அத்தியாயம் 1
“ஆயா, தானா சாகுற மாதிரி ஏதாச்சும் செய்ய முடியுமா?”
வீட்டிலேயே முதன்முதலில், எனக்குத்தான் அந்தக் கொடிய எண்ணம் உதயமானது. என் மீது எனக்கே கடுமையான விமர்சனமும் பிறந்தது. இப்படியான யோசனையை எல்லாம் எப்படி அனுமதிக்க முடிகிறது? ஒருவேளை, கூடுதலான வெளிப்பழக்கமும் வாசிப்புப் பழக்கமும் ஏற்படுத்திய பாதிப்பா! சாதாரணமாக ஒரு மூட்டைப் பூச்சியைக் கொல்வதில்கூட, நேரடியாய் விரலைப் பிரயோகிக்கத் தயங்கி, தம்ளரில் தண்ணீர் பிடித்து, அதற்குள் அதை மூழ்கச் செய்து, நாலைந்து தெரு தள்ளி ஆழமான ஒரு சாக்கடையைத் தேடிச்சென்று கொட்டிவிட்டு வருகிற அந்தக் கோழை(?) மனசு எங்கே ஒளிந்துகொண்டது. ஒருவேளை இது அதன் மறுபக்கமோ!”
ஆயாவின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்காக உதயனோடு ஆஸ்பத்திரிக்குப் போனபோதுதான், அதுவும் அங்கே ஸ்டெச்சரில் ஒடுங்கிப்போயிருந்த ஒரு நோயாளியை மயக்க நிலையில் கண்ட நேரத்தில்தான், பறவை எச்சமாய் சட்டென மனதில் விழுந்து படர்ந்தது அந்த எண்ணம்.
உடனே அதனை இருப்பு வைக்காமல் வார்த்தைகளை இடம் மாற்றி உதயனிடம் சொல்லிப் பார்த்தேன். “பேசாம ஆயா செத்தாக்கூட நல்லது உதயன்.”
“அதுக்குக்கூட டாக்டர்கிட்ட யோசன கேக்கலாம்ங்கறீங்களா?” என்று அவரும் தாமதிக்காமல் கேட்டதில், அதற்கு மேலும் என்னால் அந்தப் பிரச்சினையில் அரிதாரம் பூச முடியவில்லை.
“நீங்க வீட்ல ஆயாவப் பாத்தீங்கன்னா, உங்களுக்கே தோணும் உதயன். நம்ம கஷ்டம்ங்கறது வேற. ஆனா, ஆயா படுற அவஸ்தயப் பாக்குறப்ப, யாருக்கும் வேற மாதிரி யோசிக்கவே வராது” என்றேன்.
நான் சொன்னதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினார்.
‘ஆயா மேல் என்னைவிடப் பற்று உள்ளவர் யாருமில்லை’ என்பது என் முடிவு. அம்மாவைப் பெற்றவர். அம்மா அவரை ஆயா என்றுதான் கூப்பிடும். ஏதோ ஒரு பழக்கத்தில் நானும், தம்பி தங்கச்சியும் பாட்டியை ஆயா என்று கூப்பிட்டுப் பழக்கமாகிப் போனது. இப்போது தெருவில் எல்லோருக்குமே அது ஆயாதான்.
ஆயாவுக்கு அம்மா ஒரே பிள்ளை என்பதால், அவரது அந்திமக்கால இருப்பு எங்கள் வீட்டிலேயே என்றாகிவிட்டது. தாத்தா போய்ச் சேர்ந்த பிறகு, ஆயாவை ஒத்தையில் விட எங்களுக்கும் மனமில்லை. ஆயாவின் சாத்வீகமான பழக்கமும், வார்த்தைகளின் உச்சரிப்பில் ஊறித் ததும்பும் குழைவும், அன்பும் எவரிடத்தும் காணக்கிடைக்காத ஒன்று.
