சிறுகதை
அது ஒரு பழைய ஹவுசிங் போர்டு. சுவர்களில் சுண்ணாம்பு உரிந்து, வெளிப்புறங்களில் பல இடங்களில் பாசி படர்ந்திருந்தது. சுற்றியிருந்த எந்தச் சாலையும் ஒழுங்காக இல்லை. இருசக்கர வாகனங்களைத் தவிர வேறு எதுவும் சுலபமாகப் போக முடியாதபடி வாகனங்கள் மற்றும் பொருட்களால் சாலை பாதிக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தது. காலை விடிந்தது முதல் இரவு அடங்கும் வரை ஏதாவது சத்தமும் இரைச்சலும் இருந்துகொண்டேயிருக்கும். மாலையில் சிறுவர்களின் விளையாட்டுச் சத்தம் அதை இன்னும் அதிகப்படுத்தும்.
பி-பிளாக்கின் முதல் மாடியில் இடப்புறம் மேலே ஏறும் படிக்கட்டுகளை ஒட்டியிருந்தது சுசீலாவின் வீடு. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. வழக்கத்தைவிட இரைச்சல் அதிகமாகவே இருந்தது. அதற்கு நேரெதிராக வீட்டில் யாருமில்லையோ என்று எண்ணும்படி சுசீலாவின் வீடு நிசப்தமாக இருந்தது. ஆனால், சுசீலாவும் அவள் கணவன் நகுலனும் வீட்டின் உள்ளேதான் இருந்தனர். இருவரின் மூச்சு சத்தம்கூட அடுத்தவர்களுக்குக் கேட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களைப் போல அமைதியாக இருந்தனர். சுசீலா படுக்கையறையிலும் அவள் கணவன் நகுலன் வரவேற்பு அறையிலும் படுத்திருந்தனர்.
சுசீலா தலையைத் திருப்பி நேரம் பார்த்தாள். எட்டாகியிருந்தது. மெல்ல எழுந்தாள். அவளுக்கு எழுந்து செல்லவே விருப்பமில்லை. சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் அந்த வார இறுதியில் வரும் ஞாயிற்றுக்காக ஏங்கிக்கொண்டிருப்பவள். ஆனால், ஒரு ஞாயிற்றைக் கூட அவள் எண்ணம் போல் அனுபவித்ததில்லை. நல்லவேளை குழந்தைகள் இல்லை என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வாள். எழுந்து சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். எதிரில் இருந்த சுவரில் அவளும் நகுலனும் சிரித்துக்கொண்டிருந்த புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. முதல் ஒரு வருடம் வேலைக்குப் போகாமல்தான் இருந்தாள். எந்தக் கடனும் இல்லாததால், தனியார் நிறுவனத்தில் நகுலனுக்கு வரும் வருமானமே போதுமானதாக இருந்தது. கொஞ்சம் பொறுமையாகக் குழந்தை பெற்றுக்கொள்ளலாமென்று முடிவு செய்து இருவருமே மகிழ்ச்சியாக இருந்தனர்.
சுசீலா பெருமூச்சொன்றை விட்டபடி எழுந்து சென்று முகம் கழுவிக்கொண்டு வந்து வெளியே எட்டிப்பார்த்தாள். நகுலன் படுத்தபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மெல்லச் சமையலறைக்குள் நுழைந்தாள். சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதும் நகுலன் மெல்ல எழுந்து கழிவறைக்குள் நுழைந்தான். வெளியே வந்த போது அவன் படுத்திருந்த இடத்தில் அவனுக்காக தேநீர் காத்திருந்தது. அதை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் சென்று வேடிக்கை பார்த்தவாறு அதை மெல்ல உறிஞ்சினான். கீழே சுசீலா கையில் கூடையுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தாள். நகுலன் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் சரியாகப் பேசி எத்தனை நாட்கள் ஆனது என்று யோசித்தான். அவனால் அதை நினைவுகளிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை. அவள் கண்களிலிருந்து மறைந்திருந்தாள். இதெல்லாம் எப்போது ஆரம்பித்தது என்று அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. அவன் அதைச் செய்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான். ஆனால், எப்படி செய்யாமல் இருந்திருக்க முடியும் என்று அவனே பதிலாக தனக்குள் கேட்டுக்கொள்வான். அவனால் வங்கியில் அந்தக் கடனை வாங்கி அவள் அப்பாவைக் காப்பாற்றியிருக்க முடியுமென்ற சூழலில் எவ்வாறு அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியும். ஆனால், இப்போதெல்லாம் அதைச் செய்யாமல் இருந்திருக்கலாமோ என்றுதான் அவனுக்கு அடிக்கடி தோன்றுகிறது.
