அத்தியாயம் 1
அவ்வாறு கூறிக் கொண்டே போனவள், “ஐயோ! உங்கள் தகப்பனாரைத் தெய்வமென்றுதான் கொண்டாட வேண்டுமே அன்றி, மனிதரென்று எண்ணுவதற்கே இல்லை. அவர் உங்களுடைய தகப்பனார்; நீங்கள் அவருடைய குமாரர் என்ற முறையில் நீங்கள் அவர் செய்த காரியத்தைப் பற்றி தோஷம் கற்பித்துப் பேசக்கூடாது.”
“அவர் வெந்நீர் அண்டாவிற்குள் இருந்தபோது, என்னுடைய புருஷர் அவர் இருந்ததைப் பார்த்து விடப் போகிறாரே என்று நான் மூடமதியினால் பெட்டியை வைத்து அண்டாவின் வாயை மூடினேனே, அப்போது அவர் மூச்சுத் திணறித் திக்குமுக்காடி மரண அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்திருக்கலாமே!”
“அப்படி இருக்கையில் வேறே யாராக இருந்தாலும், வேறே எதையும் கவனிக்காமல் தம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆவல் கொண்டு மேலே இருந்த பெட்டியைத் தள்ளிவிட்டு வெளியில் வந்திருப்பார்கள் அல்லவா!”
“இவர் அப்படிச் செய்யாமல், என் மானம் போவதைவிடத் தம்முடைய பிராணன் போவதே தக்கதென்று நினைத்து மரண அவஸ்தையைப் பொறுத்துக்கொண்டு தம்முடைய உயிரையே விட்டுவிட்டாரே! அவருடைய பெருந்தன்மையையும் வீரத்தையும் நான் என்னவென்று சொல்லுவேன்!”
“நீங்கள் அவருடைய வயிற்றில் உதித்தவர்கள். ஆகையால், அப்படிப்பட்ட சுத்த வீரத்தனம் உங்களிடமும் இல்லாமல் போகாது. ஆகையால், அவருடைய அரிய செய்கையைப் பற்றி நீங்கள் அவரைப் புகழ்ந்து மெச்சுவீர்கள் என்றே நினைக்கிறேன்” என்றாள்.
அவள் சொல்லிய வரலாற்றைக் கேட்டு வந்த நீலமேகம் பிள்ளை கண்ணீர் வடித்தபடி துயரமே வடிவாக மௌனமாய் உட்கார்ந்திருந்தார். லீலாவதி அன்றைய தினம் பொழுது விடிந்தது முதல் அந்த அகால வேளை வரையில் தண்ணீரும் அருந்தாமல் வாட்டமடைந்திருந்தது அன்றி, இறந்துபோன ஜெமீந்தாரின் உருவப் படத்தைக் கண்டு அவரது மரணத்தைப் பற்றி அளவற்ற துயரமடைந்து கலங்கி உருகி அழுதாள்.
ஆதலால், அவளது நிலைமை முற்றிலும் பரிதாபகரமாக இருந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க, நீலமேகம் பிள்ளையினது துரயம் முன்னிலும் ஆயிரமடங்கு பெருகியது.
தனது தந்தை கேவலம் சாதாரணமான ஒரு ஸ்திரீயை நாடி அலைந்து திரிந்து அபாயத்திற்கு ஆளாகிவிட்டாரே என்று அவர் அதுவரையில் நினைத்துத் தமது தந்தையைப் பற்றி இழிவாக எண்ணியிருந்த அபிப்பிராயம் சிறிதளவு மாறியது.
அவ்வளவு அபாரமான கட்டழகும் யௌவனமும் வாய்ந்த அப்ஸர ஸ்திரீபோல இருக்கும் அந்த வடிவழகி அந்தரங்கமான காதலும் பிரேமையும் கொண்டு நேசிக்கையில் அவளது விஷயத்தில் தமது தந்தை தமது மதியை இழந்து அவள் மீது மோகம் கொண்டது மன்னிக்கத்தக்கதே என்று எண்ணம் நீலமேகம் பிள்ளையின் மனதில் பட்டது.
அப்படிப்பட்ட சிலாக்கியமான பெண்ணைக் கண்டு, உலகத்தை நீத்த தவசிகள் கூட இச்சை கொள்வார். ஆதலால், தமது தந்தை அவளை நாடி நூலேணியின் வழியாக மேன்மாடத்துக்குச் சென்றது சர்வ சாதாரணமான செய்கை என்றே அவர் மதித்து, அவளையும், தனது தந்தையின் உருவத்தையும் மாறி மாறிப் பார்த்தவராயிருந்தார்.