தாத்தாவின் மறைவிற்குப் பிறகு, சிலநாள் தனிமை மறக்க இங்கே இருக்கட்டும் என்றுதான், வீரபாண்டியிலிருந்து ஆயாவை அப்பா அழைத்துவந்தார். பிற்பாடு, அது பேரன், பேத்திகளிடத்தில் கரைந்து நிற்பது கண்டு, “ஊர்ல போய் என்னா செய்யப்போறீக?” என்ற கேள்விக்கு, “என்னா செய்யப் போறேன்...” என்று அப்பாவின் கேள்வியையே பதிலாக்கியதோடு, ஊரில் இருந்த ‘ஆஸ்தி, பாஸ்தி’ எல்லாவற்றையும், அந்த நிமிடமே அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, வீட்டின் வாசலில் இருந்த சிறிய திண்ணையில், ஒரு மறைப்பை ஏற்படுத்தி உட்கார்ந்து கொண்டது.
இரண்டு எருமை மாடுகள், ஒரு கன்றுக்குட்டி, பித்தளைப் பாத்திரங்கள், செம்புப்பானை மற்றும் வெங்கல-ஈயப் பாத்திரங்கள், தனது தாலிக்கொடி, தங்கச் சரடு, காதுக்கொப்பு… என அனைத்தையும் அம்மாவிடம் கொடுத்துவிட்டது. தண்டட்டி இல்லாமல் பார்க்க எங்களுக்கும் விருப்பமில்லை. காதில் ஊசலாடும் தண்டட்டியின் அழகே, ஆயாவுக்குத் தனி தேஜசைக் கொடுத்தது. ஆயா தனது சொந்த ஊரில் இருக்கும்போது, வெற்றிலை போடுவதும் என்விஎஸ் பட்டணம் பொடி உபயோகிப்பதுமான பழக்கத்தை வைத்திருந்தது. எங்களோடு வந்து சேர்ந்த நாளிலிருந்து பித்தளையால் செய்யப்பட்டிருந்த வெத்திலைப் பெட்டியை, மற்ற பொருட்களோடு சேர்த்து அம்மாவிடம் தந்துவிட்டது.
‘இந்த மூக்குப்பொடிச் சனியனத்தே விட முடியல... விட்டா தடுமம் புடுச்சு, மண்டையிடிக்கிது. இது, கட்ட போற நாள்லதே கழியும்போல...’ என்று ஓசிப்பொடி கேட்போரிடம் சொல்லிக்கொள்ளும்.
‘ஆமா...மா.. பெத்த புள்ளயாவே இருந்தாலும், பேச்சுப் போக்குல ஒரு சொல்லு வந்துரக் கூடாதுல்ல...’ கூடிப் பேசும் கிழவிகள் ஒத்துப் பாடுவார்கள்.
‘அப்படியெல்லா இல்ல மச்சி...’ ஆயா யாரையும் சட்டென முறை வைத்து அழைத்துவிடும். ‘பெத்த மககூட வெத்தல வேணுமா ஆயானு கேக்காதப்ப, இவுக அப்பா..’ எங்களைத் தொட்டுச் சொல்லும், ‘சந்தைக்குப் போனாருனா, பொடி டப்பாவும் தூள் பாக்கும் பொட்டணங்கட்டி வாங்கீட்டு வருவாரு...’
‘மருமகனுக்கு மாமியா மேல அம்புட்டுப் பிரியம்.’
‘ஒரு மருவாததே.’ ஆளாளுக்குச் சொல்ல ஆயா வெக்கப்படும்.
‘அதனாலதே. படிப்படியா வெத்தலய விட்டுத் தொலச்சாச்சு. இந்தப் பொடிச் சனியனயும் தொலச்சு விட்டுட்டா...’
***
ஆயா எங்கள் வீட்டுக்கு வந்தபோது நான் – தனம் – சரவணன் மூன்று பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போய்க் கொண்டிருந்தோம். இனிமேல், எந்த ஒரு லீவு நாளிலும், ஆயா ஊருக்குப் போக முடியாதே என்கிற வருத்தம் இருந்தது. ஆனால், அதையெல்லாம் மறக்கச் செய்யுமளவு, ஆயாவின் வாஞ்சை எங்களை ஆக்ரமித்துவிட்டது.