சுசீலா நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று இறைச்சி வாங்கினாள். நகுலன் வீட்டில் நன்றாகச் சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிறதென்று அவளுக்கு முந்தைய இரவு திடீரென்று தோன்றியது. வாங்க வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் மனதில் எண்ணங்கள் இலக்கில்லாமல் பாய்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருந்தன. அவன் அதைச் செய்யாமலேயே இருந்திருக்கலாம் என்று அவள் இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். எல்லாம் செய்தும் அப்பா பிழைக்கவில்லை. அன்பாக இருந்தவனும் விலகிக்கொண்டிருக்கிறான். முதல் மாத தவணையைக் கட்டிமுடித்துவிட்டு சம்பளத்தின் மிச்சத்தை கணக்குப் பார்த்த போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தாங்கள் எப்படிப்பட்ட சுழலில் சிக்கியிருக்கிறோமென்று. சுசீலாதான் முதலில், “நான் வேணா வேலைக்குப் போகவா?” என்றாள். நகுலன் அவளைத் தடுக்கவில்லை. அவள் படித்து முடித்ததிலிருந்து எந்த வேலைக்கும் சென்றவளில்லை. முன் அனுபவம் இல்லாததால் நகுலனே தன் நண்பர்களிடம் சொல்லி வேலை வாங்கிக்கொடுத்தான்.
சுசீலா கதவைத் திறந்துகொண்டு உள்ளே வரும் சத்தம் கேட்டு நகுலன் மெல்ல அறைக்குள் நுழைந்து கட்டிலில் படுத்துக்கொண்டான். சுசீலா கடைக்குப் போகும் முன் அவள் மாற்றிய இரவு உடை அவன் அருகில் சுருண்டு கிடந்தது. அவனையும் அறியாமல் அவன் விரல்கள் அதை வருடின. எதற்காக இப்படி அவஸ்தையில் இருவரும் சிக்கிக்கொண்டு தவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு தானே காரணமென்னும் குற்றவுணர்வு அவனை இன்னும் இம்சித்தது.
*****
சுசிலா ஒரு லோன் ஏஜென்சியில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அவர்களின் டேட்டா பேஸில் இருக்கும் எண்களுக்கு அழைத்து லோன் வேண்டுமா, ஏற்கனவே இருக்கும் லோனில் ஏதாவது கூடுதலாக வேண்டுமா என்று கேட்பதுதான் வேலை. நகுலன் லோன் வாங்கி சரியாக மூன்று மாதம் கழித்து அவன் எண்ணிற்குப் புதிய எண்ணிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. அப்போது அவன் பெருநகர நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தான். அழைப்பில் புதிய எண்ணைப் பார்த்ததும், யாரோ எவரோ என்று தோன்ற, வண்டியை ஓரம்கட்டி அந்த எண்ணிற்கு மீண்டும் அழைத்தான். பெண் குரல் ஒன்று பிரபல வங்கியிலிருந்து பேசுவதாகச் சொல்லி, ‘லோன் வேண்டுமா?’ என்றது. இவன் மிக மென்மையாக ‘வேண்டாம்’ என்றான். அவனுக்குச் சட்டென தன் மனைவியின் ஞாபகம் வந்தது. தனக்குள் மெல்ல சிரித்துக் கொண்டான். அதன் பிறகு அவனுக்கு அதுபோல் வரும் அழைப்புகளுக்கு மிகுந்த கனிவோடு பதிலளிக்கத் தொடங்கினான்.
சுசீலா வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இருவருக்குமான நெருக்கம் குறையத் தொடங்கியது. நகுலனுக்குச் சனி ஞாயிறு விடுமுறை. சுசீலாவிற்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை. அதுவும் வார நாட்களின் அலுப்பிலேயே கழிந்துவிடும். இருவருக்குமே அந்த விலகல் நிகழ்ந்துகொண்டிருப்பது தெரியத் தொடங்கியிருந்தது.
வேலைநாளின் ஒரு பகல் பொழுது திடீரென்று நகுலனுக்கு சுசீலாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன, இந்த நேரத்துல?”
