அத்தியாயம் 1

1. வஸந்த ருதுவின் வைபவம்

திருவல்லிக்கேணிக் கடற்கரையில் மேரி மகாராணியார் பெயர் வழங்கும் பெண்கள் கலாசாலைக்கு எதிரில் விஸ்தாரமாகப் பரவியும் வெண்மணல் தரையில் இரண்டு யௌவனப் புருஷர்கள் அலையின் ஒரமாக இருந்து சம்பாவித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவனுக்கு இருபது, அல்லது, இருபத்தொரு வயது இருக்கலாம். அவன் தெற்குத் திக்கில் கால்களை நீட்டிக் குப்புறப் படுத்து, தலைவரையில் மணலில் படியச்செய்து, இரண்டு முழங் கால்களையும் கீழே ஊன்றி, மார்பையும் முகத்தையும் உயர்த்தி கிழக்கு, வடக்கு, மேற்கு, ஆகிய மூன்று திக்குகளிலும் தனது பார்வையைச் செலுத்தத் தகுந்தபடி உல்லாசமாகச் சயனித்திருந்தான். மற்றவனது வயது சுமார் இருபத்தைந்துக்குக் குறையாது என்றே சொல்ல வேண்டும். அவன், கீழே சயனித்து இருந்தவனுக்கு எதிரில் சுமார் ஒன்றரை கஜ துரத்தில் தெற்கு முகமாக உட்கார்ந்திருந்தான்.

கீழே சயனித்திருந்த விடபுருஷனது வடிவம் அபரஞ்சித தங்கத்தை உருக்கி ஓடவிட்டது போல அழகான சென்னிறமும், இயற்கையான மினுமினுப்பும், யெளவன காலத்தில் புதுத் தன்மையும் வாய்ந்ததாய் இருந்தது. அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் உள்ள ஒவ்வோர் அங்கத்திலும் மிருதுத் தன்மையும், செழுமையும், அழகும் சம்பூர்ணமாக நிறைந்து தோன்றின. அவன் பேசியபோது வாய் மழலை மாறாத குழந்தைகளின் வாய் அழகாகக் கோணுவது போலத் தோன்றியதன்றி, இருபுறங்களிலும் அவனது உருண்டைக் கன்னங்களில் தண்ணீர்ச் சுழல்கள் போன்ற வசீகரமான குழிவுகளை உண்டாக்கியது. உயர்ந்த தலையும், விசாலமான நெற்றியும், பரந்த உருண்டை முகமும், கருத்தடர்ந்த புருவவிற்களும், புத்திக் கூர்மையையும் தீவிர விவேகத்தையும் மின்னலைப் போலப் பளிச்பளிச் என்று வீசி வெளிப்படுத்தும் கருங் கண்களும், முத்துக்கள் போன்ற நிர்மலமான அழகிய பற்களும், பக்குவகால மடந்தையரின் அதரங்கள் போலக் கனிந்து சிவந்து மிருதுவாக இருந்த இதழ்களும், அவனது செவிகளில் நட்சத்திரச் சுடர்கள் போல ஒளி வீசிய வைரக் கடுக்கன்களும் ஒன்றன் அழகை ஒன்று பதினாயிரம் மடங்கு பெருக்கிக் காட்டி, அவனது முகத்திற்கு ஒருவித அபூர்வ வசீகர சக்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தன. அந்த மன்மதபுருஷன் ஏதாகிலும் பேச வேண்டும் என்று மனதில் நினைக்கும் போதே, அவனது சுந்தரவதனத்தில் ஒருவித மந்தஹாலமும், மலர்ச்சியும் முன்னாகத் தோன்றி நின்று, அவனது மனத்தில் எப்போதும் நற்குணமும் அந்தமும் இயற்கையிலேயே பரிபூரணமாக நிறைந்திருக்கின்றன என்பதைத் தெள்ளிதில் காட்டின. அவனது பார்வை கம்பீரப் பார்வை யாகவும், அவனது வார்த்தைகள் அற்பமான விஷயங்களில் கலக்காமல், பெரும் போக்காகவும், கண்ணியமாகவும், மிருதுத் தன்மை நிறைந்ததாகவும், அயலார் விஷயத்தில் ஜீவ காருண்யம், வாத்தியம் முதலிய அருங்குணங்கள் த்வனிப்பனவாகவும் இருந்தன. அவனது சிரத்தில் கரும்பட்டுப் போலத் தோன்றிக் கருத்தடர்ந்து நீண்டு நெளிந்திருந்த வசீகரமான தலை மயிரை அவன் ஒரு சிறிய தேங்காய் அளவு முடிந்து பின் கழுத்தில் விட்டிருந்தது, ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவன் அன்றைய தினமே கூடிவரம் செய்து கொண்டிருந்தவன் ஆகையில், அவனது நடுத்தலையில் குறுக்காகவும் வளைவாகவும் வெட்டிவிடப்பட்டிருந்த கன்றுக்குடுமி தோட்டங்களில் காணப்படும் ஒழுங்கான மருதாணி வேலியைப் போலக் காணப்பட்டது. நெற்றியின் நடுவிற்குச் சிறிது இறக்கமாக, ஒரு தேத்தாங்கொட்டை அகலத்தில் சந்தனப்பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அவன் தனது இடுப்பில் தகதகவென மின்னிய அகன்ற ஜரிகையுள்ள தும்பைப் பூவைப் போல வெளுத்திருந்த பட்டுக்கலந்த ஜரிகை வஸ்திரம் ஒன்றையும், உடம்பில் உயர்ந்த பட்டு ஷர்ட்டையும், அதற்கு மேல் முற்றிலும் ஜரிகையினாலும் சிவப்புப் பட்டினாலும் நெய்யப்பெற்ற உருமாலை ஒன்றையும் அணிந்திருந்தான். நவரத்தினங்கள் இழைத்த சுமார் ஆயிரம் ரூபாய் விலையுள்ள சிறிய கைக் கடிகாரம், வயிரம் இழைத்த தங்கச் சங்கிலியால் அவனது இடதுகை மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்தது. இவனது இரண்டு கைகளிலும், வைரம், வைடூரியம் முதலிய உயர்தரக் கற்கள் குயிற்றிய மோதிரங்கள் பல விரல்களிலும் கானப்பட்டன. அவனது இயற்கைக் கட்டழகும் காந்தியும், செயற்கை அலங்காரமும் ஒன்று சேர்ந்து அவனைக் காணும் ஆண் பெண்பாலார் அனைவரும் மேன்மேலும் அவனை ஆசையோடு கூர்ந்து நோக்கும்படியான ஒருவித அற்புதக் கவர்ச்சியை உண்டாக்கின அன்றி, அவன் ஒரு மகாராஜனது குமாரனோ, அல்லது, யாதாமொரு சமஸ்தானாதிபதியின் பட்டக் குழந்தையோ என்ற எண்ணத்தை உண்டாக்கின.