ரவிக்கை அணியாத தேகம். தோள்களில், புஜத்தில் துவங்கி கைவிரல்களின் புறப்பகுதி முழுவதும், இரண்டு கைகளிலும், படங்களும், புள்ளிக் கோலங்களுமாய்ப் பச்சை குத்தி இருக்கும். குதிரை, மான், சிங்கம், நந்தி, காளை மாடு, தேள், மயில் என்று விதவிதமாய் வரையப்பட்டிருக்கும்.
‘எதுக்கு ஆயா இவ்வளோ படம். குளிக்கும்போது இது அழியாதா...’ என்று தனம், பள்ளிக்கூட அழி ரப்பரை எடுத்து நன்றாக அழுத்தி அழுத்திப் பார்த்தது.
அந்த நேரத்தில் தனத்தின் செய்கைக்கு ஒத்துழைத்தது ஆயா. ஆயாவின் உடம்பில் வரைந்திருக்கும் படம் அழியாது என்ற நம்பிக்கைக்குத் தனம் வந்த பிறகே, தனத்தை அள்ளிக் கொஞ்சி மடியில் உட்கார வைத்துப் பதில் சொன்னது. ‘இது அழியாது ராசாத்தி... எரிக்கலம் பால் தொட்டு, மலக்குறத்தி வந்து குத்துன பச்ச…’
‘இது எதுக்கு ஆயா...’ நான் கேட்டதாக ஞாபகம்.
‘எதுக்குன்னா… ஆயா செத்த பிறகு செவலோகம் போவேன்ல... அங்க... நம்மளப் படச்ச கடவுளு, ‘பூமிலருந்து எனக்கு என்னா கொண்டுக்கிட்டு வந்துருக்கே’ன்னு கேப்பாரு. ஆரும் கைச்செம எடுத்துப் போக முடியாதுல்ல... அதால, ‘இந்தாக் கடவுளே, சிங்கம்... இந்தா புலி... இதோ மயிலு...’ன்னு வகவகையா எறக்கிவிடலாம்ல. அதுக்கத்தே...’
ஆயா சொல்லச் சொல்ல கண்களில், சிவலோகம் படமாய் விரியும். ஆயாவும் சிவனும் பேசிச் சிரிப்பதும், அவர்களைச் சுற்றிலும் பல தெங்வங்களும் அரக்கர் படைகளும் – நாரதர், விநாயகர் என பல முனிவர்களும், கையில் வாளும் கேடயமுமாய் உலாவரும், புகைபுகையாய் வெண்மேகங்கள் பறந்து திரிவதும், சில வேளைகளில் அதன் குளுமையைக்கூட உணரவும் முடியும்.
‘ஆயா... அப்ப நிய்யி நாளைக்கி செத்துப் போயிருவியா?’ கடைக்குட்டியாயிருந்த சரவணன் கேட்டான். அவனும் ஆயாவின் மடியில் உட்கார்ந்து, ஆயாவின் நாடியைத் தன்பக்கம் திருப்பித்தான் பேசுவான். அப்படித் திருப்புகிறபோது, காதுகளில் தொங்கும் தண்டட்டி அவனது கையில் இடிக்கும். ஓரோர் சமயம் சரவணன் தண்டட்டியிலேயே கவனமாய் இருப்பான். அவனது கண்ணுக்கு, அது ஏதோ ஒரு விளையாட்டுப் பொருளாய்த் தென்படும் போலிருக்கிறது. ஆயாவின் மீது ஊர்ந்து கொண்டு இருப்பவன், திடீரெனப் பாய்ந்து, மாங்காய் பறிப்பதுபோல் தண்டட்டியைப் பிடித்துத் தொங்குவான். அந்தக் கணப் பொழுதில் ஆயா ரொம்பவும் உசாராய்த்தான் இருக்கும். சரவணன் ஆயாவின் காதைத் தொட்ட உடனே, ஆயா சரவணனின் கையோடு தனது கையையும் சேர்த்துப் பொத்தி, காது இழுபடாமல் காத்துக்கொள்ளும். அதே நேரம் சரவணன் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக ஆயா பொய் அழுகையும் அழும்.
‘ஆ.. தம்பிப்பய.... காத அத்துப்புட்டானே... காது போச்... காது போச்சே...’ ஆயாவின் அந்த நடிப்பினைக் கண்டு சரவணன் சிரிப்பான். தன் கைப்பிடியினையும் விட்டுவிடுவான்.