லீலாவதி மேலும் பேசத் தொடங்கி, “நாங்கள் மைசூரிலிருந்து திரும்பி வந்து மாரியம்மன் கோவிலில் ஒரு ரகசியமான இடத்தில் குடியிருந்தோம்.”
“அப்போது என் புருஷர் வெண்ணாற்றங்கரையில் நாங்கள் அதற்குமுன் வசித்து வந்த பங்களாவிற்கு ஏதோ ஒரு காரணமாகப் போனவர் அவ்விடத்தில் வெந்நீர் அண்டாவிற்குள் இறந்து கிடந்த உங்கள் தகப்பனாருடைய பிரேதத்தைப் பார்த்து அவருடைய அடையாளத்தைக் கண்டுபிடித்துக் கொண்டதன்றி, எனக்கும் இவருக்கும் சிநேகம் உண்டென்று அதற்கு முன்பே ஒருவித சந்தேகம் கொண்டிருந்தார்.”
“ஆதலால், அவர் உடனே உண்மையை யூகித்து அறிந்து கொண்டவராய் என்னிடம் வந்து என்னை எவ்வளவு கொடுமையாக நடத்தினார் தெரியுமா? அதன்பிறகு அந்தப் பிரேதத்தை எடுத்து அதே பங்களாவின் பின்புறத் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்குள் அவர் படுத்தி வைத்தபாடு ஈசுவரனுக்கே தெரிய வேண்டும்.”
“பிரேதம் அடக்கம் செய்யப்பட்ட குழியில், அவர் ஏறிவந்த நூலேணியும் வைத்துப் புதைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் புதைத்த பிறகு என் புருஷர் நான் செய்த அந்தக் குற்றத்தை மன்னிப்பதாகச் சொல்லி, அதற்குப் பதிலாக, என்னை எப்படிப்பட்ட கேவலமான காரியங்களை எல்லாம் செய்யச் சொன்னார் தெரியுமா?”
“உங்கள் தகப்பனார் விஷயத்தில் நான் என் கற்பை இழந்த தவறுக்கு நான் மகா கொடிய தண்டனைகளை எல்லாம் அனுபவித்தாய்விட்டது. இனி ஒன்றும் மிச்சமே இல்லை. என் புருஷர் என் விஷயத்தில் செய்த அக்கிரமங்களை வாயில் வைத்துச் சொல்லவும் எனக்குக் கூசுகிறது” என்றாள்.
நீலமேகம் பிள்ளை, “ஓகோ! இப்போதுதான் உண்மை ஒரு மாதிரியாக விளங்குகிறது. உங்கள் புருஷர் உங்களை அவ்வளவு கொடுமையாக நடத்தி வதைத்தபடியால்தான் நீங்கள் நியாயாதிபதிக்குக் கடிதம் எழுதி அவரைக் காட்டிக் கொடுத்தீர்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அவர் எப்படிப்பட்ட இழிவான காரியத்துக்கும் துணியக்கூடிய மகா துஷ்ட மனிதரென்பதும் தெரிகிறது” என்றார்.
லீலாவதி நிரம்பவும் ஆக்கிரோஷமும் பதைபதைப்பும் அடைந்தவளாய், “ஆம் ஆம்; உண்மைதான். அவர் என்னை வேறு எந்த விதத்தில் உபத்திரவித்திருந்தாலும், அல்லது, அவர் என்னை வைது அடித்து, உதைத்துச் சித்திரவதை செய்திருந்தாலும் நான் அவர் மேல் அவ்வளவு ஆத்திரம்கொண்டிருக்கமாட்டேன்.”
“ஒரு பெண் பிள்ளை செய்யத்தகாத காரியத்தையும், பௌரஷமுள்ள ஒரு புருஷன் தன் பெண் ஜாதியை ஏவத்தகாத காரியத்தையும், நான் செய்ய வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். ஆகையால் அப்படிப்பட்டவர் எனக்குப் புருஷராக இருக்கத் தகுந்தவரல்ல என்றும் அவரிடம் நான் இருந்து வாழ்வது உசிதமானது அல்லவென்றும் நினைத்து நான் அந்தக் கடிதத்தை எழுதி ரகசியமாக அனுப்பி, போலீசார் அவரைப் பிடித்துக்கொண்டு போகும்படிச் செய்தேன்” என்றாள்.