“உடம்பு முடியல. வீட்டுக்கு வந்துட்டேன்.”
“என்ன ஆச்சி?”
“உன்னால இப்ப வரமுடியுமா?”
“இப்பவா?”
“ம்.”
“செரி, வரேன்.”
அவ்வளவு சீக்கிரத்தில் நகுலனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை. எல்லாம் முடிந்து அவன் அலுவலகத்தை விட்டு வெளியேறும் போது அவன் உச்சபட்ச கோபத்திலிருந்தான். மேனேஜர் கேட்டவை, திட்டியவை என அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக சுசீலாவின் மீது திரும்பியது. “முடியலனா மாத்திரையப் போட்டுக்கிட்டு படுக்க வேண்டியதுதானே. வரத்தானே போறேன்” என்று மனதிற்குள் அவளை வசைபாடிக்கொண்டே வண்டியை எடுத்தான். சரியாக அதே நேரம் ஓர் அழைப்பு. “சார், லோன் வேணுமா?” சற்று எரிச்சலாகவே பதிலளித்துவிட்டு வண்டியை எடுத்தான். வீடு வந்து சேர்ந்தபோது சுசீலா நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். வேகமாக உள்ளே வந்தவன் அவள் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் எழுப்பலாமா, வேண்டாமா என்று சற்று தயங்கி, ‘பின் எதற்குத் தன்னை வரச் சொல்ல வேண்டும்; இத்தனை திட்டு வாங்கிக்கொண்டு தான் ஏன் வரவேண்டும்’ என்று தோன்ற அவள் அருகில் சென்று மெல்ல எழுப்பினான்.
“சுசி,சுசி!”
அவள் மெல்லக் கண்களைத் திறக்க முயன்றாள். திறக்க முடியவில்லை. இவனைப் பார்த்ததும் மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். அவன், அவள் அருகில் உட்கார்ந்தான். உள்ளுக்குள் இருந்த கோபத்தை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன், அவளாகச் சொல்லுவாள் என்று காத்திருந்தான். அவள் அமைதியாகவே இருந்தாள். ஆனால், சோர்ந்திருந்தாள் என்பது அவள் உடலசைவிலேயே தெரிந்தது.
அவன் மீண்டும், “என்ன சுசி?” என்றான்.
“இல்ல, வந்து.”
“என்ன?”
“டேட் தள்ளிப் போயிடுச்சி. கிட் வாங்கி செக் பண்ணேன். கன்பார்ம்.”
அவன் ஒருநொடி மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் சென்று சட்டென அடங்கினான். எண்ணங்கள், திட்டங்கள் மகிழ்ச்சியைச் சற்று தள்ளியிருக்கும்படி செய்தது. “என்ன பண்ணலாம்?” என்றான்.
“தெரில.”
“கொஞ்ச நாள் போகட்டுமே!”
அவள் எதுவும் சொல்லவில்லை.
“ஏன் சொல்றேன்னா...”
“புரியுது. நாளைக்கு மட்டும் லீவ் போட முடியுமா”
“இப்ப அனுப்பவே அவன் பெரிய பிரச்சினை பண்ணான். கேட்டுப் பாக்கறேன்” என்று போனை எடுத்துக்கொண்டு வெளியேறினான். சில நிமிடங்கள் கழித்துச் சோர்ந்துபோய் கோபமாக வந்தான்.
“என்ன ஆச்சி?”
அவன் பதிலேதும் சொல்லவில்லை.
“சரி, டீ போடறேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள்.
அவள் டீ கொண்டுவரும்போது அவனுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. அவன் எடுத்து, “ஹலோ” என்றான்.
