” என்று ஸரஸ்வதி ரகுபதிக்கு எவ்வளவோ முறைகள் தேறுதல் கூறியிருக்கிறாள்.

ஆனால், ஒவ்வொரு தினமும் ஸரஸ்வதி, உள்ளம் உருகிப் பாடும் போதெல்லாம் ரகுபதி இந்தப் பழைய சம்பவத்தை நினைத்துக் கொண்டு ஏங்குவான். தானே அவளை மணந்து கொண்டு விட்டால் அவளிடம் இருக்கும் குறையைப் பாராட்டாமல் இருக்க முடியும் என்று நினைத்து, அவளிடம் அவன் அதைப் பற்றிப் பிராஸ்தாபித்தபோது, அவள் ஒரு குழந்தையைப்போல் கபடமில்லாமல் சிரித்தாள். 

வெண்கல மணி ஒலிப்பதுபோல் கலகலவென்று சிரித்துவிட்டு, “அத்தான்! பாபம் செய்தவர்கள் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியந்தான். விளையாட்டாக நேர்ந்து விட்டதற்காக உன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ள வேண்டுமா? நாலு பேர் எதிரில் நொண்டிப் பெண்ணை, மனைவி என்று அழைத்துச் செல்ல வேண்டுமா? உனக்கும் எனக்கும் என்றும் இந்தச் சகோதர அன்பே நிலைத்திருக்கட்டும், அத்தான்” என்று பெரிய வேதாந்தியைப்போல் கூறிவிட்டாள் ஸரஸ்வதி. 

இந்தப் பதிலைக் கேட்டு ரகுபதி ஒன்றும் பேச முடியவில்லை. வாதப் பிரதிவாதங்களுக்கு இடமில்லாமல் அவள் அளித்த பதில் ரகுபதியின் தாய் ஸ்வர்ணத்தைக்கூடப் பிரமிக்கச் செய்துவிட்டது. அத்துடன் அவர்கள் அந்த யோசனையைக் கைவிட்டுவிட்டார்கள். 

ரகுபதிக்கு வேறு இடத்திலிருந்து ஜாதகங்கள் வர ஆரம்பித்தன. இரண்டொரு இடங்களுக்குப் போய்ப் பெண் பார்த்தும் வந்தார்கள். இந்தப் பேட்டிப் படலங்களில் ஒன்றுதான் அன்று நடைபெறவிருந்தது. அதற்குத்தான் இத்தனை அமர்க்களமும்.

- தொடரும்


விவாதங்கள் (4)