இத்தகைய சிலாக்கியமான விடபுருஷனுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த மற்றவன் மாநிறமாகவும், அதிக அழகில்லாத சாதாரண வடிவம் உடையவனாகவும், விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணியாதவனாகவும் இருந்தான். ஆனாலும், தீவிர புத்தியும், திடசித்தமும், எதைக் குறித்தும் மளமளவென்று விரைவில் பேசும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான். அன்றைய பகல் முழுதும் தகத்தகாயமாய்க் காய்ந்து அண்டாண்ட பிரம்மாண்டங்களில் எல்லாம் நிறைந்து புழுக்கள், பூச்சிகள், சிசுக்கள், நோயாளிகள் முதலிய எந்த ஜெந்துவினிடத்திலும் தயை தாட்சணியம் இன்றி எல்லோரையும் சமமாகச் சுட்டெரித்துக் கொடுங்கோல் அரசு புரிந்த கதிரவன், இரவு வருவதைக் கருதி, தனது பிரியபத்தியான குளிர்ந்த சந்திரனுக்கு முன் தான் தன்து கோர வடிவத்தைக் காட்டக் கூடாதென்று நினைத்து தனது கொடிய கிரணங்களை எல்லாம் மறைத்து கனிந்த இனிமையான மாம்பழம் போல உருமாறி, பரம சாதுவாய் விளங்கி, தனது மனைவி இருக்கும் வரையில் தான் தனது கொடுமைகளையே காட்டுவதில்லை என்று மஞ்சள் வெயிலான ரீமுகத்தின் மூலமாக உலகுக் கெல்லாம் நற்செய்தி சொல்லி அனுப்பிவிட்டு, மேற்றிசைக் கடலான தனது சப்பிரமஞ்சத்திற்கருகில் நின்று தனது துணைவி வருகிறாளோ என்று பார்ப்பவன் போலத் தோன்றினான். இராக் காலத்தின் சக்கரவர்த்தினி பவனி புறப்படப் போகிறாள் என்று பிரஜைகளுக்குப் பறையறைவிப்பது போல அலைகள் எல்லாம் கொந்தளித்து எழுந்து ஆனந்த வெறிகொண்டு ஓடி வந்து கரையில் மோதி மோதித் திரும்பி எதிர்கொண்டு சென்றன. ராஜாத்தியின் பணிப்பெண் இளந்தென்றல் வடிவமாகத் தோன்றி இனிமையையும் குளிர்ச்சியையும் அள்ளி நாலா பக்கங்களிலும் வீசி எல்லோர்க்கும் அபயஸ்தம் அளிப்பவர் போல வெளிப்பட்டு எங்கும் நிறைந்து போயினர். அன்றைய தினம் பெளர்ணமி திதியாதலால், சம்பூர்ணபிம்ப வடிவமாகத் தாரகைகளின் சக்கரவர்த்தினி, அப்போதே நீராடி சுத்தமாக அலங்கரித்துக் கொண்டு எழுபவள் போல, அமிர்தத்துளிகளை ஜிலிர் ஜிலிரென்று அள்ளி இறைத்துக் கொண்டு எல்லா ஜீவராசிகளையும் நோக்கி சந்தோஷமாக நகைத்த வண்ணம் அதியுல்லாசமாகப் பவனி புறப்படவே, பகல் முழுதும் சூரியனது உக்கிரத்தால் கருகி வெதுப்பப்பட்டுக் கிடந்த ஜீவ ஜெந்துக்களின் மனதில் குதூகலமும், பூரிப்பும், பேரானந்த வெள்ளமும் பொங்கி எழுந்து கரைபுரண்டோட ஆரம்பித்தன.