“சார், **** பாங்க்லருந்து” என்று எதிர் முனை சொல்ல ஆரம்பித்ததும் அவன் வாயில் இருந்து இதுவரை அவள் கேட்டேயிராத வார்த்தைகளை அவன் சரளமாகப் பொழிந்தான். ஆத்திரத்தில் அவன் குரலின் ஒலி அறையெங்கும் எதிரொலித்தது. அவள் ஒருநொடி அஞ்சி நடுங்கினாள். எதிர்முனையில் யார் என்று அவன் பேசியதிலிருந்தே அவளுக்குப் புரிந்தது. அவள் எதுவும் பேசவில்லை. அவன் அருகில் டீ கிளாசை வைத்துவிட்டு வெளியே சென்று பால்கனியின் நின்றுகொண்டாள். அவளையும் அறியாமல் அவள் கண்களில் நீர் வழிந்த வண்ணம் இருந்தது. அவளும் இப்போது திட்டு வாங்கிய பெண்ணைப் போல அதே வேலையில் இருப்பவள். அவன் உண்மையில் யாரோ ஒரு பெண்ணைத் திட்டியிருந்தாலும் அவள் தன்னைத் திட்டியதைப் போலவே உணர்ந்தாள். உண்மையில் அவளுக்கும் தினம் இப்படி ஏதாவது ஒன்றிரண்டு சம்பவங்கள் நடக்கும். ஆனால், அவள் இதுவரை இதுபோன்ற பேச்சைக் கேட்டதில்லை. அதன்பிறகு சுசீலா, நகுலனிடமிருந்து மனதளவில் மெல்ல விலக ஆரம்பித்திருந்தாள்.
சுசீலா தன்னிடம் சரியாகப் பேசுவதில்லை. தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்று நகுலனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அதற்கான காரணமாக அவன், குழந்தை கலைக்கப்பட்டதாக இருக்கலாமென்று நினைத்திருந்தான்.
அவனுக்குத் தொடர்ந்து வங்கி அழைப்புகள் வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால், அவன் முன்பு போல் யாரிடமும் கனிவாகப் பதிலளிப்பதில்லை. சுசீலா ஒருமுறை மெல்ல அவனிடம் அதைப் பற்றி பேச்சை எடுத்தாள்.
“கொஞ்சம் மெதுவாகத்தான் பதில் சொல்லலாம்ல.”
“ஒருவாட்டி ரெண்டுவாட்டினா பரவாயில்ல, ஓயாமயா? எத்தன வாட்டி இதுங்கலால நான் ரோட்டுல விழ இருந்தேன் தெரியுமா. இதுங்கலாம் சோறுதான் திங்குதுங்கலா..” என்று சொல்ல ஆரம்பித்த நொடி சுசீலா சாப்பாட்டை வாயருகே கொண்டு சென்று, அவன் அந்த வார்த்தையைச் சொல்லும் போது நிறுத்தி அவனை முறைத்தாள். அவனுக்கும் சட்டென சூழ்நிலை புரிந்து, “ஏய் சுசி, நான் உன்ன சொல்லல” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவள் எழுந்து சென்று கையை கழுவிவிட்டு அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். அறைக்குள் அவளுடைய விசும்பல் சத்தம் வெளியே நகுலனுக்கு நன்றாகக் கேட்டது.
அவர்கள் விரிசல் மெல்ல மெல்ல அதிகரிக்க அவர்கள் இருவருக்குமிடையில் சப்தங்கள் குறையத் தொடங்கின. அந்த வீடு மெல்ல மெல்ல மௌனத்தில் மூழ்க ஆரம்பித்தது.
அவளுக்கு எப்போதாவது தன்னிடம் கோபமாகப் பேசுபவர்களின் குரல்கள் தன் கணவனின் குரலைப் போலத் தோன்ற ஆரம்பித்தது. அன்று அவர்களுக்குள் எதுவுமே நடக்காமலிருந்திருந்தாலும்கூட ஏதோ அவனிடம் பெரிய சண்டை போட்ட மனநிலையிலேயே அவள் தினம் தினம் இருந்தாள்.
சுசீலாவின் இந்த நடவடிக்கை நகுலனை மிகவும் பாதித்தது. அவனுக்கு வரும் அழைப்புகளில் கேட்கும் அனைத்துக் குரல்களிலும் அவனுக்கு சுசீலா தெரிந்தாள். இருவரும் வீட்டினுள் ஒருவர் குரலை ஒருவர் கேட்கக் கூடாது என்று விரும்பினர். இது எங்கேதான் போய் முடியுமென்று இருவருக்குமே தெரியவில்லை. இருவரும் யாராவது இதைத் தீர்த்து வைக்கக் கூடாதா என்று உண்மையில் ஏங்கினர்.
*****
“ஏங்க இதெல்லாம் ஒரு பிரச்சினையா? எவ்வளவோ ஆப் இருக்கு, இதெல்லாம் வந்தா எடுக்கறதுக்கு முன்னாடியே தெரியற மாதிரி. உடனே கட் பண்ணிட்டு போக வேண்டியதுதானே?”