நீலமேகம் பிள்ளை இரக்கமாகவும் உருக்கமாகவும் பேசத் தொடங்கி, “அம்மா! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி நியாயமானதா, உங்கள் புருஷருடைய கட்சி நியாயமானதா என்பதைப்பற்றித் தீர்மானம் செய்யும் யோக்கியதையை நான் வகித்துக்கொள்வது சரியல்ல.”
“அதுவுமன்றி, அந்த விஷயத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை ஆகையால், அதைப் பற்றிப் பேசுவதை இவ்வளவோடு விட்டு என் தகப்பனார் விஷயத்தில் நாம் இனிச் செய்ய வேண்டிய காரியத்தைப் பற்றிப் பேசுவதே நல்லது” என்றார்.
லீலாவதி, “இனி நாம் உங்கள் தகப்பனாருடைய விஷயத்தை மறைத்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை. நடந்த காரியங்களை எல்லாம் நடந்தபடியே நாம் வெளியிட்டு அவருக்கு ஆகவேண்டிய உத்தரகிரியைகளையும் ஒழுங்காக நடத்துவதே நலமென்று நினைக்கிறேன்.”
“அப்படிச் செய்வதனால், என்னுடைய பெயர் கெட்டுப் போகும். இருந்தாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இதனால் எனக்கு எப்படிப்பட்ட இழிவாவது அவமானமாவது ஏற்பட்டாலும் அதை நான் ஏற்றுக் கொள்வதே நியாயம்” என்றாள்.
உடனே நீலமேகம் பிள்ளை, “அம்மா! நீங்கள் வயசில் என்னைவிடச் சிறியவராக இருந்தாலும், எப்போது உங்களுக்கும் என் தகப்பனாருக்கும் சிநேகம் ஏற்பட்டதோ, இனி நான் உங்களை என்னுடைய தாயாக மதிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.”
“அவர்மேல் நீங்கள் எவ்வளவு ஆழ்ந்த பிரியம் வைத்திருந்தீர்கள் என்பதை நான் உங்களுடைய கடிதத்திலிருந்து நன்றாக அறிந்து கொண்டிருக்கிறேன். அவர் இறந்தபோனதைப்பற்றி உங்கள் மனம் எப்பாடுபடும் என்றும் நன்றாகத் தெரிகிறது.”
“அதன் உண்மையை நான் இப்போது என் கண் முன்பாகவே காண்கிறேன். அப்படியிருக்க இந்த நிலைமையில் நான் என்னலான உதவியைச் செய்து உங்களுடைய துயரத்தைப் போக்கி உங்களுக்கு எவ்வித அவமானமும் தூஷணையும் உண்டாகாமல் தடுப்பதே ஒழுங்கான காரியம். அப்படிச் செய்யாமல் உங்களிடம் வீண் ஆக்கிரோஷமும் குரோதமும் பாராட்டி உங்களை அவமானத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்குவது மனுஷத்தனம் ஆகாது.”
“ஆகையால், என் தகப்பனார் இறந்துபோய் விட்டார் என்ற விஷயத்தை மாத்திரம் நான் வெளிப்படுத்தி அவருடைய உத்தரகிரியைகளை நடத்துவதொன்றே முக்கியமான விஷயம். அவர் இறந்து போன வரலாற்றை எல்லாம் வெளிப்படுத்துவது அனாவசியமென்று நினைக்கிறேன்.”
“நான் உங்கள் விஷயத்தில் க்ஷமையோடு நடந்துகொள்ள விரும்புகிறது ஒரு பக்கமிருக்க, இந்த விவரத்தை எல்லாம் நான் வெளியிட்டால், என் தகப்பனாருடைய பெயருக்கும் யோக்கியதைக்கும் ஒருவித களங்கம் ஏற்படுமல்லவா?”
“அதைத் தடுப்பதற்காகவும் நாம் எச்சரிக்கையாக நடந்து கொள்வதோடு இந்த வரலாற்றை எல்லாம் கூடியவரையில் நாம் மறைத்து விடுவதே நல்லது. எல்லாவற்றிற்கும் நான் இதுவரையில் எனக்கு உதவியாக இருந்த அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கலந்து யோசனை செய்து அவருடைய புத்திமதிப்படி நடந்து கொள்ளலாம் என்று உத்தேசிக்கிறேன்” என்றார்.