ஆயாவின் காது தப்பித்தது கண்டு மறுபடி எட்டிப் பிடிக்க முயல்வான். அப்போதும் கோபமோ ஆத்திரமோ கொள்ளாமல் அவனைக் கோழிக்குஞ்சாய் தன் மார்பில் புதைத்துக் கொண்டு முகத்துக்கு முகம் வைத்து சமாதானம் சொல்லும். ‘ஆயாவுக்குக் காது அறுந்து போச்சுன்னா... ஆயா மூளிக்காதா திரிவேன். என் ராசாமாருக இருக்க வீடு, மந்திரிமாருக வாழற எடம்... இங்கன ஒரு கெழவி மூளிக்காதோட திரிய ஆகாது அப்பனூ....’
ஆயாவின் அந்தத் தத்துவார்த்தமான பேச்சுகள், அப்போது எனக்கு உட்படப் புரியாது. ஆனாலும், ஆயா உயிரோடு இருக்க வேண்டும் என்பது மட்டும் புத்தியில் நின்ற காலம். அதனால் அவ்வப்போது ஆயாவுக்கு ஆதரவாய் நான்தான் குரல் கொடுப்பேன்.
‘தம்பி.. ஆயாவுக்குக் காது அந்து போச்சுன்னா ஆயா செத்துப்போகும்ப்பா...’ என்பேன். சாவு என்றால்தான் பயம் வரும் என்று, அந்த வயதில் கிடைத்த ஞானம். உடனே அதற்குப் பலனும் கிடைக்கும். தனம் மட்டும்தான் எதிர்க்கேள்வி கேட்கும்.
‘காது அந்துபோச்சுனா ஆராச்சும் செத்துப் போவாங்களா... அண்ணெ பொய்தான சொல்லுது. ஏனாயா? நீ... சாக மாட்டீல்ல?’ தனம் கண்களை உருட்டி உருட்டிப் பேசும்.
‘நீங்க மூணு பேரும் கொமருகளாகி, டாக்குட்டரு... கலெக்ட்டருன்னு வேலயப் பாத்து... தங்கமா சம்பாரிச்சு, கலியாணம் முடிச்சு, பேரப்பிள்ளைகளுக்கு ஆயா சேன ஊட்டி, அவகள சீராட்டிப் பாராட்டி... தொட்டி கட்டிப் போட்டு... ராராரோ பாடாம எனக்குச் சாவு இல்ல கண்ணு. யேம் பொண்ணு மக்கா...’ சொல்லி முடித்ததும், மூன்று பேரையும் ஒருசேரக் கட்டிக்கொள்ளும் ஆயா.
- தொடரும்
விவாதங்கள் (15)
Thangavel Pandian
கிராமங்களில் குழந்தை பிறந்தால் வயதில் மூத்தவர்களை வைத்து சேனை தொட்டு வைக்கும் பழக்கம் உண்டு
0 likesகிருஷ்ணன் பெரம்பூர்
ஆரம்பம் அசத்தல்.
0 likesWahidha Jain
Alaadhi yanadhu
0 likesBala Rajeshwari
ஆம் குழந்தை பிறந்தவுடன் முதலில்தரப்படுவது... சர்க்கரை நீரில் தங்கத்தை உரசி புகட்டுவோம்... ஆண் குழந்தைகளுக்கு பெண்கள் மூலம் கொடுக்க மாட்டார்கள்.. வீரம் இருக்காதாம்...
0 likesSeetha Lakshmi
Blessings to have avva
0 likesAmrutha P likes
Anonymoussir next episode varalai
0 likesAnbu V
coming soon coming soon .. innaiku date 19... aanal 18 June Kuda padikka mudiyalaye sir..
0 likesBhanumathi Venkatasubramanian
சேன என்பது குழந்தை பிறந்த உடன் அதன் நாக்கில் தொட்டு வைக்கப்படும் சீனி போன்ற இனிப்பு தண்ணீர்
0 likesUsha Sitaraman
குழந்தை பிறந்த உடன் பெரியவர்கள் முதலில் தரும் சர்க்கரை தண்ணீர் தான் சேனை.
1 likes