“ஏங்க, இந்த ஒரு வேலைதான் வேலையா, இந்த வேலைதான் பிரச்சினைனா வேற எதாவது வேலை பாத்துக்க வேண்டியதுதானே. என்னமோ இதுக்குப்போயி” எனப் பல யோசனைகளும் அறிவுரைகளும் இருவருக்குமே வந்துகொண்டுதான் இருந்தன.
யாரோ முகம் தெரியாதவர்களின் குரல்களுக்காக ஏன் இவ்வளவு அவஸ்தைப் படவேண்டும் என நகுலனுக்குத் தோன்றியது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், சுசீலா ஒரு முடிவெடுத்திருந்தாள்.
****
“சாப்பிடலாம்” என்ற குரல் கேட்டு நகுலன் சுயநினைவுக்கு வந்தான். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுசீலாவிடமிருந்து ஓர் அழைப்பு. உண்மையில் அவன் உள்ளுக்குள் இதற்கு ஏங்கிக்கொண்டுதான் இருந்தான். அவனுக்குள்ளிருந்த அகங்காரம் அவனை இத்தனை நாட்கள் தடுத்திருந்தது. சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தான். சுசீலா வெளியே ஒவ்வொன்றாக எடுத்து வைக்கும் சத்தம் கேட்டது. இப்போது எழுந்து வெளியே சென்று அவளுடன் சாப்பிடப் போகிறோமா? இல்லை, இப்படியே படுத்திருக்கப் போகிறோமா என்ற இந்தச் சிறிய விஷயத்திலேயே தன் குடும்ப வாழ்க்கையின் அடுத்தகட்டம் தீர்மானிக்கப்பட போகிறதென்று அவனுக்குத் தோன்றியது. மெல்ல எழுந்து வெளியே சென்றான். அவள் இரண்டு தட்டுக்களை வைத்து சாதம் போட்டுக்கொண்டிருந்தாள். தான் நிச்சயம் எழுந்து வருவேன் என்று அவள் எப்படி நம்பினாள் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மெல்ல உட்கார்ந்து கொண்டான். அவள் சாதத்தில் குழம்பை ஊற்றினாள். அவள், அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனால் தலையை உயர்த்தி அவளைப் பார்க்க முடியவில்லை. குற்றவுணர்வு அவன் தலையை அழுத்தியது. அந்த நொடி தவறு தன்மீதுதான் என்று உணர்ந்தான். மெல்ல அவளைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்தவள், அவனிடம், “நான் வேற வேலைக்கு போகலாம்னு இருக்கேன்” என்றாள்.
“ஏன்?”
“பிடிக்கல.”
“ம். நான் பாக்கவா?”
“வேணாம், நானே பாத்துக்கறேன்.”
“ம். நீ சாப்பிடல?”
அவள் சாப்பிடத் தொடங்கினாள்.
விவாதங்கள் (10)
- Chandra Loganathan
super super story.
0 likes - Nandhini Nandhini
super story.❤️❤️❤️
1 likes - Thangapandi
Arumai Arumai Arumai Arumai Arumai arumai
0 likes - Thangapandi
arumai
0 likes - Jeni Jenifer
நாள் கணக்கில் நீண்டதே இல்லை இந்த 27 வருடங்களில் அதிக பட்சமாக 2 முறை மறுநாள் வரை இருந்தது என் நினைக்கிறேன். ஆளுக்கு ஒருமுறை முதலில் பேசினோம் மூன்றாம் முறை இன்னும் இல்லை. சிறு சிறு ஊடல்கள் மட்டுமே நிமிடங்களில் முடிந்து விடும்
0 likes - Vasant Ravee
superb and touching...the end is really meaningful... well done writer...
1 likes - Deiva Meyyappan
realistic story
1 likes - Sithiga Kader
thavaru yar meedu irukkiratho avar sorry signal problem solved
1 likes - radhika raj
கணவர் தான்
1 likes - Srinivasan Subramaniam
கணவன் தானே முதலில் சமாதான தூது அனுப்ப வேண்டும் ஏன் என்றால் ஒரு ஆணை நம்பி அடுத்த வீட்டு பெண் வந்து கணவனை நம்பி இருப்பதால் முதலில் கணவன் தான் பேசி சமாதான மாக வேண்டும்.
2 likes