அதைக்கேட்ட லீலாவதி, “சரி; உங்களுக்கு எது ஒழுங்காகப் படுகிறதோ, அதைச் செய்யுங்கள். அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த விஷயங்களை எல்லாம் நியாயாதிபதிக்கு அறிவித்து விசாரணை நடத்த வேண்டுமென்று பிரியப் பட்டாலும், நான் அதற்கு இணங்குகிறேன்.”
“இதனால் எனக்கு எப்படிப்பட்ட தண்டனையாவது கெடுதலாவது நேர்ந்தாலும், நான் அவைகளை நிரம்பவும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தடையில்லை” என்று உறுதியாகவும் முடிவாகவும் கூறினாள்.
அதைக்கேட்ட நீலமேகம் பிள்ளை, “அம்மா! நீங்கள் வேறு, என் சொந்தத் தாய் வேறென்று நான் எண்ணவில்லை. ஆகையால், அப்படிப்பட்ட அவமானமும் கெடுதலும் உங்களுக்கு நேருவதை நான் பார்த்துச் சகிக்கமாட்டேன்.”
“அதுவுமன்றி, ஓர் அன்னியருடைய சம்சாரத்தைக் கெடுத்தாரென்ற கெட்ட பெயர் என் தகப்பனாருக்கு வராதா? அப்படிப்பட்ட இழிவு ஏற்படும்படி நானே செய்யலாமா? நீங்கள் சொன்னதெல்லாம் உண்மையென்று நான் நம்புவதாக நான் ஏற்கெனவே உறுதி சொல்லிவிட்டேன்.”
“நான் என் தகப்பனார் விஷயத்தில் செய்யவேண்டிய ஒரு கடமையாக பாவித்து நான் வேறே இரண்டு வைத்தியர்களை வைத்துக் கொண்டு என் தகப்பனாருடைய சவத்தை ரகசியமாக வெளிப்படுத்திப் பரீட்சை செய்து ஒருவிதமாகத் திருப்தி செய்து கொள்ள உத்தேசிக்கிறேன். அதுவே போதுமானது.”
“அப்படி நாம் செய்துவிட்டால், அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் என்னால் இயன்றவரையில் சிபாரிசு செய்கிறேன். அவர் சகலமான நற்குணங்களும் வாய்ந்த மனிதர்; அவர் என்னுடைய சொல்லை மீற மாட்டார். ஆகையால், இந்த விஷயம் நியாய ஸ்தலத்துக்குப் போகுமோ என்ற கவலையே உங்களுக்கு வேண்டியதில்லை” என்று உறுதியாகக் கூறினார்.
உடனே லீலாவதி “சரி; அப்படியே செய்யலாம். இன்ஸ்பெக்டரிடம் இப்போதே போகலாமா? நானும் உங்களுடன் கூடவே வருகிறேன்'' என்றாள்.
நீலமேகம் பிள்ளை, “அப்படியே செய்யலாம். ஆனால், உங்களுடைய முகவாட்டத்தைப் பார்த்தால், நீங்கள் காலையிலிருந்து இன்னமும் சாப்பிடவில்லை போலத் தோன்றுகிறது; இவ்விடத்திலேயே கொஞ்சம் ஆகாரம் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு உடனே புறப்பட்டுப் போகலாம்'' என்றார்.
லீலாவதி:- நான் காலையிலிருந்து சாப்பிடவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும் பரவாயில்லை. நாம் இன்ஸ்பெக்டரிடம் போனபின் நான் அவ்விடத்திலிருந்து எங்களுடைய ஜாகைக்குப் போய்ச் சாப்பிட்டுக் கொள்ளுகிறேன். இப்போது அவசரமில்லை; புறப்படுங்கள் போகலாம் - என்றாள்.
உடனே இருவரும் புறப்பட்டு வெளியில் நடந்தனர்.
- தொடரும்
விவாதங்கள் (3)
- Padmavathi Raj likes
- Meena Nagarajan
லீலாவதி திருந்தி விட்டாள்.
0 likes - KS Mani
மீண்டும் இந்த கதையை படிப்பது தேன் பருகுவது போல் உள்ளது. 😄
1 likes