மேலே விவரிக்கப்பட்ட மணலில் சயனித்திருந்த சுந்தர ரூபன் மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமித்ததையே வியப்போடும் மகிழ்ச்சியோடும் பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரங்கழித்துக் கிழக்கில் திரும்ப, அந்தத் திசையில் இன்பமயமாக எழுந்து நின்ற சந்திரன் அவனது திருஷ்டியில் பட்டது. அவன் மட்டற்ற குதூகலமும் பூரிப்பும் அடைந்து, “அடே கோபால்சாமீ! அதோ கிழக்குப் பக்கம் பாரடா? இப்போது மேற்குத் திக்கில் மறைந்த சூரியனே திரும்பவும் கிழக்குத் திக்கில் வந்துவிட்டது போல இருக்கிறது பார்த்தாயா? இன்று சந்திரபிம்பம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது பார்?” என்றான். அதைக் கேட்ட கோபாலசாமி, “இன்று பெளர்ணமி அல்லவா. அதனால் தான் சந்திரன் பூர்ணவடிவத்தோடு இருக்கிறது. நாமும் இத்தனை வருஷமாக இந்தச் சென்னப் பட்டனத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரையில் நாம் இந்த இடத்துக்கு வராமல் இருந்தது நம்முடைய துரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். இந்த இடம் மோகினி தேவியின் சிங்கார வனம் போல் அல்லவா தோன்றுகிறது. ஆகா! எந்தப் பக்கம் பார்த்தாலும் நேத்திராநந்தமாக இருக்கிறதே! சுவர்க்கலோகம் என்று ஒர் இடம் எங்கேயோ இருக்கிறதென்று சொல்லுகிறார்களே, அது இந்த இடந்தான் என்று நினைக்கிறேன். அதோ பார் மேற்குத் திக்கில் செளக்கு மரங்களே நிறைந்த தோப்புகளும், தெய்வத் தச்சனாகிய மயனால் நிர்மாணிக்கப் பட்டவையோ எனக் காண்போர் பிரமிக்கத்தக்க அற்புதமான மாடமாளிகைகளும் நிறைந்திருப்பதும், கிழக்குத் திக்கில் கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் கடல் சுத்தமாகப் பரவி இருப்பதும், அப்சர ஸ்திரீகளைப் பழித்த அபூர்வ வனப்புடைய யெளவன மங்கையர் பலவித உடைகளிலும் அலங்காரங்களிலும் மேரி மகாராணியார் கலாசாலை மாளிகையில் ஆங்காங்கு புஸ்தகமும் கையுமாக நின்று படித்தும், ஒருவரோடு ஒருவர் உல்லாசமாகப் பேசியும், விளையாடியும் மயில்களைப் போலவும், மான்களைப் போலவும், மாடப்புறாக்களைப் போலவும் காணப்படுவதும் ஒன்று கூடிய இந்த மகா அருமையான காட்சியைப் போல, இந்த லோகத்திலும், வேறே எந்த லோகத்திலும் நாம் காணமுடியாது என்றே நினைக்கிறேன். இந்த இடத்துக்கு வருவோர் மந்திர சக்தியினால் தடைக்கட்டப் பட்டு ஒய்ந்து நிற்கும் பாம்பு போல, இந்த இடத்தின் காந்த சக்தியில் லயித்து அப்படியே பிரம்மாநந்த நிலையில் உட்கார்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். அதோ அந்தப் பக்கம் திரும்பிப் பார் அனாதைகளான கைம்பெண்கள் வசிப்பதற்கும், கல்வி பயில்வதற்கும் உபயோகப்படுத்தப்படும் மாளிகை எப்படி இருக்கிறது பார்த்தாயா? அது பழைய காலத்தில் இருந்த நம் தேசத்து அரசர்களுடைய கோட்டைகள் போல் அல்லவா மகா புதுமையாக இருக்கிறது. கந்தசாமி நான் எத்தனையோ தடவை உன்னைக் கூப்பிட்டும், நீ வரமாட்டேன் என்று சொல்லி, வேண்டா வெறுப்பாக இன்று வந்தாயே! இந்த இடம் எப்படி இருக்கிறது பார்த்தாயா?” என்றான்.

அதைக் கேட்ட கந்தசாமி என்ற கட்டழகன் மந்தஹாலம் தவழ்ந்த முகத்தோடு சந்தோஷமாகப் பேசத் தொடங்கி, “ஆம்: வாஸ்தவம் தான். இதுவரையில் இந்த இடத்தை நாம் பார்க்காமல் போனோமே என்ற விசனம் எனக்கும் உண்டாகிறது. ஆனால் என் மனசில் ஒரு சந்தேகமும் பிறக்கிறது. நம்முடைய பெண் மக்கள் இருந்து படிப்பதற்கு இவ்வளவு பெரிய பட்டனத்தில் ஊருக்குள்ளாகவே இந்தத் துரைத்தனத்தாருக்கு ஒரு நல்ல இடம் அகப்படவில்லையா? இப்படிப்பட்ட தனிக்காட்டில், இரண்டு பெரிய ஸ்மசானங்களுக்கு நடுவில்தானா கொண்டுவந்து இவ்வளவு முக்கியமான கலாசாலையை ஸ்தாபிக்க வேண்டும்? இன்று பெளர்ணமி ஆதலால், நிலவு பால் போல இருக்கிறது. எல்லாம் பார்ப்பதற்கு அற்புதமாகவும் மனசை மோகிக்கச் செய்வதாகவும் இருக்கிறது. இருளே மயமாக இருக்கும் அமாவாசை காலமாக இருந்தால், இந்த மாளிகைகளுக்குள்ளிருக்கும் நமது பெண்மணிகள் இராக்காலங்களில் வெளியில் தலையை நீட்டவும் துணிவார்களா? அதுவுமன்றி, இரண்டு திக்குகளில் ஸ்மசானங்கள் இருப்பது நம் குழந்தைகளுக்குத் தெரியாமல் இருக்காது. அப்படி இருக்க, எப்படிப்பட்ட துணிகரமான நெஞ்சுடையவர்களும் இருளில் இந்த இடத்தில் இருக்க அஞ்சுவார்கள் என்றே நினைக்கிறேன். வெள்ளைக்கார துரைத்தனத்தார் முட்டாள்கள் அல்ல. நான் சொன்ன இந்த ஆட்சேபம் அவர்களுடைய மனசில் பட்டிருக்காதென்று நாம் நினைப்பதற்கில்லை. வேறே ஏதாவது முக்கியமான நோக்கத்தோடு தான் அவர்கள் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் இவ்விடத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவர்கள் இன்னொரு காரியம் செய்திருந்தால், அது ஒருவிதத்தில் நலமாக இருந்திருக்கும். இந்தக் கலாசாலைக் கட்டிடத்தின் முன் பக்கத்திலும் அதைச்சுற்றி நாற்புறங்களிலும், இப்போது பொட்டல் வெளியாயிருக்கும் இடத்தில் ஏராளமான மரங்களையும் பூச்செடிகளையும் அமைத்து அபிவிருத்தி செய்து, அதை ஒரு பெருத்த பூஞ்சோலையாகச் செய்து இடையிடையில் விளக்கு ஸ்தம்பங்களை நட்டு இருள் காலங்களில் விளக்குகளைக் கொளுத்திவிட்டால், அந்த இடத்தின் தனிமையும் பயங்கரத் தன்மையும் குறைந்து போகும் என்று நினைக்கிறேன்” என்றான்.

- தொடரும்


விவாதங்கள் (4)